மு.க.ஸ்டாலின்

நீட் மசோதாக்களை நிராகரிக்கும் முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்

நீட் மசோதாக்களை நிராகரிக்கும் முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நீட் மசோதாக்களை நிராகரிக்கும் முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

நீட் தேர்விலிருந்து விலக்களிக்க கோரி தமிழக அரசு மத்திய அரசுக்கு அனுப்பிய 2 சட்ட மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. இதற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், '' நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட இரு மசோதாக்களும் நிராகரிக்கப்பட்டு விட்டது என்று மத்திய பா.ஜ.க. அரசு, இவ்வளவு காலம் தாமதம் செய்துவிட்டு, கடைசியாக உயர்நீதிமன்றத்தில் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழக மாணவர்களின் நலனை- குறிப்பாக ஏழை எளிய கிராமப்புற மாணவ மாணவியர் நலனை, துச்சமென மதிக்கும் மத்திய பா.ஜ.க. அரசின் இந்த முடிவு கடும் கண்டனத்திற்குரியது. 1.2.2017 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டு- 18.2.2017 அன்று குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு தமிழக ஆளுநர் அவர்களால் அனுப்பட்ட இந்த மசோதா குறித்து, 27 மாதங்கள் கழித்து,சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்பு இப்போது இந்தத் தகவலை மத்திய அரசு கூறியிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

மத்திய- மாநில உறவுகள், சட்டமன்றத்தின் மாண்பு, தமிழக மக்களின் உணர்வுகள், கிராமப்புற மாணவர்கள் மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவுகள் அனைத்தையும் காலில் போட்டு மிதித்து – குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஏழரைக்கோடி மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் சட்டமன்றம் அனுப்பிய மசோதாக்களை அலட்சியமாகக் கிடப்பில் போட்டதும் அல்லாமல்- இப்போது நிராகரித்து விட்டோம் என்று திடீரென அறிவிப்பது, கூட்டாட்சித் தத்துவத்தையும், பாராளுமன்ற ஜனநாயகத்தையும் கைகொட்டிக் கேலி புரியும் செயலாகும்.

மக்களின் வாக்குகளைப் பெற்று மத்தியில் பதவியில் அமர்ந்திருக்கும் ஒரு அரசு, அதே மக்களின் வாக்குகளைப் பெற்றுள்ள சட்டமன்றத்தில் அமர்ந்திருக்கும் மக்கள் பிரதிநிதிகளின் உணர்வுகளை அவமதிப்பது ஆரோக்கியமான, ஆக்கபூர்வமான நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு உகந்த செயல் அல்ல. நீட் தொடர்பான கேள்விகள் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் எழுப்பப்பட்ட நிலையிலும், அது குறித்து பேசப்பட்ட நேரங்களிலும் இந்த மசோதா குறித்த முடிவினை அவையில் தெரிவிக்காமல் மூடி மறைத்து வைத்திருந்து, இப்போது நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பது ஒரு வகையில் பாராளுமன்ற அவமதிப்பும் ஆகும்.

திரு நரேந்திர மோடி அவர்கள் இரண்டாவது முறையாக பிரதமரான பிறகு- அவரைச் சந்தித்த தமிழக முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி அளித்த மனுவில் “நீட் தேர்வு மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெற்றுத் தர வேண்டும்” என்று ஒரு வரி கூட இடம்பெறவில்லை. இதைச் சுட்டிக்காட்டி அப்போதே நான் கண்டனம் தெரிவித்தேன். ஆனால் முதலமைச்சர் தனது கடிதத்தில் அவ்வாறு கோரிக்கை விடுக்காமல் வாய்மூடி இருந்ததின் உள்நோக்கம் “மசோதாக்களை மத்திய அரசு நிராகரித்து விட்டது” என்பது ஏற்கனவே முதலமைச்சருக்குத் தெரிந்திருக்கிறது என்பது இப்போது வெளிவந்திருக்கிறது.

மசோதா நிராகரிக்கப்பட்ட தகவலை முதலமைச்சரோ, சுகாதாரத்துறை அமைச்சரோ தமிழக மக்களுக்கும் சொல்லவில்லை- தமிழக சட்டமன்றத்தில் இது குறித்து உறுப்பினர்கள் வலியுறுத்திப் பேசிய போதும் தெரிவிக்காமல் இருவருமே சட்டமன்றத்தை அவமதித்துள்ளார்கள். ஆகவே தமிழகச் சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட நீட் மசோதாக்களை நிராகரிக்கும் முடிவினை மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்து தமிழகச் சட்டமன்றத்தின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தமிழக மக்களின் உணர்வுகளைப் பளிச்சென வெளிப்படுத்தும் வகையில், இந்த மசோதா நிராகரிக்கப்பட்டதற்கு மத்திய அரசுக்கு எதிராக ஒரு கண்டனத் தீர்மானத்தை மாண்புமிகு முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி சட்டப் பேரவையில் கொண்டு வந்து உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும், சமூக நீதியையும், கிராமப்புற மாணவர்களின் நலனையும் கருத்தில் கொண்டு, நீட் தேர்வு மசோதாக்களுக்கு ஒப்புதல் பெறுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் '' இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories