
வாரத்தில் 5 நாட்கள் வேலை, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
அதன்படி, நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகள் உட்பட அனைத்து வங்கிகளும் செப்டம்பர் 28-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளன.
ஏற்கனவே செப்டம்பர் 26-ஆம் தேதி மாதத்தின் கடைசி சனிக்கிழமை விடுமுறை என்பதாலும், செப்டம்பர் 27 ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் தொடர்ந்து 5 நாட்கள் வங்கி செயல்படாத சூழ்நிலை உள்ளது. இதனால் நாடு முழுவதும் தனி நபர் வங்கி சேவைகள், சிறு குறு நிறுவனங்கள் என பல்வேறு தரப்பினரும் வங்கி சேவைகள் கிடைக்காமல் அவதிக்குள்ளாகும் சூழல் உருவாகும்.

இதனைக் கருத்தில்கொண்டு ஒன்றிய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், செப்டம்பர் 27-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வங்கிகளின் வழக்கமான சேவை இயங்கும் என அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியும் செப்டம்பர் 27-ஆம் தேதி அனைத்து வங்கிகளும் தங்களது வழக்கமான சேவைகளை வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் குறிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டியது, செப்டம்பர் 26-ஆம் தேதி சனிக்கிழமை வங்கி விடுமுறை. அதற்கடுத்த நாளான செப்டம்பர் 27-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் செயல்படும். செப்டம்பர் 28-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை 3 நாட்கள் வங்கிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளன.






