மு.க.ஸ்டாலின்

“எடப்பாடி மக்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க இனி பழனிசாமி என்றுதான் சொல்லப்போகிறேன்” - மு.க.ஸ்டாலின் பேச்சு!

“குட்கா ஊழல், கொரோனா ஊழல் என்று தனது தொகுதிக்கும், ஊருக்கும் கெட்ட பெயரை வாங்கித் தந்தவர் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியுள்ளார்.

“எடப்பாடி மக்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க இனி பழனிசாமி என்றுதான் சொல்லப்போகிறேன்” - மு.க.ஸ்டாலின் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

“பழனிசாமி அவர்களை விமர்சிக்கும்போது எடப்பாடி என்று சேர்த்துச் சொல்லி விமர்சிக்க வேண்டாம்; அது எங்கள் ஊருக்கே அவமானம் என்ற எடப்பாடி மக்களின் கோரிக்கையை ஏற்று, இனி பழனிசாமி என மட்டுமே அழைக்க முடிவு செய்திருக்கிறேன்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியுள்ளார்.

இன்று (19-01-2021) மாலை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், புதுக்கோட்டை மாவட்டம் – விராலிமலை தொகுதிக்குட்பட்ட விராலிமலை ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் கிராமசபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

மக்கள் கிராமசபைக் கூட்டத்தைத் தொடங்கி வைத்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:

இப்போது மக்கள் கிராமசபைக் கூட்டத்தைத் தொடங்கப் போகிறோம். இதைக் கிராம சபைக் கூட்டம் என்று சொல்ல முடியாது. இது ஒரு மாநாடு போல, அதுவும் மகளிர் மாநாடாக இந்த மாநாடு அமைந்திருக்கிறது.

இதுவரைக்கும் சுமார் 25 மக்கள் கிராம சபைக் கூட்டத்தை நான் நடத்தி முடித்து இருக்கிறேன். எல்லா கிராமசபை கூட்டங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, விராலிமலை தொகுதியில் நடைபெறும் இந்தக் கூட்டம் தான் முதல் இடத்திற்கு வந்திருக்கிறது. இதை நிச்சயமாக அடுத்த மாவட்டம் வெல்ல முடியாது என்று தான் நான் நினைக்கிறேன். இதனைவிட அதிக மக்களை, மக்கள் கிராம சபைக் கூட்டங்களில் அடுத்த மாவட்டத்தினர் பங்கேற்க வைத்தால் வாழ்த்துச் சொல்வேன். அந்தளவிற்கு இன்றைக்கு நீங்கள் மிகுந்த எழுச்சியோடு, உணர்ச்சியோடு, ஆர்வத்தோடு, ஆரவாரத்தோடு வந்திருக்கிறீர்கள். உங்கள் இல்ல நிகழ்வுக்கு வந்திருப்பதுபோல் குடும்பப் பாசத்துடன் வந்திருக்கிறீர்கள்.

இந்த மக்கள் கிராம சபைக் கூட்டத்தைத் தமிழ்நாடு முழுவதும் நடத்திக் கொண்டிருக்கிறோம். ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னால் ஊராட்சி சபைக் கூட்டத்தை நாம் நடத்தினோம்.

தமிழ்நாட்டில் 12,600-க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் இருக்கின்றன. அங்கெல்லாம் கிராம சபைக் கூட்டத்தைத் தமிழ்நாடு முழுவதும் நடத்தினோம். அந்த காரணத்தினால் நாம் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றோம். சாதாரண வெற்றியல்ல, இந்திய நாடாளுமன்றத்தில் 3-வது பெரிய கட்சியாக நம்முடைய தி.மு.க. இன்றைக்கு உட்கார்ந்திருக்கிறது.

அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. முக்கியமான காரணம் கிராமசபைக் கூட்டம் தான். அதேபோல வருகிற சட்டமன்றத் தேர்தலிலும் நாம் வெற்றி பெறப்போவது உறுதி. மிகப்பெரிய வெற்றி பெறப் போகிறோம். அதற்கு இப்போதே எழுதிக் கொடுத்து விடலாம். ஏன் இவ்வாறு நான் தெம்பாக, துணிச்சலாகச் சொல்கிறேன் என்றால், இந்தப் பெண்கள் கூட்டமே அதற்குச் சாட்சி என்று நான் நினைக்கிறேன்.

இந்த நிலையில் நீங்கள் இங்கே மிகவும் உணர்ச்சியோடு, ஆசையோடு, அன்போடு வந்திருக்கிறீர்கள். வந்திருக்கும் உங்களையெல்லாம் முதலில் வருக… வருக… வருக… என வரவேற்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

இந்த நிகழ்ச்சியை நான் உள்ளபடியே எதிர்பார்க்கவில்லை. மக்கள் கிராமசபைக் கூட்டம் என்றால் அது ஒரு பொதுக்கூட்டம் போல அல்லது 10000 பேர் அல்லது 20000 பேர் இருப்பார்கள் என்று நினைத்துத் தான் நான் வந்தேன். ஆனால் இங்கு வந்து பார்த்தால் 1,00,000 பேர் அதிலும் 99% பேர் பெண்கள் தான் இருக்கிறார்கள்.

இந்த மக்கள் கிராம சபைக் கூட்டத்தை இந்த அளவிற்கு மிகச் சிறப்பான வகையில் எழுச்சியோடு ஏற்பாடு செய்ய பாடுபட்ட அத்தனை பேருக்கும் என்னுடைய நன்றியை - வணக்கத்தை - தலைமைக் கழகத்தின் சார்பில் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இந்த கிராம சபைக் கூட்டத்தைத் தமிழ்நாடு முழுவதும் நடத்த வேண்டும் என்று கடந்த மாதம் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டி, நம்முடைய ஒன்றியச் செயலாளர்கள், நகரச் செயலாளர்கள், பேரூர் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அத்தனை பேரையும் அழைத்து முடிவு செய்து நடத்தத் தொடங்கினோம்.

முதல் நாளே தடை போட்டார்கள். எடப்பாடி தலைமையில் இருக்கக்கூடிய - எடப்பாடி என்று நான் இனிமேல் சொல்லமாட்டேன். நான் நேற்றைக்கு எடப்பாடி தொகுதிக்குச் சென்றிருந்தேன். அங்குச் சென்றிருந்த போது, அங்கு இருந்தவர்கள் என்னிடத்தில், “அய்யா எங்கள் ஊரை அசிங்கப்படுத்த வேண்டாம். எப்போது பார்த்தாலும் பழனிசாமி அவர்களை விமர்சனம் செய்யும்போது எடப்பாடியையும் சேர்த்து விமர்சனம் செய்கிறீர்கள். இனிமேல் எடப்பாடி என்ற பெயரைச் சொல்லக் கூடாது, அப்படிச் சொன்னால் எங்கள் ஊருக்கே அவமானம். எனவே பழனிசாமி என்று சொல்லுங்கள்” என்று சொல்கிறார்கள்.

எனவே, இனிமேல் முதலமைச்சரை எடப்பாடி பழனிசாமி என்று சொல்ல மாட்டேன். பழனிசாமி என்று தான் சொல்லப் போகிறேன். எனவே நீங்களும் அவரை பழனிசாமி என்றே சொல்லுங்கள். வேண்டுமென்றால் மாண்புமிகு முதலமைச்சர் பழனிசாமி என்று சொல்லுங்கள். இனிமேல் எடப்பாடி என்று சொல்லி அந்த ஊருக்கு ஒரு களங்கத்தை ஏற்படுத்த வேண்டாம். அதுதான் அந்த ஊரைச் சார்ந்த தோழர்களின் வேண்டுகோள். அதை நாம் நிறைவேற்ற வேண்டும்.

எதற்காக சொல்கிறேன் என்றால், கிராம சபைக் கூட்டத்தை நடத்தக்கூடாது என்று தடை போட்டார்கள். பின்னர் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடத்துகிறோம் என்று அறிவித்தேன். அதற்குப் பிறகு தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

இன்னும் 4 மாதங்கள் தான் தேர்தலுக்கு இருக்கிறது. 4 மாதங்கள் பொறுத்துக்கொள்ளுங்கள். அந்த நான்கு மாதத்திற்குள் பெரிய மாற்றத்தைத் தமிழ்நாட்டில் உருவாக்கித் தரப் போகிறீர்கள். உள்ளபடியே சொல்ல வேண்டும் என்றால் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் எங்களுக்கு இருக்கும் நம்பிக்கையை விட உங்களுக்குத் தான் அதிகமான அளவிற்கு நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. நாட்டு மக்களுக்குத்தான் அதிகமான அளவிற்கு நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

இங்கு லட்சக்கணக்கில் கூடி இருக்கிறீர்கள். இந்த காட்சியைப் பார்க்கும் போது நிச்சயமாகச் சொல்கிறேன். தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியை உருவாக்குவதற்கு நீங்கள் எல்லாம் தயாராகி விட்டீர்கள் என்று தான் எனக்குத் தோன்றுகிறது.

இந்த மக்கள் கிராம சபைக் கூட்டத்தை நடத்துவதற்குக் காரணம், உங்கள் ஊராட்சி பகுதிகளில் இருக்கக்கூடிய பிரச்சினைகள், அதாவது குடிநீர் வசதி, சாலை வசதி, மருத்துவமனை, பள்ளிக்கூடம், பேருந்து வசதி, பட்டா பிரச்சினை, முதியோர் உதவித்தொகை, 100 நாள் வேலைத் திட்டம், வேலைவாய்ப்பு. இதுபோன்ற பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்.

இதற்கெல்லாம் பல கோடி நிதி ஒதுக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த பிரச்சினைகளை எல்லாம் பொறுப்பில் இருக்கும் பிரதிநிதிகள் செய்து முடிக்க வேண்டும். ஆனால் இன்றைய ஆட்சியில் நடந்ததா? இல்லை.

உள்ளாட்சித் தேர்தலையே நாம் நீதிமன்றத்திற்குச் சென்று, முறையிட்டு, அதற்குப் பிறகு வழக்குப் போட்டு, விசாரணை நடந்து, அதற்குப் பிறகு தான் நடத்தினர். அதுவும் முழுமையாக நடந்திருக்கிறதா? இல்லை.

இந்த உள்ளாட்சி அமைப்பு தான் இந்த பிரச்சினையைத் தீர்த்து வைக்க வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் சொன்னோம். இப்போது சட்டமன்றத் தேர்தல் வரப்போகிறது.

இப்போது தமிழ்நாட்டில் உள்ளாட்சித்துறை அமைச்சர் ஒருவர் இருக்கிறார். உள்ளாட்சித்துறை அமைச்சர் என்று நான் சொல்ல மாட்டேன். எனக்கு அவமானமாக இருக்கிறது. நானும் அந்த உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்திருக்கிறேன். ஆனால் இப்போது உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்ததற்காக வெட்கப்படுகிறேன். ஏன் என்றால் அது ஊழலாட்சித்துறையாக மாறிவிட்டது. வேலுமணி தான் அந்த ஊழல் துறை அமைச்சர்.

இந்த நிலையில் தான் உங்களுடைய குறைகளைக் கேட்பதற்காக நான் வந்திருக்கிறேன். 10 பேரைப் பேச வைப்பதற்கு இங்கே பெயர்கள் எல்லாம் அவர்களிடத்தில் கேட்டுப் பெற்றிருக்கிறோம். அந்த 10 பேரும் சுருக்கமாக பேசவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்."

இவ்வாறு மக்கள் கிராம சபைக் கூட்டத்தைத் தொடங்கி வைத்து கழகத் தலைவர் அவர்கள் உரையாற்றினார்.

மக்கள் கிராம சபைக் கூட்டத்தை நிறைவு செய்து தி.மு.க தலைவர் அவர்கள் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:

“மீண்டும் உங்களுக்கெல்லாம் என்னுடைய வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் தொடக்கத்தில் கூறிய கருத்துகளை எல்லாம் புரிந்துகொண்டு, இங்கு பேசியவர்கள் சுருக்கமாக பேசியிருக்கிறீர்கள்.

