தமிழ்நாடு

ஊரடங்கின்போது வயிற்றுப்பாட்டிற்காக வெளியே வந்தவர்கள் மீதான கிரிமினல் வழக்குகளை ரத்துசெய்க : மு.க.ஸ்டாலின்

ஊரடங்கு உத்தரவை மீறியதாக தமிழகம் முழுவதும் பொதுமக்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

ஊரடங்கின்போது வயிற்றுப்பாட்டிற்காக வெளியே வந்தவர்கள் மீதான கிரிமினல் வழக்குகளை ரத்துசெய்க : மு.க.ஸ்டாலின்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கொரோனா காரணமாக அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கையொட்டி போலிஸார் பொதுமக்களிடம் அதிக கெடுபிடி காட்டினர். அத்தியாவசிய தேவைகளுக்காகக் கூட பலர் வெளியில் செல்ல அனுமதிக்கப்படாமல் தாக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஊரடங்கின்போது கடையை அடைக்க தாமதமானதாக மதுரையில் ஒருவர் போலிஸாரால் தாக்கப்பட்டு பலியானார். சாத்தான்குளத்தில் தந்தையும் மகனும் போலிஸாரின் கொடூரத்திற்கு பலியாகினர்.

வயிற்றுப்பாட்டிற்காக வேறு வழியின்றி வெளியே வந்த பலர் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளால் வெளிநாட்டு வேலைகளுக்கு முயற்சிக்கும் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

எனவே, ஊரடங்கு உத்தரவை மீறியதாக தமிழகம் முழுவதும் பொதுமக்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று (22-01-2021), தி.மு.க தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள, செய்தியின் விவரம் பின்வருமாறு :

உலகையே உலுக்கிய கொடிய கொரானா நோய்த் தொற்று காலத்தில் மத்திய பா.ஜ.க அரசும், மாநில அ.தி.மு.க அரசும் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் பல்வேறு கட்டங்களில் ஊரடங்குகளைப் பிறப்பித்து, கட்டுப்பாடுகளை விதித்தன. தங்களின் வாழ்வாதாரத்திற்காகவும், குடும்பத்தின் பசிப்பிணியைப் போக்கிடவும் வறியோரும், வாடி நலிந்தோரும், வழக்கமான தினக்கூலியினரும், அன்றாடம் வேலைக்குச் செல்வோரும் ஊரடங்குக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க இயலாமல், பணிக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வயிற்றுப் பிழைப்பிற்காக ஊரடங்குக் கட்டுப்பாடுகளை மீறினார்களே தவிர- வம்படியாகவோ அல்லது உள்நோக்கத்துடனோ வேண்டுமென்றே மீறவில்லை.

ஆனால், அப்படித் தங்களின் அன்றாடப் பணிகளுக்குச் சென்ற லட்சக்கணக்கானவர்கள் மீது, அ.தி.மு.க அரசு பேரிடர் மேலாண்மை சட்டம் பிரிவுகளின் கீழும், இந்தியத் தண்டனை சட்டம் பிரிவு 188 கீழும், கிரிமினல் வழக்குப் பதிவு செய்து- அந்த வழக்குகள் எல்லாம் தற்போது நிலுவையில் இருக்கின்றன.

இப்படிப் பதியப்பட்ட வழக்குகளால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பிற்காகக் காத்திருக்கும் இளைஞர்களின் எதிர்காலமே கேள்விக்குரியதாக மாறியுள்ளது. வெளிநாடுகளுக்குச் செல்ல பாஸ்போர்ட் எடுப்பதற்கு இந்த வழக்குகள் பெரும் தடையாக உள்ளன. இதனால் கொரோனா காலத்தில் தங்கள் வாழ்வாதாரம் முழுவதும் பாதிக்கப்பட்ட அவர்களின் எதிர்காலமும் இந்த கிரிமினல் வழக்குகளால் பாதிக்கப்பட்டுள்ளன. கொரோனா காலத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அனைத்தும் படிப்படியாகத் தளர்த்தப்பட்டு வருகின்ற இந்தத் தருணத்தில், அந்தக் கட்டுப்பாடுகளை மீறியதற்காகப் பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமியைக் கேட்டுக் கொள்கிறேன்.

அந்த வழக்குகளையெல்லாம், சம்பந்தப்பட்டவர்களின் எதிர்காலம் கருதி, உடனே எவ்விதத் தாமதமும் இன்றித் திரும்பப் பெற்று - பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கும், புது வாழ்வுத் தேடலுக்கும் வழிவகுத்திட வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமியை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories