மு.க.ஸ்டாலின்

“இந்த நாளை மறக்க முடியுமா? என் கையில் இருப்பது மிசா தழும்பு” - மு.க.ஸ்டாலின் உணர்ச்சிகர பேச்சு!

இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ‘மிசா’ சிறைவாச நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

“இந்த நாளை மறக்க முடியுமா? என் கையில் இருப்பது மிசா தழும்பு” - மு.க.ஸ்டாலின் உணர்ச்சிகர பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ‘மிசா’ சட்டத்தில் கைது செய்யப்பட்டு, ஓராண்டு காலம் சிறையில் அடைக்கப்பட்ட நாள் இன்று.

இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியை நிறைவு செய்து பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ‘மிசா’ சிறைவாச நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது :

“என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் இந்த நாள். இதே பிப்ரவரி 1ஆம் தேதி தான் 45 ஆண்டுகளுக்கு முன்னால் அதாவது 1976 ஆம் ஆண்டு அவசர நிலை பிரகடனம் சட்டத்தால் நான் கைது செய்யப்பட்ட நாள்.

ஒரு நாள் அல்ல ஒரு மாதம் அல்ல, ஓராண்டு காலம் நான் சென்னை மத்திய சிறையில் இருந்திருக்கிறேன். அப்போது எனக்கு வயது 23. அவசரநிலைப் பிரகடனத்தால் இந்தியா முழுதும் நெருக்கடி நிலை அமல்படுத்த நேரத்தில், அதை எதிர்த்து குரல் கொடுத்த ஒரே தலைவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் தான், திராவிட முன்னேற்றக் கழகம் தான்.

அப்போது டெல்லியிலிருந்து இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் சில தூதுவர்களை அனுப்பி வைத்தார்கள். வந்த தூதுவர்கள் கோபாலபுரத்திற்கு வந்தார்கள். தலைவருடைய இல்லத்தில் தலைவரைச் சந்தித்து, “உங்கள் ஆட்சி நீடிக்க வேண்டுமென்றால் அம்மையார் இந்திரா காந்தி அவர்கள் கொண்டு வந்த அவசர நிலைப் பிரகடனத்தை, நீங்கள் ஆதரிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் அதை எதிர்க்கக் கூடாது. நீங்கள் எதிர்த்தால் அடுத்த விநாடி உங்கள் ஆட்சி கலைக்கப்படும்” என்றார்கள்.

தலைவர் கலைஞர் அவர்கள் சிரித்துக்கொண்டே, “நான் ஈரோட்டுச் சிங்கம் - பகுத்தறிவு பகலவன் - தந்தை பெரியார் அவர்களால் உருவாக்கப்பட்ட காஞ்சித் தலைவன் அண்ணா அவர்களால் வளர்க்கப்பட்டவன். என் உயிரே போனாலும் ஜனநாயகத்திற்கு விரோதமான அவசர நிலை பிரகடனத்தை ஆதரிக்க முடியாது. அதை எதிர்த்தே தீருவேன்” என்று வந்த தூதுவர்களிடத்தில் சொல்லி அனுப்பினார்.

அடுத்த நாள் சென்னை கடற்கரையில் தமிழ்ப் பெருங்குடி மக்கள் அத்தனை பேரையும் அழைத்து, மேடையில் தலைவர் கலைஞர் அவர்கள் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்து நிறைவேற்றினார்கள்.

“அம்மையார் இந்திரா காந்தி கொண்டு வந்த அவசர நிலை பிரகடனத்தை நாங்கள் எதிர்க்கிறோம். அதை நாங்கள் ஆதரிக்க முடியாது. அந்த நெருக்கடி நிலையைப் பயன்படுத்தி இந்திய நாட்டில் இருக்கும் பல்வேறு தலைவர்களை கைது செய்து சிறையில் அடைத்து வைத்திருக்கிறார்கள். அத்வானி, வாஜ்பாய், ஜார்ஜ் பெர்னாண்டஸ் போன்ற தலைவர்களை கைது செய்து சிறையில் அடைத்து வைத்திருக்கிறார்கள். அத்தனை தலைவர்களையும், உடனடியாக நீங்கள் விடுதலை செய்திட வேண்டும்” என்ற வேண்டுகோளை வைத்து தீர்மானத்தை நிறைவேற்றினார்.

தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அடுத்தநாள் தமிழ்நாட்டில் தி.மு.கழகத்தின் ஆட்சி கலைக்கப்பட்டது. கலைக்கப்பட்ட அடுத்தநாள் காவல் துறையினர் கோபாலபுரத்திற்கு வருகிறார்கள். தலைவர் கலைஞர் அவர்களைச் சந்தித்தார்கள்.

கலைஞர் எழுந்து நின்று, “நான் தயார் என்னைக் கைது செய்து அழைத்துச் செல்லுங்கள் என்று சொல்லுகிறார்“. நாங்கள் உங்களைக் கைது செய்ய வரவில்லை. உங்களுடைய மகன் ஸ்டாலினைக் கைது செய்ய வந்திருக்கிறோம் என்று காவல்துறையினர் சொல்கிறார்கள்.

அப்போது தலைவர் கலைஞர் அவர்கள், “அவன் ஊரில் இல்லை. வந்தவுடன் அனுப்பி வைக்கிறேன்” என்று கூறியுள்ளார். அடுத்தநாள் மதுராந்தகத்தில் ‘முரசே முழங்கு’ என்ற நாடகத்தை முடித்து விட்டு நான் சென்னைக்கு வருகிறேன். இந்தச் செய்தி கேள்விப்பட்டு வேகவேகமாக வருகிறேன்.

வந்தவுடன் தலைவர் கலைஞர் அவர்கள் உடனடியாக கமிஷனருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு என் மகன் வந்துவிட்டான். அழைத்துச் செல்லுங்கள் என்று சொல்ல காவல்துறையினர் வருகிறார்கள். என்னுடைய மனைவி துர்கா கலக்கத்தோடு இருக்கிறார். காரணம், திருமணமாகி 5 மாதம் தான் ஆகிறது. “கவலைப்படாதே இதுவரை கிடைக்காத சிறை அனுபவம் எனக்கு கிடைத்திருக்கிறது” என்று அவருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு நான் சிறைக்கு சென்றேன்.

நாங்கள் சிறைக்குச் சென்ற தேதியிலிருந்து பல கொடுமைகளுக்கு நாங்கள் ஆளாக்கப்படுகிறோம். அங்கு இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்களை கண்மூடித்தனமாக காவலர்கள் தாக்குகிறார்கள்.

நான் மயங்கிய நிலையில் கீழே விழுந்து படுத்திருக்கிறேன். பூட்ஸ் கால்களால் என் வயிற்றின் மீது ஏறி என்னை மிதிக்க முயற்சிக்கிறார்கள். அப்போது தியாக மறவன் - என்னுடைய ஆருயிர் அண்ணன் சிட்டிபாபு அவர்கள் துடிதுடித்து என்னை அடிக்க வருபவர்களை கை எடுத்து கும்பிட்டு, என் மீது படுத்து நான் வாங்கயிருந்த அத்தனை அடிகளையும் அவர் வாங்கிக் கொள்கிறார்.

அவருக்குப் பலத்த காயம் ஏற்படுகிறது. அவரை மோசமான நிலையில் மருத்துவனைக்கு நாங்கள் அனுப்பி வைக்கிறோம். அறுவைச் சிகிச்சை நடைபெற்றது.

அண்ணன் சிட்டிபாபு அவர்கள் இறந்துவிட்டார் என்ற செய்தி எங்களுக்குக் கிடைக்கிறது. அதைக் கேட்ட நாங்கள் கதறிப் புலம்புகிறோம். அவர் உடலைப் பார்க்க முடியவில்லை. அந்த வாய்ப்பை இழந்தோம்.

அதைத்தான் இப்போது 2021 பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி நினைத்துப் பார்க்கும் சூழ்நிலையில் உங்கள் முன்னால் நான் நின்று கொண்டிருக்கிறேன்.

இன்றைக்கும் பல போராட்டங்களில் பங்கேற்று கைது செய்யப்படும்போது, அடையாளம் காட்டச் சொல்லும் போது மிசாத் தழும்பு என்று கூறி எனது கையில் இருக்கும் தழும்பைக் காட்டுவேன்.

50 ஆண்டுகளை இந்த இயக்கத்தில் ஒப்படைத்துக் கொண்டு, உழைத்துக் கொண்டிருக்கும் ஸ்டாலின்தான் உங்களுடைய குறைகளைக் கேட்க வந்திருக்கிறான். அதை நீங்கள் புரிந்து கொண்டு, உள்வாங்கிக்கொண்டு வந்திருக்கிறீர்கள்." என உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories