மு.க.ஸ்டாலின்

சசிகலா காலருகே ஊர்ந்து முதல்வரானது உண்மையா இல்லையா? இதற்கு பதில் சொல்லுங்கள் பழனிசாமி! - மு.க.ஸ்டாலின்

தோற்கப் போகிறோம் என்ற பயத்தில், டெபாசிட் வாங்க வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் அதிமுக அரசை மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

சசிகலா காலருகே ஊர்ந்து முதல்வரானது உண்மையா இல்லையா? இதற்கு பதில் சொல்லுங்கள் பழனிசாமி! - மு.க.ஸ்டாலின்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நேற்று (29-1-2021) மாலை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், வேலூர் மாநகர தி.மு.க. அலுவலகத்தில் பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரது திருவுருவச் சிலைகளைத் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

கழகத் தலைவர் அவர்கள் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:

வேலூர் மாநகரத்தில் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் திருவுருவச்சிலை மற்றும் கலைஞர் அவர்களை நமக்கெல்லாம் உருவாக்கி தந்த பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் திருவுருவச்சிலையும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வேலூர் மாநகரத்தில் அறிஞர் அண்ணாவிற்கும், கலைஞர் அவர்களுக்கும் சிலை அமைக்கப்படுவது என்பது மிகவும் பொருத்தமான ஒன்றாக அமைந்திருக்கிறது.

வேலூர் என்பது வீரம், விவேகம், சுதந்திரம், விடுதலை - இதற்கு பெயர் போன ஊர். அப்படிப்பட்ட அடையாளமாக இருக்கும் இந்த ஊரில் இன்றைக்கு பொருத்தமான வகையில், பேரறிஞர் அண்ணா அவர்களின் சிலையும், கலைஞர் அவர்களின் சிலையும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. பேரறிஞர் அண்ணா நமக்கு கிடைக்காமல் இருந்திருந்தால், அவர் பிறந்திருக்காவிட்டால் இன்றைக்கு எந்த நிலையில் நாம் இருந்திருப்போம். கலைஞர் அவர்கள் நமக்கு கிடைத்திருக்காவிட்டால் நாம் என்ன நிலைக்கு ஆளாக்கப்பட்டிருப்போம்.

இன்றைக்கு நெஞ்சை நிமிர்த்தி நாமெல்லாம் தமிழர்கள் என்று தன்மானத்தோடு, சுயமரியாதை உணர்வோடு, நடைபோட்டு கொண்டிருப்பதற்கு காரணமாக இருந்தவர்கள் பேரறிஞர் அண்ணா அவர்களும், கலைஞர் அவர்களும் தான். ஈராயிரம் ஆண்டுகள் அன்னைத் தமிழகம் தவமிருந்து பெற்றெடுத்த தலைமகன். சிங்க நடையும், சிங்கார தெள்ளு நடையும், பொங்குக் கடல் நடையும், புரட்சிக் கவி நடையும், தன்னுடைய உரைநடையால் கண்ட கோமான்.

தம்பிமார் படை மீது விழி நோக்கி வெற்றி கண்ட பூமான். பூமிப்பந்தில் தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களோ அவர்கள் நெஞ்சமெல்லாம் தங்க சிம்மாசனம் போட்டு வீற்றிருக்கும் நம்முடைய இதய மன்னன். வங்கக் கடலோரத்தில் ஆறடி சந்தனப் பேழையில் உறங்கியும் உறங்காமல் உறங்கி கொண்டிருப்பவர் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள்.

அவருக்கு பக்கத்தில் அவரால் உருவாக்கப்பட்டு, தம்பி என்று அன்போடு அழைக்கப்பட்ட நம்முடைய தலைவர் அவர்கள் உடலும் உறங்கிக் கொண்டிருக்கிறது. எனவே அப்படிப்பட்ட தலைவர்களுடைய திருவுருவச் சிலையை இன்றைக்கு நாம் திறந்து வைத்திருக்கிறோம். தகுதியுள்ள தலைவர்களுக்கு, தகுதியை பெற்றிருக்கும் நாம் இந்த சிலையை திறந்து வைத்திருக்கிறோம்.

ஆனால் நேற்று முன்தினம் ஒரு நினைவிடம் திறந்து வைக்கப்பட்டது. இந்த நேரத்தில் அதைப் பற்றி எடுத்துச் சொல்வது தேவையற்றதாக இருந்தாலும், நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக நான் சொல்கிறேன். மறைந்த அம்மையார் ஜெயலலிதா அவர்களுடைய நினைவிடம் திறந்து வைக்கப்பட்டது. நமக்கும் அவருக்கும் கொள்கைகளில் வேறுபாடுகள் மாறுபாடுகள் இருந்தாலும் நாம் அதை விமர்சிக்க தயாராக இல்லை. அது தேவையா? என்று கேள்வி கேட்பதற்கு நாங்கள் விரும்பவில்லை.

சட்டமன்றத்தில் இப்படி ஒரு முடிவு அறிவிக்கப்பட்ட நேரத்தில் நாங்கள் அதை எதிர்த்தும் பேசவில்லை, ஆதரித்தும் பேசவில்லை. காரணம் ஒரு தலைவர் மறைந்து விட்டால் அவர்களை மதிக்க வேண்டும் என்று நமக்கு கற்றுத் தந்தவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். எனவே, நமக்கு அது பற்றி கவலை இல்லை. ஆனால் அவர் மறைந்து ஏறக்குறைய 4 ஆண்டுகள் ஆகிவிட்டது. அவர் மறைந்த நேரத்தில், அவருக்கு பதிலாக அவர் வகித்த முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொண்டவர், இன்றைக்கு துணை முதலமைச்சராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள்.

ஏற்கனவே 2 முறை முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் பதவி விலக வேண்டிய அவசியம் ஏற்பட்ட நேரத்தில் அவரைத்தான் முதலமைச்சராக உட்கார வைத்தார்கள். அதேபோல அம்மையார் ஜெயலலிதா அவர்கள் இறந்தவுடன் பன்னீர்செல்வத்தைத் தான் முதலமைச்சராக உட்கார வைத்தார்கள்.

ஆனால் திடீரென்று ஒருநாள் அவருடைய பதவி பறிக்கப்பட்டது. அதற்குக் காரணம், சட்டமன்றத்தில் எதிர் வரிசையில் அமர்ந்திருந்த எதிர்க்கட்சித் தலைவரான என்னைப் பார்த்து சிரித்தார் என்றார்கள். சிரித்த காரணத்தினால் அவருடைய பதவி பறிக்கப்பட்டது. அதற்குப் பிறகு தானே அந்தப்பதவியில் உட்காரப்போவதாக அறிவித்தார்கள் சசிகலா அவர்கள். மத்திய அரசின் அனுமதிக்காக ஆளுநர் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் உச்ச நீதிமன்றத்திலிருந்து சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்தது. அம்மையார் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேருக்கும் தண்டனை. 4 ஆண்டு சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டது. அம்மையார் ஜெயலலிதா அவர்கள் மறைந்துவிட்டார். அதனால் அவர் தண்டனை அனுபவிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் குற்றம் குற்றம் தான்.

அவர் உயிரோடு இருந்திருந்தால் நிச்சயம் சசிகலாவுடன் தண்டனை பெற்று 27ஆம் தேதி தான் விடுதலையாகி வெளியே வந்திருப்பார். அவ்வாறு தீர்ப்பு வந்தவுடன், முதலமைச்சராக பதவியேற்க இருந்த சசிகலா அவர்கள் அடுத்து யாரை முதலமைச்சராக உட்கார வைக்கலாம் என்று கூவத்தூரில் யோசித்துக் கொண்டிருந்தபோது, திடீரென்று அவர் காலில் ஏதோ ஊர்ந்து வந்தது. அதற்கு மேல் நான் சொல்ல விரும்பவில்லை. அவ்வாறு சொன்னால் அவருக்கு கோபம் வந்துவிடும். அவர், தான் யாருடைய தயவிலும் முதலமைச்சர் ஆகவில்லை என்று சொல்லுவார்.

