மு.க.ஸ்டாலின்

இணையிலா வெற்றியைக் குவித்து தலைவர் கலைஞரின் ஓய்விடத்தில் காணிக்கையாக்க ஆயத்தமாவீர்! - மு.க.ஸ்டாலின் மடல்

திமுக சார்பில் இதுவரையில் நடத்தப்பட்ட மக்கள் கிராம சபைக் கூட்டங்களில் நடந்த சுவாரஸ்யங்கள் குறித்து உடன் பிறப்புகளான தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார்.

இணையிலா வெற்றியைக் குவித்து தலைவர் கலைஞரின் ஓய்விடத்தில் காணிக்கையாக்க ஆயத்தமாவீர்! - மு.க.ஸ்டாலின் மடல்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விடியலை நோக்கி விழிக்கும் தமிழகம் எனக் குறிப்பிட்டு முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதும் மடல் எழுதியுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதன் விவரம் பின்வருமாறு:-

“உதயசூரியனின் வெளிச்சக் கதிர்கள் தமிழ்நாடெங்கும் ஒளியூட்டி வருவதை, கழகம் நடத்துகின்ற ஒவ்வொரு கிராம சபைக் கூட்டத்திலும் பங்கேற்கும் மக்களின் குறிப்பாக, பெண்களின் மனதிலிருந்து ஒலிக்கும் குரலில் இருந்து தெளிவாக உணர முடிகிறது.

அதர்ம ஆட்சியாளர்களின் அக்கிரம செயல்பாடுகளிலிருந்து தமிழகத்தை மீட்பதற்கு, ஆட்சி மாற்றம் நிச்சயம் தேவை என தி.மு.கழகத்தைவிட, பொதுமக்கள் மிகத் தீவிரமாக உள்ள நிலையில்தான், தர்மபுரி மாவட்டத்தில் அமைச்சர் கே.பி.அன்பழகனின் பாலக்கோடு  தொகுதியில் மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் ஜனவரி 18ந் தேதி பங்கேற்றேன். மாவட்ட கழகச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான இன்பசேகரன் சிறப்பான முறையில் ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.

அ.தி.மு.க. ஆட்சி சொன்னது என்ன, செய்தது என்ன என்பதையும், எந்தளவில் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதையும், இந்த முறை மேற்கொண்ட பயணத்தில் காணொலிக் காட்சிகள் வாயிலாக ஆதாரத்துடன் பொதுமக்களிடம் எடுத்துக் காட்டியபோது, மக்களிடம் அதற்கு பெரும் வரவேற்பு இருந்தது. குறிப்பாக, ஊர் ஊராகச் சென்று பழைய வெல்ல மூட்டைகள் போல, புதிய பொய் மூட்டைகளை அவிழ்த்து கொட்டிவரும்  முதலமைச்சர் பழனிசாமியின் போலி வாக்குறுதிகளை அவர் வார்த்தைகளாலேயே  மக்களிடம் அம்பலப்படுத்த முடிந்தது.

உயர்கல்வித்துறை அமைச்சராக உள்ள கே.பி.அன்பழகனின் தொகுதியில், மக்களின் அடிப்படைத் தேவைகள் அனைத்தும் தரம் தாழ்ந்த நிலையில் இருப்பதை, மக்களின் வேதனைக் குரல் மூலம் அறிய முடிந்தது. அத்தனை அவலங்களும் இன்னும் 4 மாதங்கள்தான். அதன்பிறகு மக்கள் ஏற்படுத்தப் போகும் ஆட்சி மாற்றத்தினால் மாநிலத்திற்கான அனைத்துத்  தேவைகளும் நிறைவேறும் என்ற நம்பிக்கையினையும்,  உறுதியையும் அவர்களுக்கு வழங்கினேன்.

இணையிலா வெற்றியைக் குவித்து தலைவர் கலைஞரின் ஓய்விடத்தில் காணிக்கையாக்க ஆயத்தமாவீர்! - மு.க.ஸ்டாலின் மடல்

தருமபுரி மாவட்ட நிகழ்ச்சி நிறைவடைந்த பிறகு சேலம் நோக்கி வரும் வழியெங்கும் மக்களின் பேராதரவும் பெருகி வரும் அன்பும் கழகத்தின் மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை எடுத்துக் காட்டியது. அங்கிருந்து சேலம் மாவட்டத்திற்கு வந்தபோது, மாவட்டக் கழகச்செயலாளர் ராஜேந்திரன் மிகச் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். அந்த வரவேற்புடன், தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி தொகுதியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்றேன்.

சேலம் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் செல்வகணபதி பிரம்மாண்ட ஏற்பாடுகளைச் செய்திருந்தார். வெற்றி நடைபோடும் தமிழகம் என, மக்களின் வரிப்பணத்தை வாரிக் கொட்டி வெற்று, விளம்பரங்களை நாள்தோறும் வெளியிட்டுக் கொண்டிருக்கும் முதலமைச்சர் பழனிசாமி, தன்னுடைய சொந்தத்  தொகுதியிலேயே தமிழகத்தை எந்தளவு தலை குனிய வைத்திருக்கிறார் என்பது எடப்பாடியில் வெட்ட வெளிச்சமாகத் தெரியவந்தது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு நடந்த கிராமசபைக் கூட்டத்தில் மக்களிடம் வாங்கிய மனுக்களின் மீது மு.க.ஸ்டாலின் என்ன நடவடிக்கை எடுத்தார் என்று தனது பிரச்சாரக் கூட்டங்களில் கொஞ்சம் கூட அர்த்தமே இல்லாமல்  கேட்டுக் கொண்டிருக்கிறார், உரிய நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தில் இருக்கும் பழனிசாமி. ஆனால், அவரது சொந்த தொகுதி மக்களுக்கே அவர் எதுவும் செய்யவில்லை என்பதை எடப்பாடியில் நடந்த மக்கள் கிராம சபை கூட்டத்தின்போது, பட்டதாரி இளைஞர்களும் பெண்களும் தி.மு.கவை நம்பி வழங்கிய மனுக்களும் வேலைக்காகப் பதிவு  செய்துவிட்டு, முதலமைச்சரின் தொகுதியில் மட்டும் காத்திருக்கும் 9ஆயிரத்து 600 பேரின் விண்ணப்பங்களுமே எடுத்துக்காட்டுவதாக இருந்தன.

வாக்களித்த மக்களைப் புறக்கணித்துவிட்டு, அதிகாரப் பதவிக்கும் அதன் மூலம் அடிக்கும் கொள்ளைக்குமாக மத்தியில் ஆட்சி செய்வோரிடம் அடிமைத்தன சேவகம் செய்யும் பழனிசாமியால் தங்கள் ஊருக்கே அவப்பெயர் என்றும், இனி அவரை எடப்பாடி பழனிசாமி என்று சொல்ல வேண்டாம் என்று சொந்த ஊர் மக்களே வேதனையோடு சொன்னதால், இனி அவரை பழனிசாமி என்று மட்டுமே அழைப்பது என முடிவெடுத்தேன். சொந்தத் தொகுதி மக்களையே கவனிக்காதவர், மற்ற தொகுதிகளின் மக்களை எங்கே கவனிப்பார்? அத்தனை அவமானங்களும் அவலமும் இன்னும் நான்கைந்து மாதங்களுக்குத்தான் என்பதையும், இருண்டு கிடக்கும் தமிழகத்தில் அதன் பிறகு விடியல் ஏற்படும் என்பதையும் எடப்பாடி தொகுதி மக்களிடம் தெரிவித்தேன். மிகுந்த நம்பிக்கையுடன் அவர்கள் ஆரவாரம் செய்து அன்புடன் வழியனுப்பி வைத்தனர்.

ஜனவரி 19ஆம் நாள் நாமக்கல் மாவட்டத்தில் அமைச்சர் தங்கமணி தொகுதிக்குட்பட்ட குமாரபாளையத்தில் நடந்த மக்கள் கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்றேன். மாவட்டக் கழகச் செயலாளர் மிகச் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். வழக்கம் போலவே, ஆண்களை விட பல மடங்கில் பெண்கள் திரண்டிருந்தனர். அவர்களிடமிருந்து வெளிப்பட்டதெல்லாம் கண்ணீர்க்  கோரிக்கைகள்.

சாயப்பட்டறைகளின் கழிவுகள் நிறைந்த பகுதி என்பதால் அனைத்து மக்களின் நலன் காக்கும் வகையில் பொது  சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என உறுதி மொழி கொடுத்து ஓட்டு வாங்கி வெற்றி பெற்ற தங்கமணி, தனக்கு வேண்டிய ஒரு சில பட்டறைகளின் நலனுக்காக மட்டும் சுத்திகரிப்பு நிலையம் அமைத்ததையும், பெருவாரியான மக்கள் இன்னமும் சாயக்கழிவுகளின் பாதிப்பிலிருந்து மீள முடியாமல் இருப்பதையும் பெண்கள் எடுத்துச் சொன்னார்கள்.

மதுவிலக்கு ஆயத்தீர்வை துறைக்கு பொறுப்பு வகிக்கும் தங்கமணியின் தொகுதியில் கட்டுப்பாடற்ற முறையில் சாராய வியாபாரம் நடப்பதையும், சந்துகளில் திருட்டுத்தனமாக மதுவிற்பனை நடப்பதையும், நள்ளிரவு கடந்த பிறகும் விதிகளுக்குப் புறம்பாக டாஸ்மாக் சரக்கும், போலி சரக்கும் விற்பனையாவதையும் அமைச்சரின் தொகுதியைச் சேர்ந்த பெண்களே கண்ணீருடன் எடுத்துச் சொன்னார்கள். கஞ்சா வரை விற்பனையாவதால் பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் எனப் பலரும் பாதிக்கப்படுவதால் இந்தக் கொடுமைக்கு முடிவு கட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

மின்மிகை மாநிலம் என்று கூசாமல் பொய் சொல்லும் தங்கமணி, மற்ற அமைச்சர்களைவிட தன்னை யோக்கியர் போலக் காட்டிக் கொள்வதில் முனைப்பாக இருப்பார். உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி வெளிப்படையாகவே ஊழல் செய்பவர் என்றால், தங்கமணி அதனைக் கமுக்கமாக-கச்சிதமாகச்  செய்பவர். இருவருக்குமே எச்சரிக்கை மணி அடிக்க மக்கள் தயாராக இருப்பதை கிராம சபைக் கூட்டங்களில் காண முடிந்தது.

குமாரபாளையத்தில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற ஒரு பெண்மணி, நீட் தேர்வால் தனது மகனின் மருத்துவப் படிப்பு நிறைவேறாமல் இறந்து போன கொடூரத்தை கண்ணீருடன் விளக்கி, வேறு எந்த பிள்ளைக்கும் அத்தகைய அவலம் ஏற்படக்கூடாது என்றும், மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவு நிறைவேறும் வகையில், கழக ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.

ஒவ்வொரு குடும்பத்தையும் பத்தாண்டுகால அ.தி.மு.க ஆட்சி எந்த அளவு சிதைத்துப் பாழ்படுத்தியிருக்கிறது என்பதை மக்களின் கண்ணீர் விளக்கங்கள் எடுத்துக் காட்டின. அந்தக் கண்ணீரைத் துடைக்கும் வலிமை தி.மு.க எனும் பேரியக்கத்திற்கு உண்டு என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருப்பதையும் கிராம சபைக் கூட்டம் உணர்த்தியது.

அமைச்சர் தங்கமணி தொகுதியின் அவலங்களை அறிந்து கொண்டு அங்கிருந்து புறப்பட்டு வரும்போது வழியெங்கும் மக்கள் திரண்டிருந்தனர். தேர்தல் பரப்புரை போல ஆங்காங்கே நிறுத்தி அவர்களின் அன்பை ஏற்றுக்கொண்டு, பேசினேன்.  திருச்செங்கோடு அருகே, இளம்பெண் ஒருவர் எங்கள் வாகன வரிசைக்குப் பக்கத்தில் வேகமாக ஓடிவந்தார். கார் புறப்பட்டு விட்ட நிலையிலும், மற்றவர்களைத் தள்ளிக்கொண்டு அவர் வந்ததைப் பார்த்தபோது கொஞ்சம் பதற்றமாக இருந்தது. அவரிடம், “ஏன் இத்தனை வேகமாக வர்றீங்க? கொஞ்சம் கவனக்குறைவு ஏற்பட்டாலும் ஆபத்தாகிடுமே” என்றேன். அவர் ஒரு புன்னகையுடன் ஒரு விசிட்டிங் கார்டை என்னிடம் அளித்துவிட்டு, இதைக் கொடுக்கத்தான் வந்தேன் என்று சொன்னார். கார் புறப்பட்டுவிட்டது.

அந்த கார்டில் என் படம் அச்சிடப்பட்டு, ‘தளபதி மல்லிகைப்பூ இட்லிக்கடை’ எனப் பெயர் இருந்தது. என் மீது கொண்ட அன்பால் அந்தக் குடும்பத்தினர் இப்படி பெயர் வைத்துள்ளனர். உடனே அந்த கார்டில் இருந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசினேன். அந்தப் பெண் மிகவும் நெகிழ்ச்சியுடன், தனது அப்பா இந்தப் பெயரில் கடை வைத்ததாகவும், அவர் இப்போது உயிருடன் இல்லாத நிலையிலும் கடை நன்றாக நடைபெறுவதாகவும், என் பெயரில் அவர்கள் கடை நடத்துவது பற்றி நான் தெரிந்துகொள்ள வேண்டும் என அவரது அப்பா விரும்பியதையும் சொன்னார். இப்போது அப்பாவின் ஆசை நிறைவேறிவிட்டது என்றும் நெகிழ்ச்சியுடன் சொன்னர். அவருடைய சகோதரியும் குடும்பத்தாரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தனர். குடும்பக் கட்சி என்று விமர்சிக்கிறவர்களுக்கு அந்த இளம்பெண் கொடுத்த பதிலடியாகவே எனக்கு அது தெரிந்தது.

இணையிலா வெற்றியைக் குவித்து தலைவர் கலைஞரின் ஓய்விடத்தில் காணிக்கையாக்க ஆயத்தமாவீர்! - மு.க.ஸ்டாலின் மடல்

நாமக்கல் மாவட்டத்திலிருந்து புறப்பட்டு வரும்போது, திருச்சி மாவட்ட எல்லையில் கழகத்தின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவும் மாவட்டக் கழக நிர்வாகிகளும் வரவேற்பளித்தனர். முதன்மைச் செயலாளர் தொடர்ந்து பயணித்தார். அன்று மாலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கரின் விராலிமலை தொகுதிக்குட்பட்ட .... இடத்தில் கிராமசபைக் கூட்டம் நடந்தது. புதுக்கோட்டை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் செல்லபாண்டியன் மற்றும் நிர்வாகிகள் எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர். செய்தித் தொடர்புச் செயலாளர் பி.டி.அரசகுமார் மிகச் சிறப்பான முறையிலே எழுலார்ந்த ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.

குட்கா-குவாரி-கொரோனா என எங்கும்-எதிலும் ஊழல் ஒன்றே இலட்சியமாகக் கொண்டு வாழும் அமைச்சர்  விஜயபாஸ்கரின் தகிடுதத்தங்களைத் தொகுதி மக்கள் நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறார்கள் என்பதை அந்தக் கூட்டத்தில் காண முடிந்தது. முகக்கவசத்தில் கூட அடக்க விலையைவிட மிக அதிக விலை வைத்து, கொள்ளை அடிக்கப்பட்டிருப்பதை எடுத்துக் கூறினார்கள். அதுபோலவே 4000 ரூபாய் மதிப்புள்ள ஸ்பிரேயர் கருவிகளை 15ஆயிரம் ரூபாய் விலைக்கு வாங்கி கொள்ளை அடித்திருப்பதை காணொலி ஆதாரம் வாயிலாக மக்களிடம் விளக்கினேன்.

புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து புறப்பட்டு திண்டுக்கல் மாவட்ட எல்லைக்கு வந்தபோது மாவட்ட கழகச் செயலாளர்கள் சக்கரபாணி, ஐ.பி.செந்தில்குமார் ஆகியோரும் தேனி.. . மாவட்ட கழகச் செயலாளர் கம்பம் ராமகிருஷ்ணன் அவர்களும் சிறப்பான வரவேற்பை அளித்தனர்.  மறுநாள் (ஜனவரி 20) அன்று தேனி மாவட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் போடி தொகுதிக்குட்பட்ட ..... என்ற இடத்தில் நடந்த கிராமசபைக் கூட்டத்தினை எழுச்சிமிகுந்த  வகையில் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார் மாவட்ட கழகச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன்.

தர்மயுத்தம் நடத்தி, அம்மையார் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்திற்காக விசாரணைக் கமிஷன் கோரிய ஓ.பி.எஸ், ஏன் இதுநாள்வரை அந்த கமிஷன் சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்று  நான் கேட்டபோது, மக்களும் அதே கேள்வியைக் கேட்பதுபோல வரவேற்றனர். அதுமட்டுமின்றி, தன்னைத் தேர்ந்தெடுத்து அனுப்பிய மக்களுக்கு துணை முதலமைச்சர் எதுவும் செய்யவில்லை என்பதை ஆதாரத்துடன் எடுத்துரைத்தேன். என்னைவிட அதிகமாக அங்கு வந்திருந்த மக்கள் எடுத்துரைத்தனர். ஒரு பெண்மணி மிகவும் கோபத்துடன், ஓ.பி.எஸ்ஸூக்கு எதிரான வார்த்தையை வெளிப்படுத்த, அவருடைய உணர்வை மதித்த நான், அந்த வார்த்தையை ஏற்கவில்லை. அதனை வாபஸ் வாங்க வேண்டும் என வலியுறுத்தினேன். அந்தப் பெண்மணியும் என் வேண்டுகோளை ஏற்று அந்தக் கடுமையான வார்த்தையை வாபஸ் பெற்றுக்கொண்டார். ஜனநாயகப் போர்க்களமான தேர்தல் களத்தில் ஓ.பி.எஸ்ஸை வீழ்த்துவதற்கு அவரது சொந்தத் தொகுதி மக்கள் ஆயத்தமாகிவிட்டார்கள் என்பதை போடி தொகுதியில் நடந்த கிராம சபைக் கூட்டம் காட்டியது.

தேனி மாவட்ட நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு அங்கே சிறிது நேரம் ஓய்வெடுத்த போது, கழகத்தின் மூத்த தொண்டரான கம்பத்தை சேர்ந்த ராமசாமி என்பவர் சந்திக்க வந்தார். 90 வயதைக் கடந்த அவர் கழகத்தின் அனைத்துப் போராட்டங்களிலும் பங்கேற்றவர்; சிறை சென்றவர். ராஜீவ்காந்தி படுகொலையின்போது அவரது வீட்டை வன்முறையாளர்கள் தாக்கியுள்ளனர். எல்லாவற்றையும் எதிர்கொண்டு கழகமே உயிர் மூச்சு என வாழும் அவருக்கு நான் பொற்கிழி வழங்கியதையும், அவரைப் பற்றி உங்களில் ஒருவன் மடலில் ஏற்கனவே குறிப்பிட்டிருந்ததையும் நினைவு படுத்தி நெகிழ்ச்சியடைந்தார். இத்தகைய தூய தொண்டர்களை ஆயிரமாயிரமாய்-லட்சோபலட்சபமாய் பெற்றிருக்கும் பேரியக்கம்தான் தி.மு.கழகம்.

தேனியை அடுத்து மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் கிராமசபை கூட்டத்தைக் கழகம் நடத்தியது. அமைச்சர் உதயகுமாரின் தொகுதிக்குப்பட்ட ....... இடத்தில் கிராமசபைக்  கூட்டம். தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் மணிமாறனுடன்,  வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் மூர்த்தியும் இணைந்து வழிநெடுக வரவேற்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். திருமங்கலத்தில் நடந்த கிராமசபைக் கூட்டத்தில் திரண்டிருந்த பெண்கள் கூட்டத்தைக் கடந்து மேடைக்குச் செல்வதற்கே அதிகநேரம் ஆனது. அந்தளவுக்கு பெருங்கூட்டம்; பேரார்வம்.

இணையிலா வெற்றியைக் குவித்து தலைவர் கலைஞரின் ஓய்விடத்தில் காணிக்கையாக்க ஆயத்தமாவீர்! - மு.க.ஸ்டாலின் மடல்

ஆண்டாண்டு காலமாகத் தாங்கள் ஏமாற்றப்படுவதை-தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததை எடுத்துக்காட்டி பெண்கள் குமுறினர். அவர்களை ஆறுதல்படுத்தி-நம்பிக்கையளித்தேன். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையாவிட்டால் தனது பதவியை ராஜினாமா செய்வதாகச் சொன்னவர் அமைச்சர் உதயகுமார். அடிக்கல் நாட்டியதுடன் அப்படியே கிடக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை திட்டத்தை நிறைவேற்ற அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை; ராஜினாமாவும் செய்யவில்லை. அது, சுயமரியாதை கொண்டவர்களின் பொறுப்புணர்ச்சி. அடிமைக்கூட்டத்திடம் அதனை எதிர்பார்க்க முடியாது என்பதையும், 4 மாதத்தில் நடைபெறவுள்ள தேர்தலில் உதயகுமார் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் முதலமைச்சரும் மக்களால் தோற்கடிக்கப்படுவார்கள் என்பதையும்  எடுத்துரைத்தேன். அதனை உறுதி செய்வதுபோல மக்களின், குறிப்பாக பெண்களின் ஆரவாரம் அமைந்தது.

16ஆயிரத்து500 கிராமசபைக் கூட்டங்கள் எனக் கழகம் தீர்மானித்த நிலையில், எதிர்பார்ப்புக்கும் அதிகமாக பல இடங்களில் மக்களின் ஆதரவுடன் எழுச்சிமிகு கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. ‘அ.தி.மு.க.வை நிராகரிப்போம்’ என்கிற கழகத்தின் தீர்மானத்திற்கு இதுவரை 1கோடியே 5 லட்சம் பேர் கையெழுத்திட்டு ஒருமனதுடன்  ஆதரவளித்துள்ளனர். மனதளவில் இதே தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கும் தமிழக மக்களின் எண்ணிக்கை இதைவிடவும் அதிகம்.

ஆட்சி மாற்றத்திற்குத் தமிழக மக்கள் தயாராகிவிட்டார்கள் என்பதையும், அவர்களின் ஒரே நன்னம்பிக்கை தி.மு.கழகமும் அதன் கூட்டணியுமே என்பதையும் இந்த கிராமசபை கூட்டங்கள் நிரூபித்திருப்பதால், நேற்று (ஜனவரி 21) நடைபெற்ற மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில், அ.தி.மு.கவை நிராகரிப்போம் என்ற மக்களின் பேராதரவைக் கொண்டு, சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று-மக்களுக்குத் தொண்டூழியம் செய்திடும் நல்லாட்சியை-திறமையுடனும்-வெளிப்படைத்தன்மையுடனும்-ஊழலற்றதாகவும் -உங்களில் ஒருவனான என் தலைமையில் அமைத்திட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தேர்தல் களத்தை மட்டுமின்றி, அனைத்து மக்களும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் கருத்தில் கொண்டு விவசாயிகளை வஞ்சிக்கும் மத்திய அரசின் வேளாண் திருத்தச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க. அமைச்சரவை சகாக்கள் குறித்து தி.மு.க அளித்த 97 பக்க ஊழல் புகார்கள் தொடர்பாக  தமிழக ஆளுநர் உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரியும், பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரின் விடுதலையை முன்னிறுத்தியும், மழையால் விளைச்சலை இழந்துள்ள விவசாயிகளுக்கும்-நிவர் மற்றும் புரெவி புயல்களால் பாதிக்கப்பட்டோருக்கும் அறிவிக்கப்பட்டுள்ள இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி உரிய காலத்திற்குள் வழங்க வேண்டும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கிராம சபைக் கூட்டங்களில் மக்களின் எழுச்சியைப் பற்றி மாவட்டக் கழகச் செயலாளர்கள் பலரும் எடுத்துரைத்தனர். தலைமையின் உத்தரவை சிரமேற்கொண்டு தமிழகம் தழுவிய அளவில் மக்கள் கிராம சபைக் கூட்டங்களை வெற்றிகரமாக நடத்தி, ஆட்சி மாற்றத்தை உறுதி செய்திருக்கும் மாவட்ட கழகச் செயலாளர்கள்-பொறுப்பாளர்கள் அனைவருக்கும் அவர்களுக்குத் துணையாக இருக்கும்  ஒன்றிய-நகர-பேரூர்-கிளைக்கழகச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள், அனைத்து நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் நம் பக்கமே; நாம் மக்கள் பக்கம் என்பதை இந்த கிராம சபைக் கூட்டங்கள் மெய்ப்பித்திருக்கின்றன.

ஜனவரி 23 அன்று திருவள்ளூர் மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட  திருத்தணி சட்டமன்றத் தொகுதியிலும், சென்னை தெற்கு மாவட்டம் மதுரவாயல் சட்டமன்றத் தொகுதியிலும் நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டங்களில் மக்களை சந்திக்கிறேன். அத்துடன், மக்கள் கிராம சபைக் கூட்டங்கள் நிறைவடைகின்றன. மக்களுடனான கழகத்தின் சந்திப்பும், கழகத்துடனான மக்களின் பேரன்பும் எல்லையின்றித் தொடர்கின்றன. விரைவில், அடுத்த கட்டப் பரப்புரை குறித்த முக்கிய அறிவிப்பினை வெளியிட இருக்கிறேன்.

தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளே.. உங்களை மட்டும் நம்பியே உங்களில் ஒருவனான நான் இதனை வெளியிடப் போகிறேன். 200 தொகுதிகளுக்கு குறையாத இணையிலா வெற்றியைக் குவித்து, அதனை தலைவர் கலைஞரின் ஓய்விடத்தில் காணிக்கையாக்கிடும் ஒற்றை இலக்குடன் அடுத்த கட்டப் பரப்புரைக்கு ஆயத்தமாவீர்!

banner

Related Stories

Related Stories