மு.க.ஸ்டாலின்

“தி.மு.க சாதனைகளை தி.மு.க-வே தான் முறியடிக்க முடியும்” : முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் உரை!

தி.மு.க முப்பெரும் விழாவில் பேசிய தலைவர் மு.க.ஸ்டாலின், பா.ஜ.க அரசின் இந்தி திணிப்பை கடுமையாக எதிர்த்து உரையாற்றினார்.

“தி.மு.க சாதனைகளை தி.மு.க-வே தான் முறியடிக்க முடியும்” : முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் உரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பேரறிஞர் அண்ணா பிறந்தநாள், தந்தை பெரியார் பிறந்தநாள், திராவிட முன்னேற்றக் கழகம் உதயமான நாள் ஆகிய தினங்களையொட்டி திருவண்ணாமலையில் நேற்று தி.மு.க முப்பெரும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில், கலைஞர் அறக்கட்டளை சார்பில், த.வேணுகோபாலுக்கு பெரியார் விருது, சி.நந்தகோபாலுக்கு அண்ணா விருது, ஏ.கே.ஜெகதீசனுக்கு கலைஞர் விருது, சித்திரமுகி சத்தியவாணி முத்துவுக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருது, தஞ்சை ச.இறைவனுக்கு பேராசிரியர் விருது ஆகியவற்றை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

பின்னர் பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “1949-ல் தி.மு.க தொடங்கப்பட்டது. கட்சியின் 70வது பிறந்தநாளை இப்போது நாம் கொண்டாடி வருகிறோம். இந்த விழாவைத் தலைமைக் கழகம் எதிர்பார்த்ததைவிட மிகச் சிறப்பாக நடத்தியுள்ளார் எ.வ.வேலு. அ.தி.மு.க-வினர் வைத்த பேனர் விழுந்து இளம்பெண் இறந்தது மிகவும் வேதனை அளிக்கிறது. `நான் பங்கேற்கும் விழாக்களில் விளம்பர பேனர்கள் இருக்கக்கூடாது. அப்படி இருப்பது தெரிந்தால் அந்த விழாவில் நான் பங்கேற்க மாட்டேன்' என்று கட்சித் தொண்டர்களுக்கு கட்டளையைப் பிறப்பித்திருந்தேன். அது இந்த விழாவில் நிறைவேற்றப்பட்டு, ஒரே ஒரு விளம்பர பேனர்கூட இல்லாமல் தவிர்க்கப்பட்டு இந்த விழா சிறப்பாக நடந்துவருகிறது.

இனிமேல், நான் பங்கேற்கும் எந்த விழாவாக இருந்தாலும் அங்கே விளம்பர பேனர்களை வைக்கக் கூடாது என்று என் தொண்டர்களுக்கு கண்டிப்போடு சொல்கிறேன். இப்போது விளம்பர பேனர்கள் மக்களின் வெறுப்பு பேனர்களாக மாறிவருகின்றன.

“தி.மு.க சாதனைகளை தி.மு.க-வே தான் முறியடிக்க முடியும்” : முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் உரை!

ஜூன் 3ம் தேதி கலைஞர் பிறந்தநாளை இனிவரும் காலங்களில் செம்மொழி நாளாகக் கொண்டாட வேண்டும். அடுத்துவரும் கலைஞர் பிறந்தநாள் விழாவின்போது பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் படைப்பாளிகளுக்கு விருதுகள் வழங்கப்படும். தி.மு.க தொடங்கிய 70 ஆண்டுகளில், நாம் பெறாத வெற்றியும் இல்லை, நாம் பெறாத தோல்வியும் இல்லை. வெற்றியானாலும், தோல்வியானாலும் தி.மு.க-வுக்குத்தான் பெருமை. வெற்றியையும், தோல்வியையும் சமமாகப் பார்ப்பவன் தி.மு.க தொண்டன் என்று அண்ணா அன்றே சொன்னார்.

தி.மு.க ஏழை, நடுத்தர, சிறுபான்மையின மக்களுக்கும், பெண்களுக்கும், ஆதரவாக இருக்கும் ஒரே இயக்கம். ஆனால், இன்று தமிழகத்தில் பா.ஜ.க-வின் பினாமி ஆட்சி நடக்கிறது. பா.ஜ.க-வின் எடுபிடி ஆட்சி எடப்பாடி பழனிசாமி ஆட்சி என்று அ.தி.மு.க-வினரே சொல்லும் அவலம் இப்போது வந்துள்ளது.

வெளிநாடுகளுக்குச் சென்றுவந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி 41 நிறுவனங்கள் மூலம் 8,300 கோடி ரூபாய்க்கு முதலீட்டைக் கொண்டு வந்ததாகச் சொல்கிறார். அந்த 41 நிறுவனங்கள் எவை, எவை என்று பட்டியலிட்டுச் சொல்ல முடியுமா? இந்த நிறுவனங்கள் மூலம் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதைச் சொல்ல முடியுமா? ஒரு நிறுவனத்தின் பெயரைக்கூட இதுவரை வெளியிடவில்லை. இவர்கள் தமிழகத்துக்கு முறையான முதலீட்டைக் கொண்டுவந்தால் தமிழக அரசுக்குப் பகிரங்கமாகப் பாராட்டு விழா நடத்துவேன். அதற்கு இப்போதும் தயாராக இருக்கிறேன்.

“தி.மு.க சாதனைகளை தி.மு.க-வே தான் முறியடிக்க முடியும்” : முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் உரை!


பேருக்கு முதலீடு செய்யச் செல்கிறேன் என்று சொல்லிவிட்டு முதல்வரும், அமைச்சர்களும் 14 நாட்கள் இன்பச் சுற்றுலா சென்றுவருகிறார்கள். கலைஞர் முதல்வராக இருக்கும்போது கோட்டையிலேயே உட்கார்ந்துகொண்டு சென்னைக்கு பல தொழிற்சாலைகளைக் கொண்டுவந்தார். தி.மு.க-வின் சாதனையைச் சொல்ல வேண்டும் என்றால் டைட்டல் பார்க் ஒன்று போதும். தொடங்கிய 34 மாதங்களில் 34 நிறுவனங்களைக் கொண்டுவந்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தியது. இந்தியாவே பொறாமைப்படும் அளவுக்கு ஆட்சியை நடத்தியவர் கலைஞர். தி.மு.க சாதனையை முறியடிக்க யாராலும் முடியாது. எங்கள் சாதனையை நாங்களேதான் முறியடிக்க வேண்டும்.

தி.மு.க வெறும் அரசியல் இயக்கம் மட்டுமல்ல; தமிழ் கலாசாரத்தை, மொழியைக் காப்பாற்றும் பேரியக்கம். மோடிக்கும், அமித்ஷாவுக்கும் தாய்மொழி இந்தி அல்ல. ஆனாலும் இருவரும் சேர்ந்து நாடு முழுவதும் இந்தியைத் திணிக்க முயல்கின்றனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரே நாடு ஒரே மொழி என்ற தொனியில் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இந்தியாவில் 1,652 மொழிகளைப் பேசும் மக்கள் உள்ளனர். அப்படியிருக்க இந்திக்கு மகுடம் சூட்டுவதென்பது இந்தித் திணிப்பு. இந்தி பேசுபவர்கள் கலாசாரம் வேறு, நம் கலாசாரம் வேறு.

இவர்களின் ஆட்சிக் காலங்களில் தமிழ்நாட்டில் தமிழ் பேசக் கூடாது என்று சட்டம் வந்தாலும் வரும். இந்த கலாசார படையெடுப்பைத்தான் தந்தை பெரியார் எதிர்த்தார். தமிழ்நாட்டில் இந்தியைத் திணிக்கும் எந்த முயற்சியையும் தி.மு.க பார்த்துக்கொண்டிருக்காது. தடுக்கும் முயற்சியில் கண்டிப்பாக ஈடுபடும். இதற்காக எந்தத் தியாகத்தையும் செய்வதற்கு தி.மு.க தயாராக இருக்கிறது. இந்தியா, ‘இந்தி’யாவா எது வேண்டும் என்று கேட்டால், எங்களைப் பொறுத்தவரை இந்தியாதான் வேண்டும் என்று சொல்வோம்” எனப் பேசினார்.

banner

Related Stories

Related Stories