மு.க.ஸ்டாலின்

“தனிமனிதராக இல்லாமல் தத்துவத்தின் மனிதராக இருந்திருக்கிறார் இளவேனில்” - மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி!

“முத்தமிழறிஞர் கலைஞரின் இதயத்தைத் தொட்ட எழுத்துக்குச் சொந்தக்காரர் எழுத்தாளர் இளவேனில்” என திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

“தனிமனிதராக இல்லாமல் தத்துவத்தின் மனிதராக இருந்திருக்கிறார் இளவேனில்” -  மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நேற்று (27-01-2021) மாலை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை – மயிலாப்பூரில் நடைபெற்ற, மறைந்த எழுத்தாளர் இளவேனில் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்று, அவரது திருவுருவப் படத்தைத் திறந்து வைத்து உரையாற்றினார்.

கழகத் தலைவர் அவர்கள் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:

நம்முடைய எழுத்தாளர் இளவேனில் அவர்களுடைய படத்திறப்பு விழா இன்று நடந்து கொண்டிருக்கிறது. அவரது திருவுருவப் படத்தைத் திறந்து வைத்து, உங்களோடு சேர்ந்து அவருக்குப் புகழஞ்சலி செலுத்துவதற்காக, நான் உங்கள் முன்பு நின்று கொண்டிருக்கிறேன்.

''வாளோடும் தேன்சிந்தும்

மலரோடும் வந்திருக்கும்

நானோர் கோபாக்கினி

நானோர் இளவேனில்" - என்று தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்ட கவிஞர் இளவேனில், படமாக இன்று இருக்கிறார்.

அவருடைய திருவுருவப்படத்தைப் திறந்து வைக்கும் போது, என்னுடைய நினைவுகள் முப்பது ஆண்டுகளுக்கு பின்னால் செல்கின்றன. 1996-ஆம் ஆண்டு திருச்சியில் நடந்த திருப்புமுனை மாநாட்டில் திராவிட இயக்க வரலாற்றுக் கண்காட்சியை நடத்த வேண்டும் என்று தலைவர் கலைஞர் அவர்கள் எங்களுக்கு உத்தரவிட்டார்கள். அப்போது இணைந்து, பக்கபலமாக இருந்து, அந்தக் கண்காட்சி வெற்றிகரமாக அமையுமாறு பணியாற்றியவர்தான் கவிஞர் இளவேனில்!

அப்போது நான் இளைஞரணிச் செயலாளராக இருந்த காரணத்தால், அன்பகம் தான் என்னுடைய அலுவலகம். அங்கே அடிக்கடி வந்து இளவேனில் சந்திப்பார்கள். அப்போது அந்தக் கண்காட்சியைப் பற்றி, கழக வரலாறு, திராவிட இயக்க வரலாறு பற்றி மட்டுமின்றி, பொதுவுடமைக் கட்சியின் வரலாறு, மார்க்சிய சித்தாந்தம் ஆகியவற்றை எடுத்துச் சொல்லி, அதன்மீது எனக்கு ஈடுபாடு வரக் காரணமாக இருந்தார் என்றால் அது மிகையாகாது.

'முரசொலி'யில் அவர் தொடர்ந்து கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். முரசொலியில் இணைப்புப் புத்தகமாக வந்த 'புதையல்' பொறுப்பாசிரியராகவும் சில ஆண்டுகள் பணியாற்றினார்.

2008-ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் அவர்களின் கதை வசனத்தில் 'உளியின் ஓசை' என்ற திரைப்படத்தை இளவேனில் அவர்கள் இயக்கினார்கள். மக்கள் மத்தியில் பேசப்படக் கூடிய வகையில் திறம்பட அந்தத் திரைப்படத்தை உருவாக்கினார். எப்போது அவரைச் சந்தித்தாலும், தனது கருத்தை அழுத்தம் திருத்தமாக எடுத்துச் சொல்லும் ஆற்றலைப் பெற்றவராக இளவேனில் இருந்தார். யாராவது தவறாக எடுத்துக் கொள்வார்களோ என்று பார்க்காமல் - தன் மனதுக்குப் பட்டதை பட்டென்று சொல்லி விடுவார். அதைச் சிரித்துக் கொண்டே சொல்லி விடுவார்.

“தனிமனிதராக இல்லாமல் தத்துவத்தின் மனிதராக இருந்திருக்கிறார் இளவேனில்” -  மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி!

அதாவது அவர் வாளாகவும் மலராகவும் இருந்தார். அத்தகைய வாள்தான் இங்கே படமாக வைக்கப்பட்டுள்ளது! அத்தகைய மலர்தான் இங்கே படமாக வைக்கப்பட்டுள்ளது!

பொதுவாக தலைவர் கலைஞரிடம் நெருக்கம் பெறுவது சாதாரண காரியம் அல்ல. அரசியல் இயக்கங்களில் இருப்பவர்கள், அவர்கள் வகிக்கும் பொறுப்புகள் மூலமாக அந்த நெருக்கத்தைப் பெற்றுவிடுவார்கள். ஆனால் படைப்பாளிகள், நெருக்கம் ஆக வேண்டுமானால், அவர்களது படைப்பு கலைஞரையே அசைத்துப் பார்க்கக் கூடியதாக இருக்க வேண்டும். அந்த வகையில் கலைஞரின் இதயத்தைத் தொட்ட எழுத்துக்குச் சொந்தக்காரர் நம்முடைய இளவேனில் அவர்கள் என்றால் அது மிகையாகாது.

1993-ஆம் ஆண்டு 'ஆத்மா என்றொரு தெருப்பாடகன்' என்ற புத்தகத்தை எழுதிய இளவேனில் அவர்கள், அதற்கு அணிந்துரை வாங்குவதற்காக தலைவர் கலைஞர் அவர்களைச் சந்திக்கிறார். அந்தப் புத்தகம், கலைஞர் என்ற படைப்பாளியை, இளவேனிலை நோக்கி ஈர்த்தது.

“பேச முடியாதவர்களின் பெருமூச்சு - ஒரு பிரளயத்துக்கு முன்னறிவிப்பாகி விடுகிறது" - என்ற இளவேனிலின் வரிகளால் ஈர்க்கப்பட்ட கலைஞர் அவர்கள், அந்த நூலுக்கு அருமையான ஒரு அணிந்துரையை வழங்கினார்கள்.

'சமீப நாட்களில் இப்படி ஒரு எழுத்தை நான் படித்ததில்லை' என்று இளவேனிலிடம் கலைஞர் அவர்கள் சொன்னார்கள். சாதாரணமாக கலைஞர் அவர்கள் இப்படிச் சொல்லிவிடமாட்டார் என்பதை படைப்பாளிகள் அறிவார்கள்.

“இளவேனில், இனிமையும் குளிர்ச்சியும் நிறைந்த பெயர். ஆனால் இந்தப் பெயர் கொண்ட எழுத்தாளர், சுழன்றடிக்கும் சூறைக்காற்றாய் பூமியையே உருமாற்றவல்ல புயலோடு சேர்ந்த பெருவெள்ளமாய் எனக்குத் தோன்றுகிறார்" - என்று கலைஞர் அவர்கள் எழுதினார்கள். இளவேனில் யார் என்பதை இதைவிட முழுமையாகச் சொல்ல முடியாது. மூன்று வரிக்குள் அந்த எழுத்தாளனை வர்ணித்து எழுதினார் கலைஞர் அவர்கள்.

ஒரு படைப்பாளி விரும்புவது காசு, பணம், விருதுகளை விட சக படைப்பாளியின் பாராட்டைத்தான் முதலாவது விரும்புவான். அதுவும் கலைஞர் போன்ற மாபெரும் படைப்பாளி பாராட்டுகிறார் என்றால், கேட்க வேண்டுமா?

அந்தப் புத்தகத்தையும் கலைஞர் அவர்கள்தான் அறிவாலயத்தில் வெளியிட்டார்கள். இப்போது "கலைஞர் கருவூலம்" இருக்கும் இடம், முன்பு சிறு மண்டபமாக இருந்தது. அங்குதான் வெளியீட்டு விழா நடந்தது. அதில் கலைஞரை போற்றிப் பேசினார் இளவேனில். அதைக் கேட்ட கலைஞர் அவர்கள், “நான் உட்கார்ந்திருப்பது முதல் மாடி, ஆனால் ஏழாவது மாடியில் கொண்டு போய் உட்கார வைத்துவிட்டார் இளவேனில்” என்று பேசினார். ''நிறைய எழுதுவதற்காக இளவேனில் நீண்டகாலம் வாழ வேண்டும்" என்று வாழ்த்தினார் கலைஞர் அவர்கள்!

இருளைக்கிழித்தொரு புயற்பறவை, புயலுக்கு இசை வழங்கும் பேரியக்கம், காருவகி, இளவேனில் எழுத்தில், இங்கும் ஒரு பூ மலரும் - இப்படி ஏராளமான படைப்புகளை வழங்கினார் இளவேனில். திரைத்துறை மீது இளவேனிலுக்கு ஆர்வம் இருந்தாலும், அதற்கும் அடித்தளம் அமைத்தவர் கலைஞர் அவர்கள்தான். கலைஞர் அவர்கள் எழுதிய "சாரப்பள்ளம் சாமுண்டி" என்ற கதையை வைத்து உருவாக்கப்பட்டதுதான் 'உளியின் ஓசை' திரைப்படம். இளவேனில் இயக்கிய முதல் படம் அதுதான்.

“எனது கதையின் சாரத்தைக் காப்பாற்றும் விதத்தில் படத்தை மிகவும் கவனத்துடன் எடுத்துள்ளார்" என்று தலைவர் கலைஞர் அவர்களால் பாராட்டப்பட்டவர் இளவேனில்!

அதனால்தான் அவருக்கு தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற உறுப்பினர் பொறுப்பை கலைஞர் அவர்கள் வழங்கினார்கள். படைப்புக்கான குறள்பீட விருதையும் வழங்கினார்கள். அப்படிப்பட்ட இளவேனில் அவர்கள் இன்று நம்மிடையே இல்லை. அவர் இல்லையென்றாலும், அவரது எழுத்துக்கள் நம்மிடையே உலவிக் கொண்டிருக்கிறது; அவரது புத்தகங்கள் பாடமாக விளங்கிக் கொண்டிருக்கின்றன.

அந்தப் படைப்பாளி இறந்த பிறகும் அந்த படைப்பாளியைப் பற்றி பேசுவதற்கு மக்கள் இருக்க வேண்டும். அதுதான் அந்த படைப்பாளியின் வெற்றி. இளவேனில் வெற்றி பெற்றிருக்கிறார். தன்னைப் பற்றி நினைக்க நூற்றுக்கணக்கான மனிதர்களை உருவாக்கிவிட்டுத்தான் போயிருக்கிறார்.

கோவில்பட்டியில் இருந்து 11 வயது சிறுவனாக தனது வீட்டில் யாருக்கும் சொல்லிக் கொள்ளாமல் சென்னைக்கு வந்து 73 வயது வரை வாழ்ந்து காட்டியவர் இளவேனில் அவர்கள். இந்த மேடையில் அய்யா நல்லகண்ணு அவர்கள் இருக்கிறார்கள். தோழர் பாலகிருஷ்ணன் இருக்கிறார்கள். சகோதரர் தொல்.திருமாவளவன் இருக்கிறார். நான் இருக்கிறேன்!

வேறு வேறு இயக்கத்தைச் சேர்ந்தவர்களாக நாம் இருந்தாலும், இளவேனிலை நாம் போற்றுகிறோம் என்றால் இளவேனில் தனிமனிதராக இல்லாமல் தத்துவத்தின் மனிதராக இருந்திருக்கிறார் என்பதற்கு இதைவிட வேறு சாட்சி தேவையில்லை!

இங்கே படமாக இருக்கும் அவர் நமக்கு பாடமாக காட்சியளிக்கிறார். தந்தை பெரியார் - பேராசான் மார்க்ஸ் - அண்ணல் அம்பேத்கர் ஆகிய மூவரின் தத்துவங்களையும் முன்னெடுத்த ஒருவர்தான் இங்கு படமாக உள்ளார் என்று சொல்வதுதான் பொருத்தமானது!

இந்த நேரத்தில் இளவேனில் அவர்களின் வாழ்க்கைத் துணைவியார் பாக்கியலட்சுமி அவர்களுக்கும், அவரது மகன் சிந்து கார்க்கி, மகள் சுபா ஆகியோருக்கும் என்னுடைய இரங்கலைத் தெரிவித்து, வீரவணக்கத்தைச் செலுத்தி உரையை நிறைவு செய்கிறேன். நன்றி. வணக்கம்.

இவ்வாறு அவர் உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories