ஜல்லிக்கட்டு

4-வது முறையாக முதலிடம் : பாலமேடு ஜல்லிக்கட்டில் 14 காளைகளை அடக்கி அசத்திய பிரபாகரன் !

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவுபெற்ற நிலையில், பொதும்பு பிரபாகரன் 14 காளைகளை அடக்கி முதல் இடம் பிடித்துள்ளார்.

4-வது முறையாக முதலிடம் : பாலமேடு ஜல்லிக்கட்டில் 14 காளைகளை அடக்கி அசத்திய பிரபாகரன் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நேற்றைய தினம் முடிந்த நிலையில், இன்று காலை மதுரையில் உள்ள பாலமேடு ஜல்லிக்கட்டு விறுவிறுப்பாக தொடங்கியது. ஜல்லிக்கட்டு காளைகள், காளைகளை அடக்கும் கட்டிளம் காளைகள் களமாடும் வேகத்தில் அடங்கிவிடும் இளையோர் என களை கட்டுகிறது.

ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும் தங்கக் காசுகள், அண்டா, சைக்கிள், பீரோ உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, பாதுகாப்பான முறையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

குறிப்பாக, 1,000-த்திற்கும் மேற்பட்ட காளைகளும், 700 மாடுபிடி வீரர்களும் தேர்வு செய்து பங்கேற்கின்றனர். மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்ற நிலையில், மாடுபிடி வீரர்களின் ஆன்லைனில் பதிவு செய்த சான்றிதழ்களை சரி பார்க்கப்பட்டது. பின்பு ப்ரீத்தி அனலைசர் என்னும் கருவி மூலம் அவர்கள் மது அருந்தியுள்ளனரா? என பரிசோதனை செய்து தொடர்ந்து அவர்களின் உடல் வெப்பநிலை, இரத்த அழுத்தம், உடல் எடை உள்ளிட்டவைகளை பரிசோதனை செய்து மருத்துவர் தகுதி சான்றிதழ் வழங்கிய பின் வீரர்கள் களம் இறங்கினர்.

4-வது முறையாக முதலிடம் : பாலமேடு ஜல்லிக்கட்டில் 14 காளைகளை அடக்கி அசத்திய பிரபாகரன் !

வீரர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் பதிவு சான்றிதழ் மாற்றி எடுத்து வருதல், குறைந்த இரத்தம் அழுத்தம், மது அருந்தி வருதல் உள்ளிட்ட காரணங்களால் இதுவரை 10 வீரர்கள் தகுதி நீக்கம்‌ செய்யப்பட்டனர்.

மொத்தம் 840 காளைகள் அவிழ்த்துவிடப்பட்ட நிலையில், இந்த போட்டியில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வீரர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து 10 சுற்றுகளாக விறு விறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பொதும்பு பகுதியை சேர்ந்த பிரபாகரன் முதலிடத்தை பெற்றுள்ளார்.

பிரபாகரன், தமிழரசன், பாண்டீஸ்வரன்
பிரபாகரன், தமிழரசன், பாண்டீஸ்வரன்

பொதும்பு பிரபாகரன் ஏற்கனவே கடந்த 2020,21,22 ஆகிய 3 ஆண்டுகளாக பாலமேட்டில் நடைபெற ஜல்லிக்கட்டு போட்டியில் தொடர்ந்து முதலிடத்தை பெற்ற நிலையில், தற்போது 4-வது முறையாக 14 காளைகளை அடக்கி முதலிடத்தை பெற்றுள்ளார்.

இவரைத்தொடர்ந்து சின்னப்பட்டியை சேர்ந்த தமிழரசன், 9 காளைகளை அடக்கி 2-ம் இடத்தையும், கொந்தகையை சேர்ந்த பாண்டீஸ்வரன், 8 காளைகளை அடக்கி 3-ம் இடத்தையும் பெற்றுள்ளனர். வீரர்களுக்கு தற்போது வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

மேலும் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் முதலிடத்தை பெற்ற வீரருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. அதோடு சிறந்த காளையாக புதுக்கோட்டை இராயவயல் சின்னக்கருப்பு காளை தேர்வுசெய்யப்பட்டு, காளையின் உரிமையாளருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories