
இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு கடைசியாக 2011-ம் ஆண்டு நடத்தப்பட்டது. பின்னர் 2021-ம் ஆண்டு கணக்கெடுப்பு, கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.
தற்போது கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, இந்த கணக்கெடுப்பு 2027ம் ஆண்டு வரை 2 கட்டங்களாக நடக்கும் என கூறியுள்ளது ஒன்றிய அரசு. இதில் முதல்கட்ட கணக்கெடுப்பு இந்த ஆண்டே தொடங்குகிறது. அதன்படி வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை வீடுகளை பட்டியலிடுதல், வீடுகளை கணக்கெடுத்தல், வீட்டின் தரம், வசதிகள் மற்றும் உரிமையாளர் விவரங்கள் குறித்த 33 கேள்விகள் கேட்கப்படும். இதில் முக்கியமாக குடிநீர், மின்சாரம், கழிப்பறை, சமையலறை, தொலைபேசி/இணைய வசதி மற்றும் வீட்டில் வசிப்போர் எண்ணிக்கை ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும் என அறிவித்துள்ளது ஒன்றிய அரசு.
இந்நிலையில் வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி தொடங்க உள்ள இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படாது என்ற புதிய அறிவிப்பை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பை இரண்டாம் கட்டத்தில் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது ஒன்றிய அரசு.
இந்த அறிவிப்பு சமூக நீதியை ஒத்திவைக்கும் நடவடிக்கை என விமர்சனங்களை எழுந்துள்ளது. வீடுகள், குடும்ப விவரங்கள், கல்வி, வசதி நிலை உள்ளிட்ட அடிப்படை தகவல்கள் சேகரிக்கப்படும் நிலையில், சாதி விவரத்தை விலக்குவது திட்டமிட்ட தாமதம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

"இரண்டாம் கட்டத்தில் நடத்தப்படும்” என்ற விளக்கம், கடந்த காலங்களை போலவே காலம் கடத்தும் உத்தியாகும் என்றும், இதனால் OBC, SC, ST உள்ளிட்ட சமூகங்களின் உண்மையான மக்கள் தொகை மற்றும் அவர்கள் சந்திக்கும் பின்னடைவு முற்றிலும் மறைக்கப்படும் என்றும் விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.
அதேபோல், சமூக நீதி சார்ந்த கொள்கைகள் தரவின் அடிப்படையில் அமைய வேண்டிய நிலையில், அந்த அடிப்படை தரவையே மறுப்பது இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறது என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே 2021ம் ஆண்டு எடுக்கப்பட வேண்டிய மக்கள்தொகை சாதிவாரி கணக்கெடுப்பு 5 வருடங்கள் கழித்து எடுக்கப்படும் நிலையில், இதிலும் முட்டுக்கட்டையை போட்டு குளிர்காய நினைக்கிறதா ஒன்றிய அரசு என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 30-க்கும் மேற்பட்ட கேள்விகளை தயார் செய்து அடுக்கி வைத்துள்ள ஒன்றிய அரசுக்கு இந்த சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த கேள்விகளை மட்டும் முன்வைப்பதில் என்ன பிரச்சனை என தெரியவில்லை எனவும், இரண்டாம் கட்டத்தில் கேட்பதை முதல்கட்டத்திலேயே தொடங்குவதில் என்ன குழப்பம் என எதிர்க்கட்சிகள் சரமாரியாக கேள்விகளை முன்வைத்துள்ளனர்.

குறிப்பாக சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த கேள்வியை மட்டும் ஒத்திவைத்து அதனை அடுத்த கட்ட கணக்கெடுப்பில் இணைப்போம் என்று சொல்வது முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது. ஏதேனும் காரணங்களை சொல்லி சாதிவாரி கணக்கெடுப்பை தள்ளிப்போடுவதை விடுத்து பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகள் சரிவர கிடைக்கும் விதமாக முழுமையான, சரியான சாதிக்கணக்கெடுப்பை ஒன்றிய அரசு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.