கலைஞர் முதலமைச்சரானபோது எம்.ஜி.ஆர். உள்ளிட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து தேர்ந்தெடுத்து கலைஞரை முதலமைச்சராக உட்கார வைத்தார்கள். ஆனால் பழனிசாமி முதலமைச்சர் ஆனது எப்படி என்பது நாட்டுக்கே தெரியும். இப்பொழுது கேட்கிறேன் பழனிசாமியைப் பார்த்து, “ஊர்ந்து வந்தது உண்டா? இல்லையா?” இதற்கு நீங்கள் பதில் சொல்லுங்கள்.

சசிகலா காலருகே ஊர்ந்து முதல்வரானது உண்மையா இல்லையா? இதற்கு பதில் சொல்லுங்கள் பழனிசாமி! - மு.க.ஸ்டாலின்

எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால் என்ன காரணத்திற்காக, அம்மையார் ஜெயலலிதா அவர்கள் இறந்த பிறகு ஓ.பி.எஸ். முதலமைச்சராக பதவியேற்று, பின் சசிகலா முதலமைச்சராக அறிவிக்கப்பட்டு, அதற்குப் பிறகு அவர் சிறைக்குச் சென்ற காரணத்தால் பழனிசாமி அவர்கள் முதலமைச்சராக உட்கார்ந்தார்.

அவ்வாறு அவர் உட்கார்ந்தவுடன் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் கட்சியை உடைக்க முயற்சித்தார். ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று 40 நிமிடம் தியானம் செய்தார். ஆன்மாவோடு பேசினார். “அம்மா உங்களுடைய மரணத்தில் மர்மம் இருக்கிறது” என்று சொன்னார். விசாரணை கமிஷன் வேண்டும் என்று கேட்டார். எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது தான் மறைந்தார். அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்த நேரத்தில் தான் மறைந்தார்.

பேரறிஞர் அண்ணா மறைந்தபோது அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில், அரசின் சார்பில் செய்திக்குறிப்பு காலையிலும் மாலையிலும் தெரிவிக்கப்பட்டது. அன்றைக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்தவர் சாதிக் பாட்சா அவர்கள். அவர் தான் ஒவ்வொரு நாளும் செய்தி கொடுப்பார். அதேபோல எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்த போது தான் மறைந்தார். அப்போது மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்தவர் ஹெச்.வி.ஹண்டே அவர்கள். காலையிலும் மாலையிலும் அவர் தான் செய்தி கொடுப்பார். அது மரபு.

ஆனால் ஜெயலலிதா உடல்நிலை ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில், என்ன உடல்நிலை? என்ன சிகிச்சை கொடுக்கப்பட்டது? என்ன மருந்து கொடுக்கப்பட்டது? என்ற செய்தி வரவில்லை. மாறாக காலையில் இட்லி சாப்பிட்டார் என்ற செய்தி தான் வந்தது. நான் வேடிக்கைக்காகச் சொல்லவில்லை. வேதனையோடு சொல்கிறேன். சாதாரணமாக ஒருவர் இறந்தாலே நாம் எவ்வாறு இறந்தார் என்று கேட்கிறோம். ஆனால் இறந்தது தமிழ்நாட்டின் முதலமைச்சர். அரசியல் ரீதியாக மாறுபாடுகள் வேறுபாடுகள் இருக்கின்றன. இருந்தாலும் நமக்கும் சேர்த்து அவர்தான் முதலமைச்சர்.

