
இந்தியா என்ற நாடு மதச்சார்பின்மைக்கு மதிப்பளிக்கும் நாடு என பேசி வந்தாலும், சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு அன்றாடம் பல இடர்கள் உண்டாவது வழக்கமாகவே உள்ளது.
அதற்கு பல்வேறு எடுத்துக்காட்டுகளை வழங்கும் மாநிலங்களாக, பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்கள் அமைந்துள்ளன. குறிப்பாக, உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சிறுபான்மையினரின் மத ஆலயங்கள் இடிக்கப்படுவதும், பொது சொத்துகளுக்கு சூட்டப்பட்டிருந்த சிறுபான்மையினர்களின் மதம் சார்ந்த பெயர்கள் மாற்றப்படுவதும் நாள்தோறும் நடந்து வருகின்றன.

அவ்வகையில், மாட்டிறைச்சி உண்ணும் மக்களின் சொந்த விருப்பம் சூறையாடப்படுவதும் பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் வலுத்து வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக, பா.ஜ.க ஆளும் குஜராத் மாநிலத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்தார்கள் என்பதற்காக அக்ரம் ஹஜி, சட்டர் இஸ்மாயில், காசிம் சொலான்கி ஆகிய 3 பேருக்கு தலா ரூ.6.08 லட்சம் அபராதம் விதித்து ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது குஜராத் மாநிலத்தின் அமரேலி நீதிமன்றம்.
குஜராத் வரலாற்றிலேயே மாட்டிறைச்சி வைத்திருந்ததற்காக, நீதிமன்றம் வழங்கிய உச்சபட்ச தண்டனை இதுதான் என்பதால் இந்தியா முழுவதும் உள்ள பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.






