சென்னையில் நேற்று நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுவுக்கு பிறகு அண்ணா அறிவாலயத்தில் இன்று தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
இதில், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மக்களிடம் கொண்டுச் சேர்க்க நவம்பர் 16ம் தேதி தமிழகமெங்கும் பொதுக்கூட்டம் நடத்தவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்தும், உள்ளாட்சித் தேர்தல் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புவோர் வருகிற நவ.,14ம் தேதி முதல் 20 தேதி வரை விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம். விருப்ப மனுக்கள் தி.மு.க. மாவட்ட தலைமையகத்தில் விநியோகிக்கப்படும் என்றார்.
மேலும், உள்ளாட்சித் தேர்தல் எப்போது அறிவிக்கப்பட்டாலும் அதனை எதிர்கொள்ள திராவிட முன்னேற்றக் கழகம் தயாராக உள்ளது என்ற அவர், உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி வைத்தே போட்டியிட இருப்பதாகவும் கூறினார்.