
ஒன்றிய பா.ஜ.க அரசு, எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து அரசியல் செய்து வருகிறது. இதனால் ஆளுநர்கள் மாநில அரசுகளின் முடிவுகளில் திட்டமிட்டே தலையிட்டு, திட்டங்களுக்கு முட்டுக்கட்டைகளை ஏற்படுத்தி வருகிறார்கள்.
அதிலும் குறிப்பாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர்கள் இழுத்தடித்து வருகிறார்கள். மாநில அரசுகளின் ஜனநாய உரிமைகளில் ஆளுநர்கள் குறுக்கீடு செய்து வருகிறார்கள்.
அப்படிதான் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியும், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல், காழ்புணர்ச்சியுடன் நடந்து கொண்டு வருகிறார். ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் மசோதாக்களை நிறுத்தி வைக்க ஆளுநர், குடியரசு தலைவருக்கு காலக்கெடு நிர்ணயித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, இத்தீர்ப்பு குறித்து 14 கேள்விளை எழுப்பி உச்சநீதிமன்றத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு மனுத் தாக்கல் செய்து இருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு சில கருத்துக்களை முன்வைத்துள்ளது.
அதில், மசோதாவை ஆளுநர் தாமதிப்பது கூட்டாட்சிக்கு எதிரானது. மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் நடைமுறையில் ஆளுநர்கள் இடையூறு விளைவிக்கும் அணுகுமுறையை மேற்கொள்ள கூடாது.
காரணம் எதுவும் கூறாமல் மசோதாவை நிறுத்தி வைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் உள்ளது. ஒரு மாநிலத்தில் இரு நிர்வாக அதிகார மையங்கள் இருக்கக்கூடாது. மாநில மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசும் அமைச்சரவையுமே முடிவு செய்யும் இடத்தில் இருக்கும்.
அமைச்சரவை அனுப்பும் மசோதாவை ஏற்பதுதான் ஆளுநரின் முதல் வாய்ப்பு. அரசியல் சாசன அமர்வுப்படி ஆளுநருக்கு மூன்றே வாய்ப்புகள்தான் இருக்கிறது. ஒன்றிய அரசு கூறுவதுபோல ஆளுநருக்கு மசோதாக்களை நிறுத்தி வைக்கும் நான்காவது வாய்ப்பு கிடையாது.
வேறுபாடுகளை தீர்க்க மாநில அரசுடன் ஆளுநர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஆளுநர் செயல்படாமல் இருந்தால் அரசியல் அமைப்பு, நீதிமன்றங்கள் அதனை ஆய்வு செய்யும். பொதுவாக அமைச்சரவையின் ஆலோசனைப்படியே ஆளுநர் செயல்பட வேண்டும்” என கூறியுள்ளது.








