மு.க.ஸ்டாலின்

ஆசிரியர் கி.வீரமணிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: மு.க.ஸ்டாலின் வாழ்த்து

அமெரிக்க மனிதநேயர் சங்கத்தின் சார்பில் வழங்கப்படும் ‘மனிதநேய வாழ்நாள் சாதனையாளர் விருது’ திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

ஆசிரியர் கி.வீரமணிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: மு.க.ஸ்டாலின் வாழ்த்து
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

அமெரிக்க மனிதநேயர் சங்கத்தின் சார்பில் ஆசிரியர் கி.வீரமணிக்கு வழங்கப்படும் மனிதநேய வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ''தந்தை பெரியார் அவர்களின் தனிச் சிறப்புமிக்க தத்துவத்தைப் பரப்பும் அரிய பணியில் மனிதநேய சாதனையாளர் விருதுபெறும் ஆசிரியர் அய்யா கி.வீரமணி அவர்களை வாழ்த்துவதில் பெருமை கொள்கிறேன்.

ஆசிரியர் கி.வீரமணிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: மு.க.ஸ்டாலின் வாழ்த்து

மானுடம் மற்றும் மனிதநேய மாண்புகளைப் போற்றிய மகத்தான தலைவர் தந்தை பெரியார் அவர்களின் புகழ்ஒளி இன்று உலகமெங்கும் பரவிக் கொண்டிருக்கிறது. ஒடுக்கப்பட்ட திராவிட இனத்தின் உரிமைகளை சுயமரியாதை -பகுத்தறிவு - சமூக நீதி ஆகிய கோட்பாடுகள் வழியே மீட்டெடுத்து தமிழர்களை தலைநிமிரச் செய்தவர் பெரியார்.

அவருடைய திராவிடத் தத்துவம் என்பது நமக்கு மட்டும் உரியதன்று. நம்மைப்போல உலகெங்கும் ஒடுக்கப்பட்டுள்ள இனத்தின் உரிமைகளுக்கான தத்துவம். எளிமையாகச் சொல்வதென்றால், மனிதனை மனிதனாக மதித்துப் போற்றுதலே திராவிடம். பிறப்பினாலோ, நிறத்தினாலோ, சாதி-மத அடிப்படையிலோ, பாலின வேறுபாடுகளாலோ எவருடைய உரிமையும் பறிபோகக்கூடாது என்கிற மாபெரும் மனிதநேயச் சிந்தனை வழியே உரிமைப் போராட்டங்களை முன்னெடுத்து அவை அனைத்திலும் வெற்றி கண்டவர் தந்தை பெரியார்.

அவருடைய தத்துவங்கள். கடல்களையும் மலைகளையும் கடந்து, அமெரிக்க ஐக்கிய நாடுகள் வரை பரவியிருப்பதன் அடையாளம்தான் செப்டம்பர் 21, 22 ஆகிய நாட்களில், அந்நாட்டின் தலைநகரான வாஷிங்டன் டி.சி.யில் நடைபெறுகின்ற பன்னாட்டு - சுயமரியாதை மாநாடு.

அமெரிக்காவில் 75 ஆண்டுகளாக மனிதநேயத்திற்குக் குரல் கொடுத்துவரும் அறிவியல் மனப்பான்மை கொண்ட - பொதுநல நோக்குடைய அமைப்பு அமெரிக்க மனிதநேயர் சங்கம் (American Humanist Association) ஆகும்.

இந்த அமைப்பும், அமெரிக்காவில் இயங்கும் பெரியார் பன்னாட்டு அமைப்பும் இணைந்து நடத்தும் மாநாட்டில், அமெரிக்க மனிதநேயர் சங்கத்தின் சார்பில் வழங்கப்படும் ‘மனிதநேய வாழ்நாள் சாதனையாளர் விருது’ திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அய்யா கி.வீரமணி அவர்களுக்கு வழங்கப்படுகிறது என்பது மகிழ்ச்சி தரும் செய்தியாகும்.

ஆசிரியர் கி.வீரமணிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: மு.க.ஸ்டாலின் வாழ்த்து

1953ஆம் ஆண்டு முதல், உலகளாவிய அளவில் மனிதநேய சிந்தனையுடன் பொதுநலனில் ஈடுபட்டு வருவோருக்கு வழங்கப்பட்டு வரும் இந்த விருது முதன்முதலாக இந்தியர் ஒருவருக்கு, அதிலும் திராவிடர் ஒருவருக்கு வழங்கப்படுகிறது என்பதும், அந்த விருதினை நமது தாய்க்கழகத்தின் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள் பெறுகிறார் என்பதும் மகிழ்ச்சியும் பெருமையும் தருவதாகும்.

தந்தை பெரியார் வழியில் அவரது இயக்கத்தைக் கட்டிக் காத்து, சமூக நீதிப் போராட்டத்தில் எந்தவித சமரசமுமின்றி களப்பணியாற்றி, தமிழக அளவிலும் இந்திய அளவிலும் இடஒதுக்கீட்டினை நிலைநாட்டுவதில் வெற்றி பெற்று, பெரியாரின் கொள்கைகளை உலகமெங்கும் பரப்பும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் அய்யா அவர்களின் தொண்டறம் தொய்வின்றித் தொடர இந்த விருது ஊக்கமளிக்கும்.

ஆசிரியர் அய்யா கி.வீரமணி அவர்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மனம் கனிந்த வாழ்த்துகள். தந்தை பெரியாரின் மானுடக் கொள்கை எத்திசையும் பரவட்டும்'' எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories