மு.க.ஸ்டாலின்

’சென்னை குலுங்கட்டும்; டெல்லி அதிரட்டும்..ஓரணியாய் பேரணியில் திரள்வோம்’ : உடன்பிறப்புகளுக்கு தலைவர் மடல்!

’சென்னை குலுங்கட்டும்; அது கண்டு டெல்லி அதிரட்டும். சிறுபான்மை முஸ்லிம்கள் - ஈழத் தமிழர் உள்ளிட்டோரின் உரிமைகள் மீட்சி பெறட்டும்’ என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

’சென்னை குலுங்கட்டும்; டெல்லி அதிரட்டும்..ஓரணியாய் பேரணியில் திரள்வோம்’ : உடன்பிறப்புகளுக்கு தலைவர் மடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மிகப்பெரிய சூழ்ச்சி செய்து பா.ஜ.க அரசு கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றியது. அது முதல் இதுவரை இந்திய தேசம் சுதந்திரப் போராட்டத்திற்குப் பிறகான மிகப்பெரிய மக்கள் எழுச்சியைக் கண்டுள்ளது. நாட்டின் பல்வேறு இடங்களிலும் மக்கள் தங்கள் உரிமைகளைக் காக்க ஒன்று திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், டிசம்பர் 23ம் தேதி (நாளை) தி.மு.க சார்பில் அரசியல் பாகுபாடு அற்ற மிகப்பெரிய பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, “ஓரணியாகத் திரண்டு பேரணியில் பங்கேற்போம்” எனக் குறிப்பிட்டு உடன்பிறப்புகளுக்கு மடல் எழுதியுள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

அவர் எழுதிய மடல் பின்வருமாறு;

நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல்.

பன்முகத்தன்மை - வேற்றுமையில் ஒற்றுமை என்னும் நம் பழம்பெரும் பண்பாடு மிளிரும் கருத்தாக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்திய ஒன்றியத்தின் மதச்சார்பற்ற தன்மையை மாய்த்திடும் வகையிலும், மதரீதியாக வெறுப்பை விதைத்து, பிளவுபடுத்தும் முறையிலும் மத்தியில் ஆளுகின்ற பா.ஜ.க. அரசு குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறது.

இந்திய மக்களை மதம் எனும் கோடரியால் பிளக்கின்ற இந்த கொடூரச் சட்டத்திற்கு, தமிழ்நாட்டை ஆளுகின்ற அடிமை அ.தி.மு.க. ஆதரவளித்து, அந்த ஆதரவின் காரணமாக சிறுபான்மை முஸ்லிம்களுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் ஆபத்தையும் அநீதியையும் உருவாக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

இந்திய அரசியல் சாசனத்தின் முகப்புரையில் உள்ள இறையாண்மை மிக்க-சமத்துவமான-மதச்சார்பற்ற - ஜனநாயகக் குடியரசு என்கிற ஆழமும் அழுத்தமும் நிறைந்த வார்த்தைகளை அர்த்தமிழக்கச் செய்து, அரசியல் சாசனம் தந்துள்ள அடிப்படை உரிமைகளைச் சிதைத்திடும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்தச் சட்டத்தினை எதிர்த்து நாடு முழுவதும் கண்டன முழக்கங்கள் எழுந்து எதிரொலிக்கின்றன.

அரசியல் கட்சிகளும் மக்கள் உரிமைக்காகப் பாடுபடும் அமைப்பினரும் களமிறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்களின் தீரமும் எழுச்சியும் மிகுந்த போராட் டம் தீவிரமடைந்து வருகிறது. சர்வாதிகார மனப்பான்மை கொண்ட ஆட்சியாளர்களோ, அடக்குமுறையால் இவற்றை ஒடுக்கிவிடலாம் என பகற்கனவு காண்கிறார்கள்.

டெல்லியில் பல்கலைக்கழக மாணவர்கள் மீது கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டு, குற்றுயிராக அவர்கள் பரிதவித்ததை தொலைக்காட்சிகள் வாயிலாக மக்கள் பார்த்துப் பதறினர். உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவிலும், கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூருவிலும் நடந்த பேரணிகள் மீது ஆட்சியாளர்களின் உத்தரவின்படி காவல்துறை நடத்திய அராஜகத் தாக்குதலும், துப்பாக்கிச் சூடும் 15க்கும் மேற்பட்ட உயிர்களைக் குடித்துள்ளன. இந்த அராஜகப் போக்கினைக் கண்டித்து நாடு முழுவதும் கொந்தளிப்பும் கோபமும் மிக்க போராட்டங்கள் எரிமலையாய் வெடித்து வருகின்றன.

’சென்னை குலுங்கட்டும்; டெல்லி அதிரட்டும்..ஓரணியாய் பேரணியில் திரள்வோம்’ : உடன்பிறப்புகளுக்கு தலைவர் மடல்!

இந்நிலையில், தனியார் தொலைக் காட்சிகளையும் கேபிள் டி.வி. ஒளிபரப்பாளர்களையும் அச்சுறுத்துகிற வகையில், மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது. அதில், சட்டம் - ஒழுங்கிற்கு எதிரான - தேச விரோத மனநிலை கொண்டு - நாட்டின் ஒற்றுமைக்கு எதிரான காட்சிகளை ஒளி பரப்பிடக் கூடாது என அச்சுறுத்தப்பட்டுள்ளது.

அதாவது, இந்நாட்டின் குடிமக்கள் தங்கள் உரிமைக்காகப் போராடுவது தேசவிரோதமாம். அவர்கள் மீது கொடுந் தாக்குதல் நடத்துவதும், அவர்களை ஒடுக்க 144 தடையுத்தரவை நடைமுறைப் படுத்துவதும் சட்டம் -ஒழுங்கைப் பாதுகாக்கும் தேச நேய நடவடிக்கையாம்.

போராட்டங்களுக்கு எதிராகப் பேசிய கர்நாடக பா.ஜ.க. அமைச்சர் ஒருவர், கோத்ரா சம்பவங்களுக்குப் பிறகான நிலையை எதிர்கொள்ள நேரிடும் என; தீக்கிரை ஆக்குதல், கொலைவெறித் தாக்குதல், இனத் துடைப்புப் பாய்ச்சல், போன்ற காட்டுமிராண்டித்தனத்தை நினைவூட்டும் வகையில், வெளிப்படையாக நஞ்சைக் கக்கிப் பேசியிருப்பது, தேசத்தின் ஒற்றுமையையும் சட்டம் ஒழுங்கையும் நிலைநாட்டுகிற சொற்களா? அரசியல் சாசனத்தின்படி, உறுதிமொழி எடுத்துக் கொண்டு பதவியேற்ற அவர் மீது, கொலைவெறித் தூண்டுதலுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள்?

அதே நேரத்தில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைதியான முறையில் ஒருங்கிணைந்து, அறவழியில் ஆர்ப்பாட்டம் நடத்திய இயக்கத்தினர், தொல்.திருமாவளவன் அவர்கள், நடிகர் சித்தார்த் அவர்கள், கர்நாடக இசைப் புதுமைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணா அவர்கள் உள்ளிட்ட 800 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அச்சுறுத்தும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. இதுபோலவே, இன்னொரு போராட்டத்திற்காக மனித நேய மக்கள் கட்சி-பேராசிரியர் ஜவாஹிருல்லா மற்றும் அவரது தோழர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

’சென்னை குலுங்கட்டும்; டெல்லி அதிரட்டும்..ஓரணியாய் பேரணியில் திரள்வோம்’ : உடன்பிறப்புகளுக்கு தலைவர் மடல்!

அச்சுறுத்தல்களாலும் வழக்குகளாலும் மக்களின் உணர்வுத்தீயை ஊதி அணைத்துவிடலாம் என தப்புக் கணக்கு போடுகிறார்கள் ஆள்வோர்கள். ஜனநாயக சக்திகள் ஒருமித்து நிற்கும் போது, அரசதிகாரமும் அத்துமீறல்களும் அடக்குமுறைகளும் ஏதும் செய்ய முடியாது என்பதே வரலாறு உணர்த்தும் பாடம்.

திராவிட முன்னேற்றக் கழகத்தினைப் பொறுத்தவரை, 1955ஆம் ஆண்டிலேயே இந்தியக் குடியுரிமைச் சட்டம் தெளிவாக நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், மதரீதியாக பிளவு படுத்தும் இந்தக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை தொடக்கம் முதலே எதிர்த்து வருகிறது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இதற்கெதிராக கழகத்தின் உறுப்பினர்கள் எழுப்பிய முழக்கங்களும் ஆற்றிய உரைகளும் அதற்குச் சான்று.

மக்களவையிலும் மாநிலங்களவையிலும் இந்தச் சட்டத்திற்கு எதிராக வாக்களித்து தனது எதிர்ப்பினை தி.மு.க. பதிவு செய்துள்ளது. கழகத்தின் சார்பில் கடந்த 17ஆம் நாள் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதற்கு முன்பாக, இளைஞரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கழகத்தின் தோழமை சக்திகளாக உள்ள அரசியல் இயக்கங்கள் அனைத்தும் இந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார்கள்.

அதேநேரத்தில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வின் நிலை என்ன? குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அ.தி.மு.க. ஆதரித்தது பற்றிய கேள்விக்கு டெல்லியில் ஊடகங்களுக்குப் பேட்டியளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, "அது எங்கள் கொள்கை, அதனால் செய்தோம்" என்று எந்த சம்பந்தமும் இல்லாமல் அலட்சியமாக பதில் தெரிவித்திருக்கிறார்.

’சென்னை குலுங்கட்டும்; டெல்லி அதிரட்டும்..ஓரணியாய் பேரணியில் திரள்வோம்’ : உடன்பிறப்புகளுக்கு தலைவர் மடல்!

மத்தியில் ஆளுகின்ற பா.ஜ.க. என்ன சொல்கிறதோ அதுதான் இன்றைய அ.தி.மு.க.வின் கொள்கை, கட்டளை, என்பது நாடும் ஏடும் அறிந்து நாற்றமெடுத்த ரகசியம்தான். அப்படிப்பட்ட கொள்கையைக் கொண்ட எடப்பாடி பழனிசாமி அவர்கள், இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கிட வலியுறுத்துவோம் என இரட்டை நிலைப்பாடு - இரட்டை நாக்குடன் பேசுகிறார். இரட்டைக் குடியுரிமை என்றால் இந்தியாவில் ஒரு குடியுரிமை, இலங்கையில் ஒரு குடியுரிமை.

இந்தியாவின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில் அதற்கான எந்த வாய்ப்பும் அளிக்கப்படாத நிலையிலேயே அதனை நிறைவேற்றிட அடிமைத்தனத்துடன் ஆதரவு அளித்து, பச்சைத் துரோகம் இழைத்த அ.தி.மு.க., இலங்கையிலும் குடியுரிமை கிடைக்கச் செய்வோம் எனச் சொல்வது குடியுரிமை பற்றிய அடிப்படைப் புரிதலோ, அறிதலோ முதலமைச்சருக்கு இல்லை என்ற நகைச்சுவையையே காட்டுகிறது.

பொதுமக்களும் மாணவர்களும் இந்தக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் எதிர்காலத்தில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தி, இந்தியாவின் ஒருமைப்பாட்டைச் சிதைக்கும் என்பதை அறிந்தும், தெளிந்தும் போராட்டக் களத்தில் உறுதியாக நிற்கிறார்கள். தமிழ்நாட்டில் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட - மதச்சார்பற்ற கொள்கையில் உறுதியாக உள்ள பல அமைப்பினரும் இந்தச் சட்டத்தை எதிர்த்துப் போராடும் நிலையில், மாணவர்களின் அறவழிப் போராட்டமும் நீடிக்கிறது.

இந்நிலையில்தான், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தோழமைக் கட்சியினர் பங்கேற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், இந்தக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தினால் சிறு பான்மை சமுதாயத்தினருக்கும் ஈழத்தமிழர்களுக்கும் ஏற்படப் போகும் அபாயங்களைத் தெளிவாக விளக்கி, அத்தகைய சட்டத்தை நிறைவேற்றிய பா.ஜ.க. அரசின் மதவாதப் போக்கையும், அச்சட்டத்தை ஆதரித்த அ.தி.மு.க.வின் பச்சைத் துரோகத்தையும் கண்டித்து, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என ஒருமன தாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

’சென்னை குலுங்கட்டும்; டெல்லி அதிரட்டும்..ஓரணியாய் பேரணியில் திரள்வோம்’ : உடன்பிறப்புகளுக்கு தலைவர் மடல்!

அதில், இந்த சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி, டிசம்பர் 23ஆம் நாள் - திங்களன்று, சென்னையில் மாபெரும் எதிர்ப்புப் பேரணி நடத்துவது என்றும் அனைத்துக் கட்சியினரும் இணைந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியத் திருநாட் டின் ஒற்றுமையை - ஒருமைப் பாட்டை - பன்முகத்தன்மையை -மதச்சார்பற்ற கொள்கையைக் காப்பாற்றிட நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம், அரசியல் கட்சிகள் என்கிற எல்லைகளுக்கு அப்பாற் பட்டு, நாட்டின் ஒட்டுமொத்தமான நலன் என்கின்ற பரந்து விரிந்த தன்மையினைக் காத்திடுவதற்கான முன்னெடுப்பாகும்.

இந்தியாவின் பல மாநிலங்களிலும் அரசியல்-மதம்-சாதி-மொழி எல்லைகளையெல்லாம் கடந்து, குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் பொதுமககளின் பேராதரவுடன் நடைபெற்று வருவதை, தொடர்ந்து காண்கிறோம். அண்டை மாநிலமான கேரளாவில் ஆளுங்கட்சியின் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவரும் ஒரே மேடையில் தங்கள் இயக்கத் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்புடன் இந்தச் சட்டத்தை எதிர்த்து நடத்திய போராட்டம் தேசத்தின் கவனத்திற்குரியது.

மதநல்லிணக்கத்தைப் போற்றிப் பாதுகாக்கின்ற தமிழ்நாட்டில், எப்போதுமே மதவெறி சக்திகளுக் கும் அவற்றுக்குத் துணை நின்று அடிமைச் சேவகம் செய்வோருக்கும் தமிழக மக்கள் இடமளித்த தில்லை. அந்த உணர்வுடன், டிசம் பர் 23 அன்று குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிர்ப்புப் பேரணி, கட்சி எல்லைகளைக் கடந்து, தமிழகத்தின் உணர்வை எதிரொலிக்கும் வகையிலும், இந்திய நாட்டின் பன்முகத் தன்மையைப் பாதுகாத்திடும் வகையிலும் நடைபெறுகிறது.

ஜனநாயகத்தில் உறுதி கொண்ட - மதச்சார்பின்மைக் கொள்கையில் தளராத நம்பிக்கையுள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும், அமைப்புகளையும், இளைஞர்களையும் மாணவர்களையும், திரைக் கலைஞர்களையும், வணிகர்களையும், பல துறை சார்ந்த அனைவரையும் பேரணியில் பங்கேற்றிட அன்புடன் அழைக்கிறேன்.

குழிபறிக்கும் குடியுரிமைச் சட்டத்தினைத் திரும்பப் பெற வலியுறுத்தி, கட்சி எல்லைகளுக்கு அப்பால் ஓரணியாகத் திரண்டு, மக்களின் பேரலை போன்ற பேரணியால் டிசம்பர் 23 அன்று சென்னை குலுங்கட்டும்; அது கண்டு டெல்லி அதிரட்டும். சிறுபான்மை முஸ்லிம்கள் - ஈழத் தமிழர் உள்ளிட்டோரின் உரிமைகள் மீட்சி பெறட்டும்!” இவ்வாறு தனது மடலில் குறிப்பிட்டுள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

banner

Related Stories

Related Stories