சட்டமன்றத் தேர்தலில் 1.1 சதவீதம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற காரணத்தினால் அவர் முதலமைச்சர். குறைந்த காரணத்தினால் நாம் எதிர்க்கட்சி. ஒரு முதலமைச்சருக்கே இந்த நிலைமை என்றால் நாட்டுக்கு என்ன நிலைமை என்பதைத்தான் பார்க்க வேண்டும். அந்த அம்மையார் மறைந்து கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் ஆகிவிட்டது.

தியானம் செய்து நீதி விசாரணை கேட்டார் ஓ.பி.எஸ். அவர்கள். அவரை சமாதானம் செய்வதற்காக ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த கமிஷன் அமைக்கப்பட்டு கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் ஆகிவிட்டது. 10 முறை நீதிபதி ஆறுமுகசாமி அவர்களுக்கு காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பல முறை விசாரணை செய்ய வேண்டும் என்று ஓ.பி.எஸ். அவர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள். ஒருமுறைகூட அவர் செல்லவில்லை. ஜெயலலிதாவின் படத்தை பாக்கெட்டில் வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு அமைச்சரும் அவரது படத்தை தங்கள் மேசையில் வைத்திருக்கிறார்கள். அம்மா ஆட்சி என்று சொல்லி நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அந்த மரணத்திற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் நினைவிடத்தை திறக்க என்ன யோக்கியதை இருக்கிறது? என்ற கேள்வியைத் தான் கேட்க விரும்புகிறேன். இன்னும் 3 மாதங்களில் தேர்தல் வரப்போகிறது. வரக்கூடிய தேர்தலில் நிச்சயம் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டு திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையில் தான் ஆட்சி அமையப்போகிறது. நீங்கள் முடிவு செய்துவிட்டீர்கள்!

தோற்கப் போகிறோம் என்ற பயத்தில், டெபாசிட் வாங்க வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நம்முடைய பொதுச் செயலாளர் அவர்கள் எடுத்துச் சொன்னார்கள். நம்முடைய தேர்தல் பிரச்சாரத்தை பொறுத்தவரையில் இன்றைக்கு இருக்கும் சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் வியூகம் வகுத்து, பல்வேறு கட்டங்களை நிறைவேற்றி அதன் மூலமாக நமது பிரச்சாரத்தை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறோம்.

கொரோனா காலம், மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்துக் கொண்டிருந்த காலம். அப்படிப்பட்ட ஒரு நேரத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் 10 ஆண்டுகாலம் ஆட்சியில் இல்லை. ஆட்சியில் இல்லை என்றாலும் நாம் தான் ஆட்சியில் இருக்கிறோம் என்ற அந்த உணர்வை மக்களிடத்தில் செலுத்தினோம்.

‘ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி, அதன் மூலமாக வாழ்வாதாரத்தை இழந்து தவித்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு வேண்டிய வசதிகளை, நிவாரணப் பொருட்களை கொண்டு சென்று கொடுத்தோம். உயிரையே பணயம் வைத்து கொரோனா காலத்தில் மக்களை சந்தித்த ஒரே இயக்கம், நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் தான்.

இந்தியாவில் மட்டுமல்ல, இந்த உலகத்திலேயே வேறு எந்த கட்சியும் அவ்வாறு செய்யவில்லை. அதைத் தொடர்ந்துதான் இன்றைக்கு தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கின்ற காரணத்தினால் பல்வேறு கோணங்களில் நம்முடைய பிரச்சாரத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். மக்களுடைய அடிப்படை பிரச்சினைகளை ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் தீர்த்து வைப்போம். அதை தீர்த்து வைப்போம் என்ற அந்த உறுதியை தந்து இந்தப் பயணத்தை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறோம்.

நான் கலைஞருடைய மகன். ‘சொல்வதைத் தான் செய்வேன். செய்வதைத் தான் சொல்வேன்‘. முதலமைச்சரான மறுநாள் அந்தப் பெட்டியைத் திறந்து, மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம். இது அண்ணாவின் மீது ஆணை. கலைஞர் மீது ஆணை. விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்.

இவ்வாறு கழகத் தலைவர் அவர்கள் உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories