மு.க.ஸ்டாலின்

“தொழிலாளர்களின் கேடயமாகத் திகழும் தி.மு.க” - மு.க.ஸ்டாலின் மே தின வாழ்த்து!

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மே தின வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.

MK Stalin
MK Stalin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உழைப்பாளர்களைப் போற்றும் மே தின வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

“சிகாகோ நகரில் தொழிலாளர்கள் பிரமாண்டமான வெற்றிப் பேரணியை நடத்தி, தங்கள் இன்னுயிரை துச்சமென இழந்து பெற்ற, தீரமிகு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த உரிமைகளை நினைவு கூறும் மே 1-ஆம் தேதியன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அனைத்துத் தொழிலாளர்களுக்கும், இதயம் நிறைந்த மே தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தலைவர் கலைஞர் அவர்களும், திராவிட முன்னேற்றக் கழகமும் எப்போதும் தொழிலாளர்களின் உற்ற தோழர்கள் என்பதையும் -அந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை ஒளிமயமாக்கிட எண்ணற்ற நலத்திட்டங்களை நிறைவேற்றிக் கொடுத்த ஆட்சி திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி என்பதையும் ஒட்டுமொத்த தொழிலாளர் வர்க்கமும் நன்கு அறிந்திருக்கும் சாதனைகளாகும்.

ஆளுங்கட்சியோ, எதிர்க்கட்சியோ எப்போதும் தொழிலாளர்களின் தோளோடு தோள் நின்று துணைபுரியும் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். உழைக்கும் தொழிலாளர்கள் தங்களின் உரிமைக்குரலை எழுப்பும் முன்பே ஓடோடி வந்து அவர்களுக்கு உரிமை வழங்கி மகிழ்வித்தவர் மட்டுமல்ல- மாநிலம் முன்னேறுவதற்கு ஏற்ற “தொழில் அமைதியை” ஏற்படுத்திக் கொடுத்தவர் தலைவர் கலைஞர். தொழிலார்களுக்கு கழகம் நிறைவேற்றிய திட்டங்கள் பல. கழக ஆட்சியில்தான் மே தினத்தன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை தினம் என்று அறிவிக்கப்பட்டது. தலைவர் கலைஞர் அவர்கள் முதன் முதலில் முதலமைச்சராக இருந்த போதுதான் தொழிலாளர் நலனுக்காக தனியாக ஒரு அமைச்சகம் தோற்றுவிக்கப்பட்டது. “நேப்பியர் பூங்கா” மே தினப் பூங்கா என்று பெயர் சூட்டப்பட்டது. இன்றும் அது தொழிலாளர்களின் நினைவு போற்றும் சின்னமாகத் திகழ்கிறது.

தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ்; ஊக்கத் தொகை அளித்தது; விவசாயத் தொழிலாளர் நல வாரியம் உள்ளிட்ட 31 அமைப்பு சாராத் தொழிலாளர் வாரியங்களை உருவாக்கி, தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களையும், உயிர் காக்கும் மருத்துவத் திட்டங்களையும் வழங்கியது கழக அரசுதான்.

“தொழிலாளர்களின் கேடயமாகத் திகழும் தி.மு.க” - மு.க.ஸ்டாலின் மே தின வாழ்த்து!

தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் நலன் காக்கவும் பல்வேறு முத்தான வாக்குறுதிகளை இந்த முறை நாடாளுமன்றத் தேர்தலுக்கான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ளது. தொழிலாளர்களின் போர்வாளாகவும் கேடயமாகவும் எப்போதும் திராவிட முன்னேற்றக் கழகம் திகழும் என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்டி, புதிதாக மத்தியிலும்- மாநிலத்திலும் அமையப் போகும் ஆட்சியில் தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்கான திட்டங்களை நிறைவேற்றவும்- கடந்த ஐந்தாண்டுகளில் பா.ஜ.க. அரசிடம் இழந்து விட்ட உரிமைகளை மீட்கவும் திராவிட முன்னேற்றக்கழகம் சபதமேற்றுள்ளது என்று தெரிவித்து, தொழிலாளர்களின் வாழ்வில் இன்பம் பொங்கிடவும், மகிழ்ச்சி தவழ்ந்திடவும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மீண்டும் மே தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என தனது உழைப்பாளர் தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

banner

Related Stories

Related Stories