மகளிர் சுய உதவி குழுக்கள் - 100 நாள் வேலைத் திட்டம் - காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் ஆகியவற்றில் உள்ள பிரச்சினைகள் குறித்து எடுத்து சொன்னீர்கள். மருத்துவமனை இல்லை; தீ விபத்து ஏற்படுகிறது; மேம்பாலம் வேண்டும் என்ற கோரிக்கைகளை எல்லாம் வைத்திருக்கிறீர்கள்.

கல்விக் கடன் பற்றி நினைவு படுத்தியிருக்கிறீர்கள். விவசாயியான ஒரு சகோதரர் பேசுகிறபோது, தி.மு.க ஆட்சி காலத்தில், கலைஞர் முதலமைச்சராக இருந்தபொழுது என்னென்ன செய்தார்? இப்போது இந்த அ.தி.மு.க ஆட்சியில் என்னென்ன கொடுமைகள் நடந்து கொண்டிருக்கிறது? என்பதையெல்லாம் சுட்டிக்காட்டினார்.

இந்த மாவட்டத்திற்கு, குறிப்பாக இந்த விராலிமலை தொகுதிக்கு, தி.மு.க. ஆட்சியில் இருந்தபோழுது ஏராளமான திட்டங்களை செய்து இருக்கிறது என்பதை நீங்கள் மறக்கவில்லை. அதை நீங்கள் சுட்டிக்காட்டி இருக்கிறீர்கள்.

இந்த புதுக்கோட்டை மாவட்டமே தனி மாவட்டமாக தி.மு.க ஆட்சிகாலத்தில் தான், கலைஞர் ஆட்சிக்காலத்தில் தான் பிரிக்கப்பட்டது. அது ஒரு பெரிய வரலாறு.

விராலிமலை சுப்பிரமணியசாமி கோயில் தேரோட்டத்தை 22 ஆண்டுகளுக்குப் பிறகு நடத்திக் காட்டியதும் கலைஞருடைய ஆட்சி தான்; கலைஞர் தான் என்பதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.

இவ்வாறு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு தனி கவனத்தைச் செலுத்தி கலைஞர் அவர்கள் ஆட்சியில் இருந்தபோது நன்மைகளைச் செய்திருக்கிறார்கள். இப்போது இந்த 10 ஆண்டுகளாக நீங்கள் பார்க்கிறீர்கள்.

விஜயபாஸ்கர் இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருக்கிறார். இதுவரைக்கும் ஏதாவது நடந்திருக்கிறதா? தேர்தல் நேரத்தில் எத்தனையோ வாக்குறுதிகளை எல்லாம் அளித்தார். ஏதாவது செய்திருக்கிறாரா?

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், இலுப்பூர் அன்னவாசல் டவுன் பஞ்சாயத்திற்கு மருத்துவமனை கொண்டு வந்தது தி.மு.க. ஆனால், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருப்பவர் எந்த அடிப்படை வசதிகளையும் அந்த மருத்துவமனைக்குச் செய்து கொடுக்கவில்லை. அதன் தரத்தைக் கூட உயர்த்தி கொடுக்கவில்லை.

அதேபோல விராலிமலை, திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இருக்கிறது. அங்கு அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. அதை தடுக்க வேண்டும். அந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவதற்கு ஒரு மருத்துவமனை கூட அமைக்கவில்லை என்பது வேதனைக்குரிய ஒன்று. விராலிமலையில் ஒரு கல்லூரி கூட கொண்டுவரப்படவில்லை. இது தான் இன்றைக்கு இருக்கக்கூடிய நிலை என்பது உங்களுக்குத் தெரியும்.

சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராகவும் இருக்கும் விஜயபாஸ்கர் அவர்களை யார் மறந்தாலும், நான் மறக்க மாட்டேன். ஏனென்றால் அவருக்கு ஒரு பட்டமே நான் தான் கொடுத்து இருக்கிறேன். என்ன பட்டம் என்று உங்களுக்கு தெரியும். ‘குட்கா புகழ்’ என்று ஒரு பட்டமே நான் தான் கொடுத்தேன்.

பொதுவாக எல்லோரும் பிறந்த ஊருக்கு, தங்களைத் தேர்ந்தெடுத்த தொகுதி மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும், நல்ல பெயர் எடுக்க வேண்டும். ஆனால், பிறந்த ஊருக்கும், அவரைத் தேர்ந்தெடுத்த இந்த தொகுதிக்கும் கெட்ட பெயரைச் சம்பாதித்துக் கொடுத்திருப்பவர்தான் இன்றைக்கு இருக்கும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் என்பது நாட்டிற்கும் நன்றாக தெரியும். உங்களுக்கும் நன்றாகத் தெரியும்.

இந்த ஆட்சி எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதற்கு எத்தனையோ உதாரணங்கள் சொல்லலாம். ஆனால் விஜயபாஸ்கரிடம் இருந்துதான் அதிகமான உதாரணங்களைச் சொல்ல முடியும்.

கொரோனா காலத்தில் என்ன கொடுமை எல்லாம் நடைபெற்றது. முதன்முதலில் சட்டமன்றத்தில் நான் தான் இதுபோல கொரோனா வரக்கூடிய சூழல் இருக்கிறது. என்ன முன்னெச்சரிக்கை - பாதுகாப்பு நடவடிக்கை எடுத்து இருக்கிறீர்கள்? என்று சட்டமன்றத்தில் நான் கேட்டேன். அருகிலிருந்த அண்ணன் துரைமுருகன் அவர்களும் கேட்டார். நம் சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் தொடர்ந்து அதை வலியுறுத்திப் பேசினார்கள்.

ஆனால் விஜயபாஸ்கர் எழுந்து, “அது எல்லாம் நம்ம ஊருக்கு வராது. அம்மா ஆட்சி. இங்கு வராது. கவலைப்படாதீர்கள்” என்று சொன்னார்.

ஒரு உயிரை கூட நாங்கள் இழக்க மாட்டோம் என்று சொன்னார்கள். இன்றைக்கு எத்தனை உயிர்களை இழந்திருக்கிறோம். தமிழ்நாட்டை பொறுத்தவரைக்கும் 8 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கில் இறந்திருக்கிறார்கள்.

முகக் கவசம் கொடுங்கள். அவர்கள் பாதுகாப்பிற்கு ஏதாவது கொடுங்கள் என்று கேட்டதற்கு, நையாண்டியுடன் அதெல்லாம் சர்க்கரை நோய், இருதய நோய் இருப்பவர்களுக்கு தான் வரும். எங்களுக்கெல்லாம் வராது என்று கிண்டல் செய்தார்கள்.

அந்தக் கொரோனா காலத்திலும், இங்கு ஒரு சகோதரி மாஸ்க்கை காட்டி அதில் என்ன ஊழல் நடைபெற்றது என்று சொன்னார். நானும் இங்கு மாஸ்க்கை காண்பித்தேன். ப்ளீச்சிங் பவுடர், கிருமி நாசினி தெளிப்பான் இதில் நடக்கின்ற ஊழலையும் சொன்னேன். இப்படி கொரோனா காலத்திலும் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கும் ஆட்சிதான் இன்றைக்கு தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஆர்.கே.நகர் தேர்தல் பற்றி உங்களுக்குத் தெரியும். அந்த ஆர்.கே.நகர் தேர்தலில் பணப் பட்டுவாடா நடைபெற்றது என்று நாங்கள் இல்லை தேர்தல் கமிஷனே புகார் கொடுத்தது. உயர்நீதிமன்றம் வரைக்கும் சென்றது. அதற்குப் பிறகு விசாரணை நடைபெற்றது.

அதற்குப் பிறகு, விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. அதில் எடப்பாடி உட்பட 8 அமைச்சர்கள் மூலமாக 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா செய்திருப்பதைக் கண்டுபிடித்து, அங்கு இருந்த ஆதாரங்களை எல்லாம் கைப்பற்றினார்கள்.

அந்த வருமான வரித்துறை சோதனை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, தொலைக்காட்சிகளில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். விஜயபாஸ்கருடைய ஓட்டுனர் சில ஆதாரங்களை வெளியில் எடுத்து வந்து, சுவற்றுக்கு வெளியே தூக்கிப் போட்ட காட்சிகள் எல்லாம் ஒளிபரப்பானது. நான் சொல்லவில்லை, அகில இந்திய அளவில் இருக்கக்கூடிய அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் வந்தது.

இப்படி ஒரு கொடுமை. இந்தக் கொடுமைகளிலிருந்து தமிழ்நாட்டைக் காப்பாற்றுவதற்காகத்தான் இன்றைக்கு உங்களையெல்லாம் தேடி இந்த கிராம சபைக் கூட்டத்தின் மூலமாக இந்த பிரச்சனைகளை எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

விலைவாசியைப் பற்றி இங்கு ஒரு சகோதரி பேசுகிறபோது சொன்னீர்கள். தி.மு.க. ஆட்சியிலும் விலைவாசி உயர்ந்தது. அதை நான் மறுக்கவில்லை. ஆனால் அது கட்டுப்படுத்தப்பட்டது. எவ்வாறு?

விலைவாசியை உயர்ந்த நேரத்தில் சேமிக்கின்ற வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தோம். சுயஉதவிக் குழு என்ற அமைப்பை ஏற்படுத்தினோம். 100 நாள் வேலைத்திட்டத்தை ஏற்படுத்தினோம். இப்படி பல திட்டங்களை ஏற்படுத்தி சேமிப்பிற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தோம்.

இன்றைக்கு விலைவாசியை பார்த்தீர்கள் என்றால் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி இருந்தபொழுது சிலிண்டர் 250 ரூபாய். இப்பொழுது 780 ரூபாய். துவரம் பருப்பு தி.மு.க. ஆட்சியில் ஒரு கிலோ 38 ரூபாய். இப்பொழுது 92 ரூபாய். உளுத்தம்பருப்பு தி.மு.க. ஆட்சியில் ஒரு கிலோ 60 ரூபாய். ஆனால் இப்பொழுது 120 ரூபாய். பாமாயில் ஒரு லிட்டர் தி.மு.க. ஆட்சியில் 48 ரூபாய். இப்பொழுது 160 ரூபாய். சர்க்கரை ஒரு கிலோ தி.மு.க. ஆட்சியில் 18 ரூபாய். இப்பொழுது 40 ரூபாய். கடலை பருப்பு ஒரு கிலோ தி.மு.க. ஆட்சியில் 34 ரூபாய். இப்பொழுது 80 ரூபாய்.

அதுமட்டுமின்றி, பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு அவ்வப்போது உயர்த்தும். ஆனால் அப்போது அதற்கு விதிக்கும் விற்பனை வரியை கலைஞர் அவர்கள் குறைத்து ஓரளவிற்கு விலை உயர்வைக் கட்டுப்படுத்தினார். ஆனால் இன்றைக்கு அது நடக்கிறதா? இல்லை. இதைத்தான் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.

இப்படிப்பட்ட நிலையில் தான் நான் உங்களை எல்லாம் கேட்டுக் கொள்ள விரும்புவது, இன்னும் 4 மாதங்களில் தேர்தலைச் சந்திக்கப் போகிறோம். சந்திக்கக்கூடிய தேர்தலில் ஒரு சரியான முடிவை நீங்கள் எடுத்தாக வேண்டும். அதற்காக தான் இந்த மக்கள் கிராம சபைக் கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்.

அம்மையார் ஜெயலலிதா அவர்கள் மறைந்தது உங்களுக்கு தெரியும். அவர் எப்படி மறைந்தார் என்பது உங்களுக்கு தெரியுமா? அவருக்கு என்ன சிகிச்சை தரப்பட்டது என்று தெரியுமா? யாருக்கும் தெரியாது.

இன்னும் விசாரணைக் கமிஷன் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. 3 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. நீங்கள் தயவு செய்து நினைத்து பாருங்கள். சாதாரணமாக ஒருவர் இறந்துவிட்டார் என்றால் எவ்வாறு இறந்தார் என்று நாம் கேட்கிறோம்.

ஆனால் தமிழ்நாட்டின் முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் இறந்து இருக்கிறார். நமக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். நமக்கும் அவருக்கும் வாக்குகளில் 1.1% வித்தியாசம் தான். அதனால் நாம் ஆட்சிக்கு வரமுடியவில்லை. அவர்கள் ஆட்சிக்கு வந்து விட்டார்கள்.

எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது தான் இறந்தார். பேரறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்தபோது தான் இறந்தார். எம்.ஜி.ஆர். அவர்கள் மறைந்தபோது மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக ஹெச்.வி.ஹண்டே அவர்கள் இருந்தார். பேரறிஞர் அண்ணா மறைந்தபோது மக்கள் நல்வாழ்வுத் அமைச்சராக இருந்தவர் சாதிக் பாட்சா அவர்கள். அவர்கள்தான் காலையிலும் மாலையிலும் முதலமைச்சரின் உடல்நிலை குறித்த விவரங்களைச் சொல்வார்கள்.

அதேபோல அம்மையார் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது யார் சொல்ல வேண்டும்? மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருக்கும், இந்த ஊரைச் சேர்ந்த குட்கா புகழ் விஜயபாஸ்கர் தான் சொல்லியிருக்க வேண்டும்.

ஆனால் அவர் சொல்லவில்லை. மற்றவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் விருப்பம் போல சொன்னார்கள். “அம்மா இட்லி சாப்பிட்டார். அம்மா காபி சாப்பிட்டார். அம்மா தொலைக்காட்சி பார்த்தார். அம்மா கையெழுத்து போட்டார்“ என்று சொன்னார்களே தவிர அவரது உடம்புக்கு என்ன? என்ன சிகிச்சை நடைபெற்றது? இதுவரை யாருக்கும் தெரியாது.

அதற்கு பிறகு ஓ.பி.எஸ். அவர்கள் நீதி விசாரணை வேண்டும் என்று சொன்னார். நீதி விசாரணை வைக்கப்பட்டது. 3 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. இன்றைக்கு துணை முதலமைச்சராக இருக்கும் ஓ.பி.எஸ். அவர்களுக்கு 3 ஆண்டுகளில் 8 முறை விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்து விட்டார்கள். இதுவரைக்கும் அவர் போகவில்லை. இதுதான் இன்றைய நிலை.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தையே கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் அம்மா படத்தை பாக்கெட்டில் வைத்திருக்கிறார்கள். புகைப்படத்தை அருகில் வைத்து வைத்திருக்கிறார்கள். அம்மா ஆட்சி என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

அதனால் தான் தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன், முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் ஏன் நடந்தது? எப்படி நடந்தது? என்பதை கண்டுபிடித்து – அதற்குக் காணமான குற்றவாளி யார் என்பதைக் கண்டுபிடித்து – மக்கள் மன்றத்தில் நிற்க வைக்க வேண்டியது தான் எங்களது முதல் வேலை என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

இப்படி ஒரு கொடுமையான ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. 4 மாதங்கள் தான் இருக்கிறது. 4 மாதங்களில் இருப்பதை கொள்ளையடித்துச் சென்று விடலாம் - சுருட்டிக் கொண்டு சென்றுவிடலாம் என்று திட்டமிட்டு அந்த பணியைச் செய்து கொண்டிருக்கிறார்களே தவிர மக்களைப் பற்றி கிஞ்சித்தும் அவர்கள் கவலைப்படவில்லை.

இந்த நிலையில், 4 மாதங்களில் நடைபெற இருக்கும் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை தி.மு.க.விற்கு நீங்கள் வழங்குவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

எனவே, அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம் என்ற தீர்மானத்தை இந்தக் கூட்டத்தின் மூலமாக நிறைவேற்றுவோம்.”

இவ்வாறு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories