மு.க.ஸ்டாலின்

மடை திறந்த வெள்ளம் போல் ஆர்வமுடையவர் ‘முரசொலி முகிலன்’ - அவரது மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்!

திமுக ஆட்சியின் சாதனைகளை அனைவரும் ரசிக்கும் பாடல்களாகப் பட்டிதொட்டியெல்லாம் கொண்டு போய்ச் சேர்த்தவர். நெருக்கடி நிலையின் போது தனது ஆசிரியர் பணியை இழந்தாலும் - கழகப் பணியில் தீவிரமாகச் செயல்பட்டவர்.

மடை திறந்த வெள்ளம் போல் ஆர்வமுடையவர் ‘முரசொலி முகிலன்’ - அவரது மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

"கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி"

திராவிட முன்னேற்றக் கழகத்தின் கலைக்குழு தலைமைக் கழகப் பேச்சாளரும், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் இதயத்தில் தனி இடத்தைப் பிடித்தவருமான முரசொலி முகிலன் அவர்கள் தனது 80-ஆவது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக மறைவெய்தினார் என்ற பேரதிர்ச்சி செய்தி கேட்டு பெருந்துயரத்திற்குள்ளானேன். அவரது மறைவிற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திராவிட இயக்கக் கொள்கைகளில் ஆழமான நம்பிக்கையும், மடை திறந்த வெள்ளம் போன்ற ஆர்வமும் உள்ள முகிலன் திராவிடர் கழகம் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் துவக்கக் கால மேடைகளில் கொள்கை முழக்கமிட்டவர். கழக ஆட்சியின் சாதனைகளை அனைவரும் ரசிக்கும் பாடல்களாகப் பட்டிதொட்டியெல்லாம் கொண்டு போய்ச் சேர்த்தவர். நெருக்கடி நிலையின் போது தனது ஆசிரியர் பணியை இழந்தாலும் - கழகப் பணியில் தீவிரமாகச் செயல்பட்டவர்.

திருச்செந்தூர் நடைப்பயணத்தின் போது - கழகப் பாடல்கள் மூலம் அனைவரையும் உற்சாகப்படுத்திக் கொண்டே - முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடன் நடைப்பயணத்தில் உடன் சென்றவர். தனது பிரச்சார வியூகத்தால் முத்தமிழறிஞர் கலைஞரின் பாராட்டைப் பெற்றவர். என் இதயத்தில் தனி இடம் பிடித்தவர்.

மடை திறந்த வெள்ளம் போல் ஆர்வமுடையவர் ‘முரசொலி முகிலன்’ - அவரது மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்!

“சிலர் மீசை பெரியதாகவும், ஆள் சிறியதாகவும் இருப்பார்கள்.ஆள் பெரியதாக இருப்பவர்களுக்கு மீசை சிறியதாக இருக்கும். ஆனால் என் தம்பி முரசொலி முகிலனுக்கு ஆளுக்கேற்ற மீசையும், மீசைக்கேற்ற ஆளும் பொருந்தியுள்ளதாக உள்ளார்” என்று அத்திபுலியூரில் நடைபெற்ற முரசொலி முகிலனின் இல்லத் திருமண விழாவில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் புகழப்பட்டவர். அந்த “முரசொலி முகிலன்” இன்று நம்மை விட்டுப் பிரிந்தாலும் - அவரின் கழகப் பேச்சுக்களும், கழகப் பாடல்களும் - கழகத்திற்கு ஆற்றிய பணிகளும் என்றைக்கும் எம் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றிருக்கும்.

முரசொலி முகிலன் அவர்களை இழந்து வாடும் மனைவிக்கும், மகள்களுக்கும், மகனுக்கும் மற்றும் கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் - ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

banner

Related Stories

Related Stories