மு.க.ஸ்டாலின்

“அரசின் கடமையையே ஏதோ சலுகையைப் போல நினைத்துக் கொள்வதா?” - எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி!

இலவசத் தடுப்பூசி என்று அறிவிப்பதன் மூலமாகத் முதல்வர் பழனிசாமி தன்னை தாராளப் பிரபுவாகக் காட்டிக் கொள்ளப் போடும் நாடகத்தைக் காணச் சகிக்கவில்லை என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

இன்று புதுக்கோட்டையில் நிருபர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதும், தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு நல்வாழ்வு அளித்தல் அரசின் கடமை என்பதை உணராமல், நோய்த்தொற்றுக்கான தடுப்பூசி அளிப்பதையே சலுகை என்பதைப்போல முதல்வர் பழனிசாமி பேசியிருப்பது பொதுமக்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.

இதுதொடர்பாக இன்று திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள, செய்தியின் விவரம் பின்வருமாறு:

“கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதும் தமிழக அரசின் செலவில் இலவசமாக அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று ஏதோ பெரிய சாதனை வாக்குறுதி போல முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

பேரழிவு காலத்தில் மக்களைக் காக்கும் மருந்தை இலவசமாகக் கொடுக்க வேண்டியது ஒரு மக்கள்நல அரசின் கடமை. அந்தக் கடமையை ஏதோ மக்களுக்கு, தான் காட்டும் மாபெரும் சலுகையைப் போல பழனிசாமி நினைத்துக் கொள்கிறார்.

வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாய் நிற்கும் மக்களுக்கு 5 ஆயிரம் நிதி உதவி செய்ய மனமில்லாத முதலமைச்சர், இலவசத் தடுப்பூசி என்று அறிவிப்பதன் மூலமாகத் தன்னை தாராளப் பிரபுவாகக் காட்டிக் கொள்ளப் போடும் நாடகத்தைக் காணச் சகிக்கவில்லை!”

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories