மு.க.ஸ்டாலின்

“அ.தி.மு.க ஆட்சியை அகற்றியே தீர்வதென்ற உறுதியுடன் பெருந்திரளாக கூடும் பெண்கள்" : மு.க.ஸ்டாலின் நம்பிக்கை!

மக்கள் கிராமசபைக் கூட்டங்களுக்கு, அ.தி.மு.க ஆட்சியை அகற்றியே தீர்வதென்ற உறுதியுடன் பெருந்திரளாகக் கூடும் பெண்களின் கூட்டம், உதயசூரியன் உதயமாவது நிச்சயம் என்பதை உணர்த்துவதாக மு.க.ஸ்டாலின் பேச்சு!

“அ.தி.மு.க ஆட்சியை அகற்றியே தீர்வதென்ற உறுதியுடன் பெருந்திரளாக கூடும் பெண்கள்" : மு.க.ஸ்டாலின் நம்பிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

திருத்தணி தொகுதிக்குட்பட்ட அம்மையார்குப்பம் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் கிராமசபைக் கூட்டத்தில் இன்று பங்கேற்ற தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “மக்கள் கிராமசபைக் கூட்டங்களுக்கு, அ.தி.மு.க. ஆட்சியை அகற்றியே தீர்வதென்ற உறுதியுடன் பெருந்திரளாகக் கூடும் பெண்களின் கூட்டம், உதயசூரியன் உதயமாவது நிச்சயம் என்பதை உணர்த்துகிறது.

முதலமைச்சர் என்ற தரம் மிக்க பதவியில் இருந்துகொண்tu பழனிசாமி அவர்கள் தரம்தாழ்ந்து, ஒருமையில் கொச்சைப்படுத்திப் பேசலாம். ஆனால், தி.மு.க.வினர் அப்படி பேசமாட்டோம். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் எங்களுக்கு அப்படி கற்பிக்கவில்லை" என உரையாற்றினார்.

இன்று (23-01-2021) காலை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், திருவள்ளூர் மாவட்டம் – திருத்தணி தொகுதிக்குட்பட்ட அம்மையார்குப்பம் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் கிராமசபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

மக்கள் கிராமசபைக் கூட்டத்தைத் தொடங்கி வைத்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:

“திருத்தணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அம்மையார்குப்பம் ஊராட்சியில் மக்கள் கிராமசபைக் கூட்டத்தை இப்பொழுது நாம் தொடங்கப் போகிறோம். இங்கு திரண்டு இருக்கும் பெண்களைப் பார்க்கும்போது, தமிழ்நாட்டில் இருக்கும் ஒட்டுமொத்தப் பெண்களும் இங்கு வந்து விட்டார்களோ என்று சந்தேகப்படும் அளவிற்கு இருக்கிறது.

இது என்ன கிராமசபைக் கூட்டமா? கிராம சபை மாநாடா? கிராம சபை பெண்கள் மாநாடா? என்று சந்தேகப்படும் அளவிற்கு பெண்கள் தான் அதிக அளவில் கூடி இருக்கிறீர்கள்.

நீங்கள் எல்லாம் மகிழ்ச்சியாக, பெருமையாக, பூரிப்பாக வந்திருக்கிறீர்கள். நீங்களெல்லாம் கிராம சபைக் கூட்டத்திற்கு வந்திருப்பது போலத் தெரியவில்லை. நம் வீட்டுத் திருமண நிகழ்ச்சிக்கு வந்திருப்பது போலத் தோன்றுகிறது. அவ்வாறு இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் உங்களையெல்லாம் நான் வருக… வருக… வருக… அன்போடு வரவேற்கிறேன்.

இந்த அம்மையார்குப்பம் ஊராட்சியில், இரண்டு நாட்களுக்கு முன்னால்தான் இந்த மக்கள் கிராமசபைக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று முடிவு செய்து, மாவட்டப் பொறுப்பாளர் மற்றும் நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் ஆகியோரிடம் எடுத்துச் சொன்னோம்.

இரண்டு நாட்களுக்குள் இந்த நிகழ்ச்சியை மிகச் சிறப்பான வகையில் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த நேரத்தில் என்னுடைய இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

திராவிட முன்னேற்றக் கழகம் இன்றைக்கு ஆட்சியில் இல்லை. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருப்பது, அ.தி.மு.க. அம்மையார் ஜெயலலிதா தலைமையில் ஆட்சி இருக்க வேண்டும் என்று நீங்கள் எல்லாம் முடிவு செய்து, அந்தக் கட்சியை வெற்றிபெற வைத்தீர்கள்.

“அ.தி.மு.க ஆட்சியை அகற்றியே தீர்வதென்ற உறுதியுடன் பெருந்திரளாக கூடும் பெண்கள்" : மு.க.ஸ்டாலின் நம்பிக்கை!

மிகப்பெரிய வெற்றி அல்ல, 1.1% வித்தியாசத்தில்தான் அவர்கள் வெற்றி பெற்றார்கள். ஜெயலலிதா முதலமைச்சராகப பொறுப்பேற்று, அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு, அதற்குப் பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் எப்படி இறந்தார் என்பது யாருக்கும் தெரியாது. இன்றும் மர்மமாகவே இருக்கிறது. சாதாரணமாக ஒருவர் இறந்து விட்டால் கூட, அந்த மரணத்திற்கு என்ன காரணம் என்று விசாரிக்கிறோம்.

ஆனால் இந்த நாட்டின் முதலமைச்சர் ஜெயலலிதா. அவர் எப்படி இறந்தார் என்பது இன்றும் மர்மமாகவே இருக்கிறது. அவர்கள் இறந்து 4 வருடங்கள் ஆகிவிட்டன.

அதற்கு விசாரணைக் கமிஷன் அமைத்தார்கள். விசாரணைக் கமிஷன் வேண்டும் என்று தி.மு.க.வில் இருப்பவர்கள் கேட்கவில்லை. அவ்வாறு கேட்டது, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள்தான். ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைத்து விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த விசாரணைக் கமிஷன் 8 முறை பன்னீர்செல்வத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள். ஆனால், இதுவரை ஒரு முறை கூட அவர் செல்லவில்லை.

ஆனால் இன்றைக்கும் அ.தி.மு.க.வில் இருக்கும் பழனிசாமியிலிருந்து, ஓ.பன்னீர்செல்வத்திலிருந்து, அமைச்சர்களிருந்து, எம்.எல்.ஏ.க்கள் எம்.பி.க்கள் வரை அனைவரும் பாக்கெட்டில் அந்த அம்மா படத்தை வைத்திருக்கிறார்கள். அவர்கள் அலுவலகங்களில் அம்மா படத்தை வைத்திருக்கிறார்கள். அம்மா ஆட்சி என்று சொல்லிக்கொண்டு ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அந்த அம்மையார் மரணத்திற்கான காரணத்தைக் கூட இதுவரை கண்டுபிடிக்கவில்லை. இன்னும் 4 மாதங்களில் ஆட்சி மாற்றம் வரப்போகின்றது. ஆட்சி மாற்றம் வந்தவுடன், முதல் வேலையாக, தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சருடைய மரணத்தில் உள்ள மர்மத்திற்குக் காரணமானவர்களைக் கண்டுபிடித்து, நாட்டு மக்கள்முன் நிறுத்தப்போகிறேன். அவ்வாறு நிறுத்தும் பணியை இந்த ஸ்டாலின் செய்யப்போகிறான். அதில் எந்த மாற்றமும் இல்லை.

இதனை அ.தி.மு.க தோழர்களும் நிச்சயமாக வரவேற்பார்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால் அவர்கள் தெய்வமாக, அம்மாவாக நினைத்துக் கொண்டிருந்த ஒரு தலைவர் அவர், ஒரு முதலமைச்சர் அவர்.

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது பல்வேறு சிறப்பான சாதனைகளை, திட்டங்களைச் செய்து கொடுத்திருக்கிறது. இந்த அம்மையார்குப்பம் என்பது கைத்தறி நெசவாளர்கள் நிறைந்திருக்கும் பகுதி.

கைத்தறி நெசவாளர்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கிய ஆட்சி கலைஞர் ஆட்சி என்பதை நீங்கள் மறந்து விட மாட்டீர்கள். அதேபோல விசைத்தறி நெசவாளர்களுக்கு 500 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கியதும் கலைஞருடைய ஆட்சி தான்.

தமிழ்நாடு நெசவாளர் நல வாரியம் அமைத்தது, கலைஞர் தலைமையில் இருந்த தி.மு.க ஆட்சிதான். கைத்தறி நெசவாளர்களுடைய கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ததும் தி.மு.க. ஆட்சிதான்.

தமிழ்நாடு கூட்டுறவு கைத்தறி நெசவாளர்கள் சங்கத்தில் ஓய்வூதியத் திட்டத்தைத் தந்ததும் தி.மு.க ஆட்சிதான். நெசவாளப் பெருமக்களுக்கு இவ்வாறு பல சாதனைகளை, கலைஞருடைய ஆட்சிக்காலத்தில் செய்திருக்கிறோம்.

அதுமட்டுமின்றி, 1953-1954-ஆம் ஆண்டுகளில் கைத்தறித் துணிகள் எல்லாம் தேங்கிக் கிடந்தன. அதனால் நெசவாளர்கள் குடும்பங்கள் சிக்கலில் தவித்துக் கொண்டிருந்தன. அப்போது அறிஞர் அண்ணா அவர்கள், “தேங்கிக் கிடக்கும் கைத்தறித் துணிகளை எல்லாம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நாங்களே தலையில், தோளில் சுமந்து தெருத் தெருவாகச் சென்று, வீதி வீதியாகச் சென்று விற்கப் போகிறோம். அந்தப் பணத்தைக் கொண்டு வந்து அவர்களுக்குக் கொடுப்போம்’ என்று கூறி பேரறிஞர் அண்ணா அவர்கள் கைத்தறித்துணிகளைத் தோளில் சுமந்து தெருவில் இறங்கி நடந்து விற்பனை செய்தார். கலைஞர் அவர்கள் தோளில் சுமந்து, தலையில் சுமந்து அந்தத் துணிகளை விற்று, ஒரு பெரிய புரட்சியைச் செய்தார்கள் என்பது வரலாறு.

