மு.க.ஸ்டாலின்

இஸ்லாமியர்களின் பாதுகாப்பு கவசமாக திமுக செயலாற்றும்-மு.க.ஸ்டாலின் இரமலான் வாழ்த்து செய்தி!

ரமலான் பண்டிகை நாடு முழுவதும் நாளை கொண்டாடப்படுவதையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் ரமலான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியர்களின் பாதுகாப்பு கவசமாக திமுக செயலாற்றும்-மு.க.ஸ்டாலின் இரமலான் வாழ்த்து செய்தி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

ரமலான் பண்டிகை நாடு முழுவதும் நாளை கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, இஸ்லாமியர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ரமலான் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

"அனைத்து வகையிலும் தங்களை வருத்திக் கொண்டு நோன்பிருந்து அன்பு, இரக்கம், கருணை, ஈகை ஆகிய உயரிய பண்புகளை உலகுக்கு வெளிப்படுத்தும் இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மனமார்ந்த இரமலான் திருநாள் நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் இஸ்லாமிய சமுதாய மக்களுக்காக அயராது பாடுபடும் இயக்கம் மட்டுமல்ல- அந்த ஆழமான உறவின் அடிப்படையில் சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்காக எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றியதும் கழக அரசுதான். அந்த உறவின் வெளிப்பாடு தேர்தல் காலங்களில் மட்டுமின்றி - என்றைக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், இஸ்லாமிய சமுதாய மக்களுக்கும் உண்டு என்பதில் இரு வேறு கருத்துக்களுக்கு இடமில்லை என்பது எனக்குத் தெரியும்; இஸ்லாமிய மக்களுக்கும் தெரியும்.சாதனைகளின் பட்டியலை அணி வகுத்தாற்போல் சொல்லிட வேண்டுமென்றால், 1969-ல் மீலாதுநபிக்கு முதன்முதலில் அரசு விடுமுறை; உருது பேசும் முஸ்லிம்களை பிற்படுத்தப் பட்டோர் பட்டியலில் சேர்த்தது; இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினர் சமுதாய மக்கள் பயனடைய "சிறுபான்மையினர் நல ஆணையம்"துவங்கியது; ஓய்வூதியம் பெற்று வந்த 2000 உலமாக்களின் எண்ணிக்கையை 2400 வரை உயர்த்தியது; முதன் முறையாக வக்ஃபு வாரியச் சொத்துகளைப் பராமரிப்பதற்கென 40 லட்சம் ரூபாய் மானியம் வழங்கியது என்று சொல்லிக்கொண்டே போகலாம். இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினரின் முன்னேற்றத்திற்காக, `தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்” “உருது அகாடமி” உள்ளிட்டவற்றை தொடங்கியது, "காயிதே மில்லத் மணிமண்டபம்" அமைத்திட நிதி ஒதுக்கி, அடிக்கல்லும் நாட்டி கட்டி முடிக்கநடவடிக்கை எடுத்தது - அனைத்து சாதனைகளுக்கும் முத்தாய்ப்பாக, 2007-ல் இஸ்லாமியர்களுக்குப் பிற்படுத்தப் பட்டோருக்கான 30 விழுக்காட்டில் 3.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கியது என்று தலைவர் கலைஞர் அவர்களுக்கும், இஸ்லாமிய சமுதாயத்தினருக்குமான உறவு என்றைக்கும் நீடித்து நிலைத்து நிற்க வல்லது. அந்த உறவின் தொடர்ச்சியாக இன்றைக்கு இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு எத்தகைய சோதனைகள் வந்தாலும், எதிர்க்குரல் கொடுக்கும் இயக்கமாக என் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் செயல்பட்டு வருகிறது. இஸ்லாமிய மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவும், அவர்களுக்கு நல் வாழ்வு அமைந்திடவும் தொன்று தொட்டு உழைத்து வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த இரமலான் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை தெரிவித்து மகிழ்ச்சி கொள்கிறேன்.

சிறுபான்மையின மக்களின் சமூக- பொருளாதார முன்னேற்றத்திற்காகவும், அவர்களுக்கு எங்கிருந்து- எத்தகைய சோதனைகள் வந்தாலும் அதைத் தடுத்து நிற்கும் இசுலாமிய சமுதாயத்தினரின் பாதுகாப்புக் கவசமாக திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து செயலாற்றிடும் என்று உறுதியளித்துக் கொள்கிறேன்." என தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories