
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், போலி சான்றிதழ்கள் தொடர்பான வழக்கு விசாரணையின் போது இந்தியாவில் உள்ள வேலையில்லாத இளைஞர்களை கரப்பான்பூச்சியுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்துள்ளார்.
இதுபோன்றதொரு கருத்தை இளைஞர்கள் நான் பேசவில்லை. நான் கூறிய கருத்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்று அவர் உடனடியாக விளக்கம் கொடுத்திருந்தார். இருப்பினும் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்தது.
தலைமை நீதிபதி சூர்யகாந்தின் கருத்துகளைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் கிண்டலான பிரசாரத்தை பலரும் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். இதன் மையப்புள்ளியாக 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' (CJP) உள்ளது. அதாவது வேலையில்லாத இளைஞர்களால் உருவாக்கப்பட்டுள்ள இந்த கட்சிக்கு கட்சி பேதமின்றி அனைத்துத் தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' (CJP) என்ற பெயரில் ஓர் இணையதளம் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் தளத்தில் இது 11 மில்லியன் பிந்தொடர்பாளர்களுடன் மிகப்பெரிய இன்ஸ்டா பக்கமாக உருவெடுத்துள்ளது. அதுமட்டுமின்றி, இக்கட்சியில் உறுப்பினராகச் சேர்வதற்காக லட்சத்துக்கும் மேற்பட்டோர் அந்த இணையதளத்தில் தங்களைப் பதிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறிப்பாக இந்தப் பக்கத்தின் நிறுவனராக அபிஜித் தீப்கே என்பவர் உள்ளார். இவர் ஆம் ஆத்மி கட்சியின் சமூக ஊடக பிரிவு இருந்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், "ஒவ்வொருவருக்கும் பேச்சு உரிமையையும், கருத்து சுதந்திரத்தையும் வழங்கும் இந்திய அரசியலமைப்பை பாதுகாப்பதை கடமையாகக் கொண்ட தலைமை நீதிபதியே இப்படிப் பேசியது மிகவும் தவறான முன்னுதாரணமாக தோன்றியது. கரப்பான் பூச்சிகளுடனும் ஒட்டுண்ணிகளுடனும் அவர் இளைஞர்களை எப்படி ஒப்பிட முடியும்?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், "இது எனக்குள் மிகப்பெரிய கோபத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது, அதனால்தான் X தளத்தில் இதுகுறித்த எனது கருத்தைப் பதிவிட்டேன். 'அனைத்து கரப்பான் பூச்சிகளும் ஒன்று சேர்ந்தால் என்ன நடக்கும்?' என்று நான் கேட்டிருந்தேன். அதற்கு 'ஜென் ஸி' மற்றும் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடமிருந்து அதிரவைக்கும் பதில்கள் வந்தன. நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு தளத்தை உருவாக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை மற்றும் பரிந்துரைகளை வழங்கினார்கள்.
"இளைஞர்களின் பதில்கள் தான், 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' - CJP என்ற பெயரில் ஆன்லைனில் அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற யோசனையை எனக்குக் கொடுத்தது. 'எங்களை நீங்கள் கரப்பான் பூச்சி என்று அழைக்கிறீர்கள் என்றால், சரி, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியையே உருவாக்கலாம்' என்று முடிவு செய்தோம். என தனியார் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.
முக்கியமாக கரப்பான் பூச்சி கட்சியின் தேர்தல் அறிக்கை என்ற பெயரில் அவர்களின் இணையதளத்தில் முக்கிய 5 வாக்குறுதிகள் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், ஓய்வு பெறும் நீதிபதிகளுக்கு மாநிலங்களவை எம்.பி உள்ளிட்ட எந்தப் பதவியும் அதன் பின்பு வழங்கப்படாது.

பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும். அதுவும் இப்போது இருக்கும் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறைக்கப்படாமலும் தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படாமலும் உடனடியாக வழங்கப்படும்.
காக்ரோச் ஜனதா கட்சி ஆட்சியில் இருக்கும் அல்லது எதிர்க்கட்சியாக இருக்கும் மாநிலத்தில் எந்த குடிமகனின் வாக்காவது நீக்கப்பட்டால், உடனடியாக தலைமைத் தேர்தல் ஆணையர் UAPA சட்டத்தில் கைது செய்யப்படுவார்.
அம்பானி, அதானி கட்டுப்பாட்டில் இருக்கும் ஊடகங்களின் உரிமம் ரத்து செய்யப்படும். ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்படும்.
ஒரு கட்சியின் எம்.பி, எம்.எல்.ஏ அந்தக் கட்சியிலிருந்து தேர்வு செய்யப்பட்டு பின்னர் வேறு கட்சிக்கு தாவினால், அவரது பதவி உடனடியாக பறிக்கப்பட்டு, அடுத்த 20 ஆண்டுகளுக்கு அவர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும்.
என முக்கிய வாக்குறுதிகளை அளித்துள்ளது.
இது ஒரு புறம் நகைச்சுவைக்காக என மக்கள் கருதினாலும், இந்த வாக்குறுதிகள் அனைத்துமே மிகவும் முக்கியமான இந்திய பிரச்சனைகளாக உள்ளது.
ஏற்கனவே சமூக வலைதளங்களின் தாக்கம் உலகளவில் அரசியலில் பிரதிபலிக்க தொடங்கியுள்ள நிலையில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.