அதுமட்டுமின்றி, நெசவாளர்களுக்கு பெரிய பிரச்சினை ஏற்பட்டபோது, தமிழ்நாடு முழுவதும் கஞ்சித்தொட்டி திறக்க வேண்டும் என்று தலைவர் கலைஞர் உத்தரவிட்டார்.

“அ.தி.மு.க ஆட்சியை அகற்றியே தீர்வதென்ற உறுதியுடன் பெருந்திரளாக கூடும் பெண்கள்" : மு.க.ஸ்டாலின் நம்பிக்கை!

அப்போது அ.தி.மு.க., ஆட்சியில் இருந்தது. நான் மதுரைக்குச் சென்றிருந்தேன். தலைவர் கலைஞர் அவர்கள் இந்த திருவள்ளூர் மாவட்டம் மேற்குப் பகுதியில் இந்த அம்மையார்குப்பம் பகுதியில் நடைபெறும் கஞ்சித்தொட்டி திறப்பு நிகழ்ச்சியில்தான் கலந்து கொள்ள முடிவு செய்தார். ஆனால் அவர் அம்மையார்குப்பம் பகுதி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக்கூடாது என்ற அரசியல் உள்நோக்கத்தோடு, அவர்கள் கலந்து கொள்ளக்கூடிய அதே இடத்தில் நாங்கள் பிரியாணி போடப் போகிறோம் என்று அ.தி.மு.க.வினர் அறிவித்தார்கள்.

ஒரு கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தார்கள். அப்போது கலைஞர் அவர்கள், “இதனால் கலவரம் ஏற்பட்டு, நெசவாளர்கள் பகுதியில் இருக்கும் மக்களுக்கு எந்தவிதப் பாதிப்பும் வந்துவிடக் கூடாது” என்று, ஜனநாயக மாண்பைக் காப்பாற்றிடும் வகையில், அன்றைக்கு அந்த நிகழ்ச்சியை ரத்து செய்தார்கள். இதுதான் வரலாறு.

கைத்தறி நெசவாளர்களுக்கு பல்வேறு நன்மைகளைச் செய்திருக்கும இயக்கம் தான் திராவிட முன்னேற்றக் கழகம். அதன் தலைவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்.

இப்போதும் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. நெசவாளர்களின் பிரச்சினைகளை முழுமையாக, திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தவுடன் தீர்த்து வைப்போம். தரம் மிக்க நூல் குறைந்த விலையில் வழங்கப்படும்.

நெசவுத் தொழிலை ஊக்குவிக்க, நெசவுத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த அனைத்து நடவடிக்கைகளும் நிச்சயமாக எடுக்கப்படும் என்ற உறுதியை நான் இவ்வேளையில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

முதலமைச்சராக இருக்கும் பழனிசாமி அவர்கள் - அவரை எடப்பாடி என்று சொல்வதில்லை. ஏன் என்றால், எடப்பாடி என்று ஒரு ஊர் இருக்கிறது.

நான் அண்மையில் அந்த எடப்பாடிக்குச் சென்றிருந்தேன். அங்கு இதேபோல மக்கள் கிராம சபைக் கூட்டத்தை நடத்தினேன். அப்போது அங்கிருந்த சில தாய்மார்கள் என்னிடத்தில், “ஐயா, பழனிச்சாமி என்று சொல்லுங்கள். எடப்பாடி என்று சொல்லாதீர்கள். எடப்பாடி என்று சொல்வது எங்களுக்குக் கேவலமாக இருக்கிறது“ என்று சொன்னார்கள். அதிலிருந்து, எடப்பாடி என்று சொல்வது இல்லை. பழனிசாமி என்றுதான் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

அந்த முதலமைச்சர் பழனிசாமி, ஊர் ஊராகச் சென்று தேர்தல் பிரச்சாரத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். தேர்தல் பிரச்சாரம் செல்லும் பழனிசாமி, தான் ஒரு முதலமைச்சர் என்பதையே மறந்து, மிகப்பெரிய பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே மறந்து, ‘நீ, வா, போ, உனக்கு என்ன தெரியும், உனக்கு என்ன புரியும், யார் நீ, என்ன சொல்கிறாய்’ என்று மரியாதை இல்லாமல் ஒருமையில் பேசும் ஒரு முதலமைச்சராக இருந்து வருகிறார்.

பழனிசாமியைப் பொறுத்தவரை, தரம் இல்லாமல் இருக்கலாம். தரங்கெட்டுப்போனவராக இருக்கலாம். அவர்களிடம் ஒட்டிக் கொண்டிருக்கும் முதலமைச்சர் பதவி ஒரு தரம் மிக்க பதவி. அதை மறந்து விடக் கூடாது. அந்தத் தரம் மிக்க பதவியை வைத்துக் கொண்டு, அவர் இவ்வாறு ஒருமையில் பேசுவது, கொச்சைப்படுத்திப் பேசுவது, விமர்சனம் செய்வது என்பது அவருடைய பதவிக்கு அழகல்ல.

அவரைப்போன்று என்னாலும் பேசமுடியும். அவரைப்போல இங்கு இருக்கும் நம் கழகத் தோழர்களை அழைத்துப் பேசச் சொன்னால் பல மடங்கு பேசுவார்கள். ஆனால் நாங்கள் நிச்சயமாகப் பேச மாட்டோம். கலைஞர் அவர்கள் எங்களுக்கு அவ்வாறு கற்பித்துத் தரவில்லை. ஜனநாயக முறைப்படிதான் பேச வேண்டும் என்று கற்றுத் தந்திருக்கிறார்கள்.

ஒரு முறை பேரறிஞர் அண்ணா அவர்கள் உதாரணமாக ஒன்றைக் கூறினார்.

ஒரு யானைப் பாகன் யானையைக் குளத்தில் குளிப்பாட்டி விட்டு, அழைத்து வந்து கொண்டிருந்தான். அப்போது ஒரு சாக்கடையில் புரண்ட பன்றி எதிரில் வந்து கொண்டிருக்கிறது. அவ்வாறு எதிரில் வந்த பன்றியை யானை பார்க்கிறது. பார்த்தவுடன் அந்த யானை கொஞ்சம் ஒதுங்குகிறது. அப்போது அந்தப் பன்றி, யானையைப் பார்த்து, “பயந்து ஒதுங்குகிறது” என்று சொன்னது.

அவ்வாறு யானை ஒதுங்கியதற்கு என்ன காரணம்? பன்றியின் அருகில் சென்றால், தம் மீது சேறு ஒட்டிக் கொள்ளுமே என்பதற்காக, பன்றியை விட்டுச் சற்று விலகி செல்கிறதே அல்லாமல், பன்றிக்குப் பயந்து கொண்டு அல்ல.

அவ்வாறு, முதலமைச்சராக இருக்கும் பழனிசாமி ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார். அதற்காக நாமும் பேச வேண்டிய அவசியமில்லை. எனவே இந்த அளவிற்குக் கேடுகெட்டத்தனமாக, எதைப்பற்றியும் கவலைப்படாமல், ஆத்திரத்தின் உச்சியில், 4 மாதங்களில் பதவி போகப்போகிறது என்ற விரக்தியில் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார். நாம் அதைப்பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பில் இருந்த போதும், இப்போது ஆளும் அ.தி.மு.க. ஆட்சியில் இருக்கும்போதும் இருக்கும் விலைவாசி வேறுபாடுகள் உங்களுக்குத் தெரியும்.

உதாரணமாக, இன்றைக்கு ஒவ்வொரு குடும்பமும் குறைந்தபட்சம் 4 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் ரூபாய் வரையில் அதிகமான செலவு செய்ய வேண்டிய ஒரு சூழல் ஏற்பட்டிருக்கிறது. காரணம் விலைவாசி விண்ணை முட்டும் வகையில் விஷம் போல ஏறிக்கொண்டு இருக்கிறது.

தி.மு.க ஆட்சி இருந்தபோது பால் விலை 28 ரூபாய். இப்போது அ.தி.மு.க ஆட்சியில் 40 ரூபாய்.

கேஸ் சிலிண்டர் விலை தி.மு.க ஆட்சியில் 275 ரூபாய். இப்பொழுது 750 ரூபாய். பெட்ரோல் விலை ஒரு லிட்டர், தி.மு.க ஆட்சியில் 22 ரூபாய். மாநில அரசின் வரியை விலக்கிக்கொண்டு, பெட்ரோல் விலையை நாம் குறைத்தோம். ஆனால் அ.தி.மு.க ஆட்சியில் 49 ரூபாய் வரியைப் போட்டிருக்கிறார்கள்.

அதேபோல டீசல் விலை நம் ஆட்சிக்காலத்தில் 16 ரூபாய். மாநில அரசின் வரியைக் குறைத்து, டீசல் விலையைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தோம். இப்போது இருக்கும் அ.தி.மு.க. ஆட்சியில் 42 ரூபாய் வரி விதிக்கப்பட்டு, விலை கடுமையாக உயர்ந்து கொண்டிருக்கிறது என்பதுதான் வேதனையாக இருக்கிறது.

பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்கள், காய்கறிகள், தங்கத்திற்கு விதிக்கப்பட்டிருக்கும் ஜி.எஸ்.டி., தாலி நகைகளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் விற்பனைவரி, வெள்ளி நகைகளுக்கு விதிக்கப்பட்டு இருக்கும் வரி, மணல் விலை, சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்கள் விலை, கார்களுக்குப் போடப்பட்டிருக்கும் சுங்கவரி, ரயில் கட்டணம், பேருந்துக் கட்டணம், மின்கட்டணம், கேபிள் கட்டணம், இதன் மூலம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 4 ஆயிரம் ரூபாயில் இருந்து கிட்டத்தட்ட 50 ஆயிரம் ரூபாய் வரையில் அதிகமான செலவு செய்யவேண்டிய ஒரு சூழலை இந்த அ.தி.மு.க அரசும், மத்தியில் இருக்கும் பா.ஜ.க அரசும் ஏற்படுத்தியிருக்கிறது.

இதைப்பற்றி எல்லாம் பழனிசாமி கவலைப்படவில்லை. மத்தியில் இருக்கும் மோடியும் கவலைப்படவில்லை.

பக்கம் பக்கமாக அறிக்கை கொடுக்கிறார்கள். இன்றைக்கு எல்லாப் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும், எப்.எம்.களிலும், சமூக வலைதளங்களிலும் 1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விளம்பரம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

விளம்பரம் கொடுக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. உங்கள் கட்சியின் சார்பில் விளம்பரங்கள் கொடுத்தால் அதற்கு நாங்கள் கேள்வி கேட்க மாட்டோம். ஆனால் அரசாங்கத்தின் பணத்தை எடுத்து இன்றைக்கு பக்கம் பக்கமாக நாள்தோறும், கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இது யார் வீட்டுப் பணம்? உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? நம்முடைய பணம். நம்முடைய பணம் என்றால், நாம் இந்த அரசாங்கத்திற்கு வரி செலுத்துகிறோம். அந்த வரி அரசாங்கத்திற்குச் செல்கிறது. நம்மிடத்திலிருந்து வாங்கும் வரியைப் பயன்படுத்தி அரசாங்கம் திட்டங்களைத் தீட்ட வேண்டும். அந்த வரியைப் பயன்படுத்தி மக்களுக்குப் பயன்படும் வகையில் சாதனைகளைச் செய்ய வேண்டும். ஆனால் இன்றைக்கு நாம் தரக்கூடிய வரிப் பணத்தை எடுத்து, அரசாங்கத்தின் சார்பில் கட்சிக்கு விளம்பரம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

புயல் நிவாரண நிதி கேட்டால், நிதி இல்லை என்கிறார்கள். விவசாயிகள் செத்து மடிகிறார்கள். அவர்களுடைய கடனைத் தள்ளுபடி செய்யுங்கள் என்று கேட்டால், பணம் இல்லை என்கிறார்கள். ஓய்வூதியம், முதியோர் உதவித்தொகை உடனே வழங்குங்கள் என்று கேட்டால், பணம் இல்லை என்கிறார்கள். அரசு ஊழியர்களுக்கு சம்பள பாக்கி இருக்கிறது, போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத்தை இந்த அரசு தர மறுக்கிறது. ஆனால் அதற்கெல்லாம் வக்கில்லாமல் இந்த அரசாங்கம் தொடர்ந்து விலைவாசியை உயர்த்திக் கொண்டிருக்கிறது.

அதுமட்டுமின்றி, மக்களைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாத நிலையில் இந்த அரசு இருந்து கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட கொடுமையான இந்த 10 ஆண்டு கால ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்.

நீங்கள் எல்லாம் ஒரு முடிவோடு வந்திருக்கிறீர்கள். நீங்கள் எல்லாம் இங்கு அமைதியாக, அடக்கமாக கட்டுப்பாடாக, இருக்கும் காட்சியைப் பார்க்கின்றபோது நிச்சயமாக, உறுதியாக 4 மாதங்களில் தமிழ்நாட்டில் நம்முடைய உதய சூரியன் உதிக்கத் தான் போகின்றது என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

இருக்கும் கூட்டத்தைப் பார்க்கும்போது எல்லோரையும் பேச வைக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால் அது நடக்காத காரியம்.

இந்த அம்மையார்குப்பம் ஊராட்சியில் நெசவாளர் பிரச்சினை அதிகமாக இருக்கும். அதை மறுக்க முடியாது. அடுத்தது குடிநீர்ப் பிரச்சினை, தெருவிளக்குப் பிரச்சினை, மருத்துவமனைப் பிரச்சினை, ஆரம்பப் பள்ளிக்கூடங்கள் பிரச்சினை, பாலம், சுகாதாரச் சீர்கேடு, பட்டா பிரச்சினை, ஓய்வூதியம், 100 நாள் வேலைத்திட்டம், இதுபோன்ற பிரச்சினைகள்தான் இருக்கும்.

இங்கே பத்துப் பேரைப் பேச வைக்கப் போகிறோம். அந்த பத்துப் பேரும் பேசிய பிறகு அதற்குரிய விளக்கத்தை நிச்சயமாக நான் உங்களிடத்தில் சொல்லுவேன்."

இவ்வாறு, மக்கள் கிராமசபைக் கூட்டத்தைத் தொடங்கி வைத்து கழகத் தலைவர் அவர்கள் உரையாற்றினார்.

“அ.தி.மு.க ஆட்சியை அகற்றியே தீர்வதென்ற உறுதியுடன் பெருந்திரளாக கூடும் பெண்கள்" : மு.க.ஸ்டாலின் நம்பிக்கை!

மக்கள் கிராமசபைக் கூட்டத்தில், பெண்கள் எழுப்பிய பிரச்சினைகளுக்குக் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்த பதில் விவரம் வருமாறு:

“இங்கு நெசவு தொழிலைப் பற்றிப் பேசினீர்கள். கலைஞர் அவர்கள் தான் நெசவாளர் துயர் துடைக்கக் கஞ்சித் தொட்டியைத் தமிழ்நாடு முழுவதும் தொடங்கினார்கள். எதிர்க்கட்சியாக இருந்தபோதும் உங்களுடைய வாழ்க்கைக்காக, உங்களை உயர்த்த வேண்டும் என்பதற்காகத் தேங்கியிருந்த கைத்தறித் துணிகளை விற்றார்கள். அவருடைய ஆட்சிக்காலத்தில் இலவச மின்சாரம் கொடுத்திருப்பதையும் சொன்னேன். நிச்சயமாக உங்களுடைய கோரிக்கைகள் எல்லாம் நிறைவேற்றித் தரப்படும்.

நீட் பிரச்சினை பற்றிச் சொன்னீர்கள். நான் தொடர்ந்து அனைத்துக் கூட்டங்களிலும் சொல்லிக் கொண்டிருக்கிறேன். கலைஞர் முதலமைச்சராக இருந்த வரையில் நீட் தமிழ்நாட்டிற்குள் வரவில்லை. ஆனால் பழனிசாமி முதலமைச்சர் ஆனதும் நீட் தமிழ்நாட்டிற்குள் வந்துவிட்டது. இதிலிருந்து நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நாம் ஆட்சிக்கு வந்தவுடன், இந்த நீட்டிலிருந்து விலக்கு வாங்கி தருவேன் என்று உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அம்மையார்குப்பம் மருத்துவமனை பற்றிப் பேசினீர்கள். ஆரம்பச் சுகாதார நிலையங்கள் தி.மு.க ஆட்சியில் இருந்தபோது பேணிப் பாதுகாக்கப்பட்டன. அனைத்து இடங்களிலும் மருத்துவ வசதிகள் இருந்தன. ஆனால் இப்போது எந்த ஆரம்பச் சுகாதார நிலையங்களிலும் வசதிகள் இல்லை. ஆனால் இப்பொழுது பழனிசாமி, தமிழ்நாட்டில் 2,000 மினி கிளினிக்குகளைத் தொடங்குவதாக அறிவித்து, கோடிகோடியாக விளம்பரம் கொடுத்து அவற்றைத் தொடங்கி வைத்தார்.

அது தொடங்கும் போதே நான், “நல்ல திட்டம் தான், நான் வரவேற்கிறேன். ஆனால் அதற்கு மருத்துவர்கள் போட்டு விட்டீர்களா? செவிலியர்கள் போட்டு விட்டீர்களா? அதற்குத் தேவையான உபகரணங்கள் வாங்கி கொடுத்து விட்டீர்களா? இதற்குப் பதிலாக ஆரம்பச் சுகாதார நிலையங்களில் பணியாளர்களை நியமித்தால் போதுமே“ என்று கேட்டேன்.

அதற்கு பழனிசாமி அவர்கள், “எதையும் எதிர்ப்பதுதான் ஸ்டாலினின் வேலை“ என்று சொன்னார்கள். ஆனால் இப்பொழுது நீதிமன்றத்தில் ஒருவர் வழக்குப் போட்டிருக்கிறார். அதற்கு பணியாளர்கள் எப்படி நியமிக்கிறார்கள்? தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது. அரசாங்கம் தான் நியமிக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட்டிருக்கிறார்.

அந்த வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. விசாரணை நடந்து கொண்டிருந்த போது அரசு வழக்கறிஞர், “இது தற்காலிக கிளினிக் தான். அதனால் நியமனம் தேவையில்லை“ என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

தற்காலிக கிளினிக் என்றால் பொதுவாக மருத்துவ முகாம்கள் அமைப்போம். காலையில் வந்து மாலைக்கு முடித்து விடுவோம். அதுபோல தான் இதுவும். இவ்வாறு மினி கிளினிக் திட்டம் என்பதாகக் கூறி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்களே தவிர, வேறு எதுவும் அல்ல.

விவசாயிகள் இன்றைக்குப் பல கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். டெல்லியில் கடும் குளிருக்கு மத்தியிலும் குடும்பம் குடும்பமாக வந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். இதுவரையில் அரசு தரப்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் விவசாயிகள் எல்லாம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது கலைஞர் 2006-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுடைய கடனை ரத்து செய்வேன் என்று கூறினார். ஆட்சிக்கு வந்தவுடன் ரத்து செய்தார். 1 கோடி 2 கோடி அல்ல. 7,000 கோடி ரூபாய்க் கடனை ரத்து செய்த தலைவர் தான் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்.

அதற்கு முன்பு 1989ஆம் ஆண்டு விவசாய பெருங்குடி மக்களுக்கு இலவச மின்சாரம் கொடுத்தார். நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் கொடுத்தது போலவே 1989-இல் விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் கொடுத்தார். அதுதான் கலைஞருடைய ஆட்சி.

இங்கு ஒருவர் இந்தத் தொகுதியை தி.மு.க.விற்குத்தான் கொடுக்க வேண்டும் என்று கூறினார். நான் வேண்டாம் என்றா சொல்லப் போகிறேன். நான் அதற்கான முழு முயற்சியிலும் ஈடுபடுவேன். அதில் எந்த சந்தேகமும் இல்லை.

அதேபோல பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று கூறினார்கள். உண்மைதான். உதாரணமாக பொள்ளாச்சி சம்பவத்தை மறந்து இருக்க மாட்டீர்கள். அதுபோல ஒரு சம்பவம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்திலேயே நடந்திருக்க முடியாது.

இந்த ஆட்சி வந்த காலத்திலிருந்து 4 ஆண்டுகளாக 250 பெண்களைக் கடத்தி, ஒரு தோட்டத்தில் உள்ள பண்ணை வீட்டிற்குள் கொண்டு சென்று அடைத்து வைத்து, அவர்களைப் பலாத்காரம் செய்து, அதனை வீடியோ காட்சியாக எடுத்து, வலைதளங்களில் வெளியிடுவதாக அவர்களை மிரட்டி அச்சுறுத்தி பணம் பறித்து இருக்கிறார்கள். நான்கு ஆண்டுகளாக இந்த கொடுமை நடந்திருக்கிறது. 4 ஆண்டுகளாக நடக்கும்போது அங்கு இருக்கும் காவல்துறைக்கு இது தெரியாமல் இருந்திருக்குமா? தெரியும்.

அதனைக் கண்டும் காணாமல் இருந்ததற்கு என்ன காரணம்? அதிகாரத்தில் இருப்பவர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட 250 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் குடும்பத்தைக் கேவலப்படுத்தி, கொச்சைப்படுத்தி இருக்கிறார்கள்.

இது சம்பந்தமாக சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்று நாம் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறோம். உயர்நீதிமன்றத்திற்குச் சென்று வழக்குப் போட்டிருக்கிறோம். அவர்கள் சி.பி.சி.ஐ.டி விசாரணை வைத்தார்கள். அதற்குப் பிறகு உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட்டபோது, சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றினார்கள். அது தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது.

15 பதினைந்து நாட்களுக்கு முன்பு தான் அ.தி.மு.க மாணவர் அணி அமைப்பில் இருக்கும் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இன்னும் பல பேர் இருக்கிறார்கள்.

அதனால், நாம் ஆட்சிக்கு வந்தவுடன் பெண்கள் பாதுகாப்பிற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனி நீதிமன்றம் அமைத்து, நடவடிக்கை எடுத்து குற்றங்களை உடனடியாக விசாரித்துத் தண்டனை கொடுக்க வழிவகை செய்வோம்.”

இவ்வாறு கழகத் தலைவர் அவர்கள் பதிலளித்துப் பேசினார்.

மக்கள் கிராம சபைக் கூட்டத்தை நிறைவுசெய்து தி.மு.க தலைவர் அவர்கள் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:

“இங்கு எதற்காக இந்தக் கூட்டம் நடத்தப்படுகிறது என்பதை நான் முன்னுரையிலேயே எடுத்துச் சொல்வதைப் புரிந்துகொண்டு, இங்கு பேசியவர்கள் உங்களுடைய கருத்துக்களை எடுத்துச் சொல்லி இருக்கிறீர்கள். இந்த ஊர்ப் பிரச்சினை - வட்டாரப் பிரச்சினை - சமுதாயப் பிரச்சினை - நெசவாளர்களின் பிரச்சினை குறித்தெல்லாம் எடுத்துச் சொல்லி இருக்கிறீர்கள். திராவிட முன்னேற்றக் கழகம் ஐந்து முறை ஆட்சிப் பொறுப்பில் இருந்திருக்கிறது. அப்படி ஆட்சிப் பொறுப்பிலிருந்த நேரத்தில் தான், திருத்தணி மக்களின் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க நெமிலி கூட்டுக் குடிநீர்த் திட்டம் கொண்டுவரப்பட்டது. திருத்தணியில் நகராட்சி பூங்கா திறக்கப்பட்டது. பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையான திருத்தணி முருகன் கோயிலுக்கு சுமார் 25 கோடி ரூபாயில் தங்க கோபுரம் அமைத்தது. பொதட்டூர்பேட்டையில் அரசுப் போக்குவரத்து பணிமனை அமைக்கப்பட்டது. பொதட்டூர்பேட்டையில் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டது. திருத்தணி சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. ஆட்சியின்போது எஸ்.வி.ஜி.புரம், வீரகநல்லூர் பகுதியில் 2 பெரியார் சமத்துவபுரங்கள் உருவாக்கப்பட்டது. இவற்றையெல்லாம் நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். இப்போது கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த ஆட்சியில் ஏதாவது நடந்திருக்கிறதா என்று நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.

திருத்தணி அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் நரசிம்மன் கடந்த தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றவில்லை.

திருத்தணி பேருந்து நிலையம் அமைக்கப்படும் என அறிவித்தார்; ஆனால் இன்றுவரை பணிகளைத் தொடங்கவில்லை. 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு மலை பாறைகள் உள்ள பகுதியைத் தேர்ந்தெடுத்து, முதற்கட்ட பணியான பாறைகள் உடைக்க 40 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஒப்பந்தத்தை அ.தி.மு.க.வினருக்கே தர வேண்டும் எனக் கூறி பணிகளை அ.தி.மு.க.வினர் நிறுத்திவிட்டார்கள்.

திருத்தணி - அரக்கோணம் சாலை அகலப்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்துக் கண்டுகொள்ளவேயில்லை. பள்ளிப்பட்டில் அரசு மருத்துவமனையைத் தரம் உயர்த்தி நோயாளிகள் திருத்தணிக்குச் செல்லாமல் பள்ளிப்பட்டிலேயே சிக்கிச்சையளிக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டு வாக்குறுதியாகவே உள்ளது. திருத்தணி தொகுதி நெசவாளர்கள் அதிகம் உள்ள பகுதி என்பதால் ஜவுளிப்பூங்கா அமைக்கப்படும் என்ற வாக்குறுதி 10 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமலேயே உள்ளது. தி.மு.க ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தவுடன் இந்தப் பணி நிறைவேற்றப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அரக்கோணம் - திருப்பதி புறவழிச்சாலை திட்டம் உருவாக்கப்பட்டு பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இப்பணிகள் தொடங்க அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் நரசிம்மன் எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. திருத்தணி நகராட்சியில் தி.மு.க. ஆட்சியின் போது சீரான குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் அ.தி.மு.க ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக 7 அல்லது 8 நாளைக்கு ஒரு முறை தண்ணீர் வழங்கப்படுகிறது.

தி.மு.க ஆட்சியில் பல்வேறு திட்டங்களை - சாதனைகளைச் செய்தோம். ஆனால் அ.தி.மு.க ஆட்சியில் அப்படி எதையும் செய்யவில்லை. அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை.

இன்னும் 4 மாதங்களில் தி.மு.க. தான் ஆட்சிக்கு வரவிருக்கிறது என்ற நம்பிக்கை எங்களை விட, உங்களுக்கு அதிகமாக இருக்கிறது. இந்த நம்பிக்கை அம்மையார்குப்பம் ஊராட்சியில் மட்டுமல்ல; திருத்தணி சட்டமன்றத் தொகுதியில் மட்டுமல்ல; திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டுமல்ல; ஒட்டுமொத்தமாகத் தமிழகம் முழுவதும் எதிரொலிக்கிறது. நாம் திட்டமிட்டதை விடவும் அதிக அளவிலான மக்கள் கிராம சபைக் கூட்டங்களை நடத்தி இருக்கிறோம். அதில் கலந்துகொண்ட கோடிக்கணக்கான மக்கள் அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறார்கள். இப்படியொரு புரட்சி நடந்திருக்கிறது என்றால், தமிழக மக்கள் தயாராகி விட்டார்கள் - தெளிவாக இருக்கிறார்கள். எனவே, நான் உங்களுக்கு அதிகமாக எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

இங்கு அதிக அளவில் தாய்மார்கள் இருக்கிறீர்கள். வீடு நன்றாக இருந்தால்தான் நாடு நன்றாக இருக்கும் என்ற அடிப்படையில், நீங்கள் வீட்டைப் பற்றி அதிகம் கவலைப்படுபவர்கள். அதனால் தான் கடைக்குச் சென்றால் கூட கடைக்காரர்கள் சொல்லும் விலைக்கு பொருளை வாங்காமல் பேரம் பேசி வாங்குவீர்கள். காய்கறிகள், புடவை, மீன் என்று எல்லாவற்றிலும் தரத்தைப் பார்த்து வாங்குவீர்கள். கருவாட்டைக் கூட அதன் நாற்றத்தை முகர்ந்து பார்த்துத் தான் வாங்குவீர்கள். நாற்றத்தைப் பற்றிக் கவலைப்படும் நீங்கள் நாட்டைப் பற்றியா கவலைப்பட மாட்டீர்கள்?

எனவே, உங்களிடம் அதிகம் எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை. நீங்கள் விழிப்புணர்வோடு இருக்கிறீர்கள்; இல்லையென்றால் இவ்வளவு பெரிய கூட்டம் வந்திருக்காது; ஒரு முடிவோடு வந்திருக்கிறீர்கள். எனவே நடைபெறவுள்ள தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மிகப்பெரிய ஆதரவை அளிக்க வேண்டும். கமிஷன் - கரப்ஷன் – கலெக்ஷன் ஆட்சியாக உள்ள பழனிசாமியின் ஆட்சியைத் தூக்கியெறிய அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம் என்ற தீர்மானத்தை நிறைவேற்றித் தரவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.”

இவ்வாறு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories