
பொதுவாகவே பாஜக ஆளும் மாநிலங்களில் கல்வி அறிவு என்பதே குறைவு என்பதை நாடறியும். அதனால்தான் இன்று வரை பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியவில்லை. பாஜக ஆளும் மாநிலங்களில் கல்வி அறிவு மட்டுமின்றி பொது அறிவும் பலருக்கும் இருப்பதில்லை. அதற்கு ஒரு உதாரணமாகதான் பாஜக ஆளும் மாநிலத்தின் அமைச்சர் போலீசிடம் சண்டையிடும் வீடியோ வெளியாகி கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.
பாஜக ஆளும் ஹரியானாவில் போக்குவரத்துத்துறை அமைச்சராக அனில் விஜ் உள்ளார். இந்த சூழலில் நேற்று (பிப்.13) கைதால் (Kaithal) மாவட்டத்தில் புகார் தீர்வு குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக அமைச்சர் அனில் விஜ், அம்மாவட்ட கலெக்டர் அபராஜிதா, எஸ்.பி. உபாஸ்னா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த சூழலில் பாஜக அமைச்சருக்கு தெரிந்த குருக்ஷேத்ரா மாவட்டத்தை சேர்ந்த ஒருவர், அம்மாவட்டத்தில் போலீஸ் ஒருவர் மீது புகார் தெரிவித்தார். உடனடியாக அந்த அமைச்சர், அந்த போலீசை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று எஸ்.பி. உபாஸ்னாவுக்கு உத்தரவிட்டார்.
இதனை கேட்ட அங்கிருந்த அதிகாரிகள் ஆடிப்போனர். ஏனெனில் குருக்ஷேத்ரா மாவட்ட போலீசை சஸ்பெண்ட் செய்ய, கைதால் மாவட்ட எஸ்.பி.-யால் முடியாது. இதனால் அந்த எஸ்.பி. அமைச்சருக்கு எடுத்துரைத்தார். ஆனால் அதை கேட்க மறுத்த பாஜக அமைச்சர் அனில் விஜ், அந்த போலீஸ் மீது நடவடிக்கை உடனே எடுக்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் சண்டையிடும் தொனியில் பேசினார்.

இருப்பினும் அந்த எஸ்.பி. அவரிடம் பொறுமையாக சொல்லவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த பாஜக அமைச்சர், அந்த பெண் எஸ்.பி-யை நோக்கி, "நான் சொல்வதை மட்டும் செய். எதிர்த்துப்பேசாதே. என் உத்தரவு முழு ஹரியானாவிலும் செல்லும். நான் சொல்வதை
உன்னால் செய்ய முடியாது என்றால் இப்போதே வெளியே போ. அல்லது உன்னை நான் சஸ்பெண்ட் செய்துவிடுவேன்" என்று எச்சரித்தார்.
வாக்குவாதம் தீவிரமாகிவிட்டதை கவனித்த மாவட்ட கலெக்டர் அபராஜிதா அமைச்சரிடம், "சார், SP சொல்வதுதான் சரிதான். இன்னொரு மாவட்ட SP-யின் அதிகார வரம்பில் இந்த மாவட்ட SP தலையிட முடியாது. நீங்கள் சொன்ன தகவலை அவர் DGP-க்கு கடிதமாக எழுதுவார்" என்று கூறினார். எனினும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் பேசு பொருளாக மாறியுள்ளதோடு, இப்படி ஒன்றும் தெரியாத ஒருவரை பாஜக அமைச்சராக்கியுள்ளது குறித்து விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இதுதான் டபுள் இன்ஜின் என்று சொல்லும் பாஜகவின் லட்சணமா என்று பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.






