மு.க.ஸ்டாலின்

“ஜெயலலிதா மரண மர்மத்தை வெளிப்படுத்த இயலாமல் நினைவிட நாடகம் போடும் EPS - OPS" : மு.க.ஸ்டாலின் சாடல்!

ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தையும் – கொடநாடு கொலைகளின் மர்மத்தையும் கண்டறிய இயலாத பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் அம்மையாரின் நினைவிடத்தை திறந்து வைப்பதாக நாடகமாடுகிறார்கள் என மு.க.ஸ்டாலின் சாடல்!

“ஜெயலலிதா மரண மர்மத்தை  வெளிப்படுத்த இயலாமல் நினைவிட நாடகம் போடும் EPS - OPS" : மு.க.ஸ்டாலின் சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

சென்னை மாவட்டம் அடையாளம்பட்டு ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்ற தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், "விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு மூன்றாண்டுகளாகியும் அம்மையார் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தையும் – கொடநாடு கொலைகளின் மர்மத்தையும் கண்டறிய இயலாத முதலமைச்சர் பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் அம்மையாரின் நினைவிடத்தை திறந்து வைப்பதாக நாடகமாடுகிறார்கள்" என உரையாற்றினார்.

இன்று (23-01-2021) மாலை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், சென்னை மாவட்டம் – மதுரவாயல் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அடையாளம்பட்டு ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் கிராமசபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

மக்கள் கிராமசபைக் கூட்டத்தைத் தொடங்கி வைத்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:

“இப்போது மதுரவாயல் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அடையாளம்பட்டு ஊராட்சியில் மக்கள் கிராம சபைக் கூட்டத்தை நடத்துவதற்காக நான் வந்திருக்கிறேன். அதில் கலந்து கொள்வதற்காக நீங்கள் வந்திருக்கிறீர்கள்.

இந்த கிராம சபைக் கூட்டத்தை மிகச் சிறப்பான வகையில் எழுச்சியோடு, ஆர்வத்தோடு, மாநாடு போல, நம்முடைய சென்னை தெற்கு மாவட்டத்தின் செயலாளர், சட்டமன்ற உறுப்பினர், சென்னை மாநகர முன்னாள் மேயர், செயல்வீரர், நம்முடைய அருமை நண்பர், மா.சுப்பிரமணியன் ஏற்பாடு செய்திருக்கிறார்.

இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் உங்களையெல்லாம் தலைமைக் கழகத்தின் சார்பில் வருக… வருக… வருக… என வரவேற்க விரும்புகிறேன்.

இந்த கிராம சபைக் கூட்டத்தை கடந்த 20-ஆம் தேதியிலிருந்து நாம் தொடர்ந்து நடத்தி வருகிறோம். இதை நடத்துவதற்கு இந்த ஆட்சி தடை போட்டது. எவ்வாறு கிராம சபைக் கூட்டத்தை நீங்கள் நடத்த முடியும்? அரசாங்கம் தான் நடத்த வேண்டும் என்று திடீரென்று அறிக்கை விட்டார்கள்.

கிராமசபைக் கூட்டம் தானே நடத்தக்கூடாது. நாங்கள் மக்கள் கிராம சபைக் கூட்டத்தை நடத்துகிறோம் என்று அறிவித்து, மக்கள் கிராம சபைக் கூட்டத்தை தமிழ்நாடு முழுவதும் நடத்திக் கொண்டிருக்கிறோம்.

நான் ஆட்சிப் பொறுப்பில் இருந்த நேரத்தில், குறிப்பாக நான் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த நேரத்தில், கிராம சபைக் கூட்டத்தை, தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் நான்கு முறை நடத்தினேன். காந்தி ஜெயந்தி, சுதந்திர தினம், குடியரசு தினம், தொழிலாளர்கள் தினம் ஆகிய 4 நாட்களில் நடத்துவது வழக்கம். அதுதான் மரபு.

ஆனால் இந்த ஆட்சி அதனை நடத்தவில்லை. அதனால் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் நாம் ஊராட்சி சபைக் கூட்டத்தை நடத்தினோம். தமிழ்நாடு முழுவதும் 12,600-க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் இருக்கின்றன. அனைத்து ஊராட்சி சபைகளிலும் கூட்டத்தை நடத்தினோம். அதனுடைய பலன்தான் இன்றைக்கு நாடாளுமன்றத்தில் தி.மு.க. 3-வது இடத்தில் இருக்கிறது.

அதுபோல இப்போது மக்கள் கிராம சபைக் கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். இன்னும் 4 மாதங்களில் தேர்தல் வரப்போகிறது. அந்தத் தேர்தலில் நாம் மிகப்பெரிய வெற்றியைப் பெறப் போகிறோம் என்பதற்கு இந்தக் கூட்டம் ஒரு சாட்சி.

நீங்கள் மிகுந்த எழுச்சியோடு, உணர்ச்சியோடு, ஆர்வத்தோடு ஆரவாரத்தோடு வந்திருக்கிறீர்கள். தி.மு.க தான், உதயசூரியன்தான் என்ற உணர்ச்சியோடு கட்டுப்பாட்டோடு அமர்ந்திருக்கிறீர்கள்.

ஆண்களை விட பெண்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள். ஆண்கள் உங்களுக்குப் பாதுகாப்பாக இருக்கிறார்கள். அதேபோல எங்களுக்கு நீங்கள்தான் பாதுகாப்பு. அதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

கடந்த உள்ளாட்சித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்குக் காரணம், இந்த ஊராட்சி சபைக் கூட்டம் தான்.

இந்த மக்கள் கிராம சபைக் கூட்டத்தை 16,500 ஊராட்சிகளில் நடத்த வேண்டும் என்று தலைமைக் கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டு நடத்திக் கொண்டிருக்கிறோம். கழகத்தின் தலைவர் என்ற முறையில் நான் பல இடங்களுக்குச் சென்றிருந்தேன். இதுவரையில் நாம் 22,000 கிராமசபைக் கூட்டங்களை முடித்திருக்கிறோம். ஒரு கோடியே 25 லட்சம் பேர் இதில் கலந்துகொண்டு, "அ.தி.மு.க. ஆட்சியை நிராகரிக்கிறோம்" என்று கையொப்பமிட்டு, இதற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். அந்த அளவிற்கு இந்தக் கிராம சபைக் கூட்டம் வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது.

இதுதான் எனக்கு நிறைவான கிராம சபைக் கூட்டம். எனவே இது எனக்கு மறக்க முடியாத கிராம சபைக் கூட்டமாக அமைந்திருக்கிறது.

இன்று கிராம சபைக் கூட்டத்தை ஏன் நிறைவு செய்கிறேன் என்றால், நான் அடுத்த பயணத்தை தொடங்கப் போகிறேன். என்ன பயணம் என்பதை நாளை மறுநாள் நான் அறிவிக்கப் போகிறேன்.

ஏற்கனவே கிராம சபைக் கூட்டத்தை நடத்திக் கொண்டு இருக்கிறோம். “விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்” என்ற தலைப்பில் கழக முன்னணியினர் தமிழ்நாடு முழுவதும் சென்று பரப்புரையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

நாளை மறுநாள் அறிவிக்கவிருக்கும் என்னுடைய பயணம், 234 தொகுதிகளுக்கும் இருக்கப்போகிறது. 25ஆம் தேதி பத்திரிகையாளர்களை முறையாக அழைத்து அறிவிக்கப் போகிறேன்.

எல்லாத் தரப்பு மக்களும் இந்த 10 ஆண்டுகால ஆட்சியில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பது, விவசாயப் பெருங்குடி மக்கள்தான்.

அவர்கள்தான் இந்த நாட்டின் முதுகெலும்பு. அவர்கள் இல்லையென்றால் நாம் இல்லை. அவர்கள் சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும்.

அந்த விவசாயிகளுக்கு இன்றைக்கு என்னென்ன கொடுமைகள் நடந்து கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். குறிப்பாக டெல்லியில் கடும் குளிரில் குடும்பம் குடும்பமாக பல்வேறு மாநிலங்களில் இருந்து விவசாயப் பெருங்குடி மக்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இதுவரையில் மத்திய அரசு பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது. அதில் சமரசம் வரவில்லை. அதனால் போராட்டம் இன்னும் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. 50-க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல், இன்றைக்கு ஒரு செய்தி கேள்விப்பட்டேன். இன்று தஞ்சை மாவட்டம் - டெல்டா பகுதி - நாகை மாவட்டம், தலைவர் பிறந்த திருக்குவளை பகுதியில் தொடர் மழையின் காரணமாக பயிர் நாசப்பட்டு ரமேஷ்பாபு என்ற விவசாயி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இதுதான் இன்றைக்கு விவசாயிகளின் நிலை. விவசாயிகளுக்கு விரோதமான ஆட்சிதான் இன்றைக்கு நடந்து கொண்டிருக்கிறது.

இந்த ஆட்சி இன்னும் 4 மாதங்களில் ஆட்சியில் இருந்து இறங்கப் போகிறார்கள். அந்த 4 மாதங்களில் முடிந்த வரைக்கும் சுருட்ட வேண்டும், கொள்ளை அடிக்க வேண்டும் என்ற நிலைதான் இந்த ஆட்சியில் நடந்துகொண்டிருக்கிறது.

குறிப்பாக சில நாட்களுக்கு முன்பு ஒரு அறிக்கை வெளியிட்டேன். மூன்று மாதத்திற்குள் கிட்டத்தட்ட 3,000 கோடி ரூபாய்க்கு டெண்டர் விட்டிருக்கிறார்கள். இந்த மூன்று மாதத்திற்குள் அதை எவ்வாறு செய்து முடிக்க முடியும்?

டெண்டர் விட்டது அந்த வேலையைச் செய்வதற்காக அல்ல. முதலில் அதில் கமிஷனை வாங்கிக் கொள்வதற்காக; கமிஷன் - கரெப்சன் – கலெக்ஷன், இதுதான் இந்த ஆட்சியின் கொள்கையாக இருந்து கொண்டிருக்கிறது.

இன்றைக்கு விழுப்புரம் மாவட்டம் - தளவனூர் என்ற ஊரில் தடுப்பணை இடிந்து விழுந்துள்ளது. அங்கு தண்ணீர் வீணாகச் சென்று கொண்டிருக்கிறது. அந்தத் தடுப்பணையை மூன்று மாதத்திற்கு முன்புதான் 25 கோடி ரூபாய் செலவில் கட்டி இருக்கிறார்கள். இதுதான் இந்த ஆட்சியின் லட்சணம்.

அதுமட்டுமில்லாமல், விலைவாசி விஷம் போல் ஏறிக் கொண்டிருக்கிறது. தி.மு.க. ஆட்சியில் இருந்த நிலைமை என்ன? இப்போது இருக்கக்கூடிய நிலை என்ன? என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

தி.மு.க. ஆட்சியிலும் விலைவாசி உயர்ந்து கொண்டிருந்தது. அதை நான் மறுக்கவில்லை. விலைவாசி உயர்ந்தாலும், அதனைச் சமாளிக்கும் வகையில் மகளிர் சுய உதவிக்குழு, 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டம் உருவாக்கித் தந்தோம். ஆனால் இந்த ஆட்சியில் அவ்வாறு எதுவும் இல்லை.

அம்மையார் ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக வரவேண்டும் என்று தான் நீங்கள் தேர்ந்தெடுத்து வெற்றிபெற வைத்தீர்கள். நமக்கும் அவர்களுக்கும் 1.1% வித்தியாசம்தான். அதனால் அவர்கள் ஆட்சி, நாம் எதிர்க்கட்சி.

அவர் ஆட்சிக்கு வந்தபிறகு, அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் எப்படி இறந்தார்? என்பது யாருக்கும் தெரியாது. இதுவரை அது மர்மமாகவே இருக்கிறது. இதுதான் இன்றைக்கு இருக்கக்கூடிய நிலை.

இன்னும் 4 மாதங்களில் நாம்தான் ஆட்சிக்கு வரப்போகிறோம். ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் தேர்தல் அறிக்கையில் சொன்ன திட்டங்களை நிறைவேற்றுதல் மற்றும் ஜெயலலிதாவின் மர்ம மரணத்திற்கு யார் காரணம் என்பதைக் கண்டுபிடித்து, தமிழ்நாட்டுக்கு அடையாளம் காட்டுவதுதான் நம்முடைய முதல் பணி. யார் தடுத்தாலும் இந்த ஸ்டாலின் விடமாட்டான். இது உறுதி… உறுதி… உறுதி…!

வருகின்ற 27-ஆம் தேதி அந்த அம்மையாரின் நினைவிடத்தைத் திறக்கப் போகிறார்கள். திறப்பதற்கு முன்பு, அவருடைய மரணத்திற்கு யார் காரணம் என்பதைக் கண்டுபிடித்து இருக்க வேண்டுமா, இல்லையா?

விசாரணைக் கமிஷன் வேண்டும் என்று கூறியது யார்? துணை முதலமைச்சராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள்தான்.

அந்த அம்மா இறந்தவுடன் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் முதலமைச்சராக உட்கார்ந்தார். அவரை திடீரென்று பதவிலிருந்து சசிகலா அவர்கள் இறக்கி விட்டார். அதற்குக் காரணம், எதிர்க்கட்சித் தலைவரைப் பார்த்து சிரித்தார் என்பதாகும்.

அதற்குப் பிறகு அந்த இடத்தில், தானே உட்காருவதாக அறிவித்தார் சசிகலா அவர்கள். அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. இதற்கிடையில் திடீரென்று உச்ச நீதிமன்றத்தில் இருந்து சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வருகிறது.

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேருக்கு இந்த தண்டனை. அம்மையார் ஜெயலலிதா இறந்த காரணத்தினால் தண்டனை அனுபவிக்க வேண்டியது இல்லை என்று நீதிமன்றம் அறிவித்தது. ஆனால் குற்றம் குற்றம்தான்.

மற்ற மூன்று பேரும் தண்டனை அனுபவித்துவிட்டு வருகிற 27-ஆம் தேதி தான் வெளியில் வரப்போவதாக அறிவித்திருக்கிறார்கள்.

திடீரென்று சசிகலா அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவர் உடல் நலம் பெற்று வெளிவர வேண்டும் என்று தி.மு.க. தலைவர் என்ற முறையில் வாழ்த்துச் சொல்கிறேன்.

சசிகலா சிறைக்குச் செல்ல வேண்டிய காரணத்தால், யாரை முதலமைச்சராக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில், கீழே ஒருவர் தவழ்ந்து வந்து கொண்டிருந்தார். அதெல்லாம் உங்களுக்குத் தெரியும்.

அது எடப்பாடி அவர்கள் தான். அவ்வாறு பதவிக்கு வந்தார். எடப்பாடி என்று சொல்லப் போவதில்லை. அவ்வாறு சொன்னால் சேலம் அருகில் இருக்கும் எடப்பாடி ஊருக்கு அவமானம்.

இதைச் சொன்னால் அவருக்கு கோபம் வருகிறது. அதனால் அவர், கலைஞர் எவ்வாறு வந்தார்? என்று கேட்கிறார்.

கலைஞர் 14 வயதில் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த நேரத்தில், அரைக்கால் சட்டை போட்டுக் கொண்டிருந்த நேரத்தில், கரத்தில் கயல், வில், புலி பொறித்த கொடி ஏந்தி என்று, “ஓடி வந்த இந்திப் பெண்ணே கேள்! நீ தேடி வந்த கோழையுள்ள நாடிதல்லவே” என்று பாடியவர் தலைவர் கலைஞர் அவர்கள். அவரைப் பற்றி பேசுவதற்கு உங்களுக்கு அருகதை இருக்கிறதா?

அப்போது ஓ.பி.எஸ். நேரடியாக அம்மையார் நினைவிடத்துக்குச் சென்றார். 40 நிமிடம் அமர்ந்து தியானம் செய்தார். அம்மாவின் ஆன்மாவோடு பேசினார். “அம்மா என் பதவியைப் பறித்து விட்டார்கள். நான் இப்போது முதலமைச்சர் அல்ல. உங்கள் மரணத்தில் மர்மம் இருக்கிறது. அதைக் கண்டுபிடிக்க வேண்டும். விசாரணை வைக்க வேண்டும்” என்று குரல் கொடுத்தார்.

அவரைச் சமாதானம் செய்து துணை முதலமைச்சர் பதவி கொடுத்தார்கள். விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும் என்று சொன்னார்கள்.

ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது. அம்மையார் ஜெயலலிதா இறந்து நான்கு ஆண்டுகளும், விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு மூன்று ஆண்டுகளும் ஆகிவிட்டது. இதுவரையில் எந்தச் செய்தியும் இல்லை. அம்மையாரின் மரணத்தில் உள்ள மர்மத்தைக் கண்டுபிடிக்க முடியாத நீங்கள், அவரது நினைவிடத்தை எப்படி திறந்து வைக்கிறீர்கள் என்ற கேள்வியை இந்த மக்கள் கிராம சபைக் கூட்டத்தின் வாயிலாகக் கேட்க விரும்புகிறேன்.

அதுமட்டுமில்லாமல், கொடநாடு பங்களாவில் நடந்த கொலைகள். அந்த வழக்கும் என்னவாயிற்று என்று தெரியவில்லை.

இப்படிப்பட்ட நிலையில் தான் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அவ்வாறு ஆட்சியை நடத்துகின்ற பழனிசாமியின் ஆட்சிக்கு முடிவுகட்டத்தான் நாமெல்லாம் இங்கே கூடி இருக்கிறோம். நான் ரெடி… நீங்கள் ரெடியா???

இங்கு வந்திருக்கும் உங்கள் அத்தனை பேரையும் பேச வைப்பதற்கு எனக்கு ஆசை இருக்கிறது. அத்தனை பேரையும் பேச வைக்க வாய்ப்பு இல்லை. அதனால் பத்துப் பேரை பேச வைக்க நான் முடிவு செய்திருக்கிறேன்."

இவ்வாறு கழகத் தலைவர் அவர்கள் மக்கள் கிராம சபைக் கூட்டத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு தி.மு.க தலைவர் அவர்கள் அளித்த பதில்களின் விவரம் வருமாறு:

எல்லோரும் சகோதரத்துவத்துடனும் சமத்துவத்தோடும் வாழ வேண்டும் என்பதற்காகத் தான் தலைவர் கலைஞர் அவர்கள் சமத்துவபுரம் திட்டத்தைக் கொண்டு வந்து, அதற்குத் "தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டம்" என்று பெயரிட்டார். அனைத்துச் சமுதாய மக்களும் ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்று இந்தியாவிலேயே முதன்முறையாகக் கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டத்திற்கு, அப்போது உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த என்னிடத்தில்தான் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு, 100 இடங்களில் சமத்துவபுரங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஆனால் இந்த ஆட்சியில் சமத்துவபுரங்கள் கேட்பாரற்றுக் கிடக்கின்றன. கட்டடங்கள் பாழடைந்து, குடிநீர் வசதி, மின்சார வசதி இன்றி அவை உள்ளன. தி.மு.க. ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தவுடன் அவையெல்லாம் சீர்செய்யப்பட்டு, முறையான வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

அதுமட்டுமல்ல, நாம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன், இன்னும் பல சமத்துவபுரங்களை தமிழ்நாட்டில் உருவாக்குவோம் என்ற உறுதியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மகளிர் சுய உதவிக் குழுத் திட்டத்தை தலைவர் கலைஞர் அவர்கள்தான் முதன்முதலில் 1989-ஆம் ஆண்டு தருமபுரி மாவட்டத்தில் தொடங்கி வைத்தார். மகளிர் யாருடைய தயவையும் எதிர்பார்க்காமல், சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்பதற்காக இந்தத் திட்டத்தை தலைவர் கலைஞர் அவர்கள் கொண்டு வந்தார். அதனால்தான் சுழல்நிதி, வங்கிக் கடன், மானியத் தொகை ஆகியவற்றை வழங்கினோம். அப்போதெல்லாம் மகளிர் குழுவைச் சேர்ந்தவர்கள் வங்கிகளுக்குச் சென்றால், அவர்களை நன்றாக உபசரிப்பார்கள். ஆனால் இப்போது அந்தக் குழுக்கள் செயல்படுவதில்லை என்று சகோதரி பரிமளா அவர்கள் பேசும்போது எடுத்துக்கூறினார். கவலைப்பட வேண்டாம். தேர்தல் அறிக்கை தயாராகிக் கொண்டிருக்கிறது. சுய உதவிக் குழுக்களை இன்னும் மேம்படுத்தக்கூடிய வகையில் பல்வேறு திட்டங்களை அதில் உருவாக்கியிருக்கிறோம்.

எப்படி சமத்துவபுரம் திட்டம் என்னுடைய துறையின்கீழ் செயல்படுத்தப்பட்டதோ, அதேபோல் மகளிர் சுய உதவிக் குழுக்களும் என்னுடைய கண்காணிப்பின் கீழ் தான் செயல்படுத்தப்பட்டன. பல மணி நேரமானாலும் சுழல் நிதி, வங்கிக் கடன், மானியத் தொகை ஆகியவற்றை மேடையில் நின்று கொண்டு நானே வழங்கினேன். அப்படி ஆயிரக்கணக்கான பேருக்கு நான் நின்றுகொண்டே வழங்குவதை பார்க்கும் சில தாய்மார்கள் என்னிடத்தில், “இவ்வளவு நேரம் நீங்கள் நின்றுகொண்டே இருக்கிறீர்களே, உங்களுக்குக் கால் வலிக்கவில்லையா?” என்று கேட்பார்கள். அதற்கு, “எனக்குக் கால் வலித்தாலும், இவற்றை வாங்கும்போது உங்கள் முகத்தில் வெளிப்படும் மகிழ்ச்சியைப் பார்க்கும் போது என்னுடைய கால் வலி பறந்து விடுகிறது” என்று கூறுவேன்.

இந்தத் திட்டம் தலைவர் கலைஞர் அவர்கள் மகளிராகிய உங்களுக்காக உருவாக்கிய திட்டம். எனவே, அதனைப் பற்றி நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். தி.மு.க. ஆட்சியில் அவை சரி செய்யப்படும்.”

இவ்வாறு கழகத் தலைவர் அவர்கள் பதிலளித்துப் பேசினார்.

மக்கள் கிராம சபைக் கூட்டத்தை நிறைவுசெய்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:

“நான் தொடக்கத்தில் கூறியதை உள்வாங்கிக்கண்டு எல்லோரும் மெய்மறந்து பாராட்டக்கூடிய வகையில் சில சகோதரிகள் இங்கே பேசினார்கள். அவர்களை தி.மு.க. பேச்சாளர்களாக உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்று நான் எண்ணும் அளவுக்குச் சிறப்பாகப் பேசியிருக்கிறார்கள்.

கடந்த 10 ஆண்டுகளாக தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தாலும், ஒரு எதிர்க்கட்சி செயலாற்றுவதற்கு மேலாகத்தான் செயலாற்றி இருக்கிறது.

பேரறிஞர் அண்ணா அவர்கள் 1949-ஆம் ஆண்டு இந்த இயக்கத்தைத் தொடங்கி வைத்தபோது, "ஆட்சிப் பொறுப்பிற்கு வரவேண்டும் என்பதல்ல; ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்குப் பணியாற்ற வேண்டும்" என்று எடுத்துக் கூறினார். ஆட்சிப் பொறுப்பில் இருந்தால் அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி திட்டங்களைக் கொண்டு வருதல், சாதனைகளை - பணிகளைச் செய்தல்; ஆட்சிப் பொறுப்பில் இல்லை என்றால், ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களை வலியுறுத்துவது – வற்புறுத்துவது, போராட்டம் நடத்துவது, சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் குரல் கொடுப்பது என்று தி.மு.க. தனது பணியைச் செய்யும். இந்தக் கொள்கையோடுதான் பேரறிஞர் அண்ணா அவர்கள் இந்தக் கட்சியைத் தொடங்கி வைத்தார்.

எடுத்துக்காட்டுக்காகச் சொல்கிறேன்; கடந்த 10 மாதங்களுக்கு முன் கொரோனா நோய் கடுமையாகப் பரவிய காலகட்டத்தில், நமது இயல்பு வாழ்க்கை கடுமையான பாதிப்புக்குள்ளானது. இந்தக் கொரோனா நோயைப் பயன்படுத்திக் கூட இங்கிருக்கும் அரசு கொள்ளையடித்தது. முகக்கவசத்தின் விலை ஐந்து ரூபாய்தான் இருக்கும். அதனை 150 ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறார்கள். இதனை அனைத்து நியாய விலைக் கடைகளிலும் வழங்குவதாகக் கூறினார்கள். ஆனால், சில கடைகளில் மட்டுமே பெயருக்கு வழங்கப்பட்டது. கிருமி நாசினி, பிளீச்சிங் பவுடர், துடைப்பம் ஆகியவற்றிலும் கொள்ளை அடித்திருக்கிறார்கள். அதனால்தான் கமிஷன் – கலெக்‌ஷன் - கரப்ஷன் ஆட்சி என்று கூறினேன்.

தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்தாலும், ‘ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டத்தை அறிவித்து களத்தில் நின்று இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்திலேயே யாரும் செய்யாத புரட்சியை அன்று செய்தது. சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட – ஒன்றிய – நகரக் கழகச் செயலாளர்கள், கழக நிர்வாகிகள் என்று அனைத்துத் தி.மு.க.வினரும் அன்று வெளியில் வந்து, மக்களுக்குத் தேவையான மளிகைப பொருட்கள், மருந்துப் பொருட்கள், உணவு ஆகியவற்றை மக்களைத் தேடிச் சென்று கொடுத்தோம்.

எத்தனையோ பேருக்கு இப்படி உதவி செய்திருக்கிறோம். எத்தனையோ இரவுகளில் மா.சுப்ரமணியன் அவர்களைத் தொலைபேசியில் அழைத்து, இந்தப் பகுதியில் இன்னாருக்கு உதவி தேவை என்று நானே கூறியிருக்கிறேன். அவரும் உடனே ஒரு ஆளை நியமித்தோ அல்லது அவரே நேரடியாகச் சென்றோ அவர்களுக்கு உதவிகள் செய்திருக்கிறார். இவ்வாறு பல மாவட்டச் செயலாளர்களுக்கும் கூறியிருக்கிறேன். இப்படி உயிரையே பணயம் வைத்துச் செயல்பட்டதால் நம்முடைய மாவட்டக் கழகச் செயலாளர்களில் ஒருவரான ஜெ.அன்பழகன் அவர்களையே இழந்திருக்கிறோம். அவரது உடலில் சில நோய்கள் இருந்தன. வெளிநாடு சென்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு வந்தவர். இந்த நோய்த் தொற்றுக் காலத்தில் கவனமாக இருக்குமாறு அவருக்கு எத்தனையோ முறை நான் அறிவுரை சொன்னேன். அவரும் கவனமுடன்தான் இருந்தார். மக்கள் பணியாற்ற வெளியில் வந்த அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இவ்வாறு உயிரைப் பணயம் வைத்து மக்களிடம் சென்று பணியாற்றிய கட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகம்.

ஆட்சிப் பொறுப்பில் இல்லாத போதே இவ்வளவு செய்து இருக்கிறோமே; ஆட்சிப் பொறுப்பில் இருந்தால் இன்னும் எவ்வளவு செய்திருப்போம்!

அதனால்தான் அ.தி.மு.க.வை நிராகரிப்போம் என்ற உணர்வோடு நீங்கள் எல்லோரும் இங்கு வந்திருக்கிறீர்கள்.”

இவ்வாறு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories