இந்தியா

தமிழ்நாட்டின் கடல்சார் வர்த்தகத்தை உலகளவில் மேம்படுத்தி வருகிறோம்! : மும்பையில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் நடைபெற்ற “உலகளாவிய இந்திய கடல்சார் வார விழா – 2025” (India Maritime Week – 2025) நிகழ்வில், தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

தமிழ்நாட்டின் கடல்சார் வர்த்தகத்தை உலகளவில் மேம்படுத்தி வருகிறோம்! : மும்பையில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் 27.10.2025 முதல் 31.10.2025 வரை நடைபெற்று வரும் உலகளாவிய இந்திய கடல்சார் வார விழா – 2025 (India Maritime Week - 2025) நிகழ்வில், தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் எ.வ.வேலு அவர்கள், நேற்று (29.10.2025) கலந்து கொண்டு, சிறப்புரையாற்றினார்கள். தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அவர்களும் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்ததாவது:-

இந்திய கடல்சார் வாரம் – 2025 விழாவில் தலைமையேற்று நடத்தும் வாய்ப்பு வழங்கப்பட்டமைக்கு, மிகுந்த நன்றியையும், பெருமையும் தெரிவித்துக் கொண்டார்.

இந்த விழா, இந்தியாவின் கடல்சார் துறையின் வலிமையையும், வளர்ச்சி பாதையையும் உலகிற்கு வலியுறுத்தும் ஒரு முக்கிய மேடையாகும். 100க்கும் மேற்பட்ட கடல்சார் நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் இந்த விழாவில், தமிழ்நாடு தனது தனித்துவமான கடல்சார் உள்கட்டமைப்பையும், வர்த்தக திறனையும் உலகிற்கு காட்டும் ஒரு அரிய வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்கிறது என்றும், 1,069 கிலோ மீட்டர் நீளமான கடற்கரை எல்லையுடன் இந்தியாவின் மிக நீண்ட கடற்கரையை கொண்டுள்ள 2ஆவது மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது என்று தெரிவித்தார்.

தமிழ்நாட்டில், கடல்சார் வர்த்தகத்திற்கு இன்றியமையாதவையாக விளங்கும்; 3 முக்கிய பெருந்துறைமுகங்களும், (சென்னை, தூத்துக்குடி மற்றும் எண்ணூர்), 17 சிறுதுறைமுகங்களும், தொழிற் பூங்காக்களும் உள்ளன என்றும், அண்டை நாடான இலங்கைக்கு வெகு அருகாமையில் இருப்பதால், சரக்கு ஏற்றுமதி, இறக்குமதி, மீன்பிடித் துறைமுகங்கள், கடல் உணவு பதப்படுத்துதல், கப்பல் கட்டுதல், பழுதுபார்த்தல், மறுசுழற்சி செய்தல் மற்றும் கடல்சார்ந்த சுற்றுலாத்துறை மேம்பாடு, பன்னாட்டு பயணியர் கப்பல் போக்குவரத்து போன்றவைகளில் தமிழ்நாட்டை ஒரு முக்கிய மையமாக மாற்றியுள்ளன என்றும் தெரிவித்தார். 

தமிழ்நாட்டின் கடல்சார் வர்த்தகத்தை உலகளவில் மேம்படுத்தி வருகிறோம்! : மும்பையில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!

பண்டைய சோழப்பேரரசு காலத்திலிருந்தே பூம்புகார் மற்றும் மாமல்லபுரம் துறைமுகங்கள் மூலமாக, உலக நாடுகளுடன் கடல்வணிகம் செய்த வரலாற்றினை தமிழ்நாடு பெற்றுள்ளது. தற்போது, இந்தியாவின் ‘சாகர்மாலா’ போன்ற முன்னோடியான திட்டங்கள் மூலம் துறைமுகங்களின் மேம்பாடு மற்றும் தொழில்துறையின் வளர்ச்சியில் இந்தியா முன்னணி நாடாக மாறி வருகிறது என்பதை எடுத்துரைத்தார்.

தமிழ்நாடு உகந்த சூழ்நிலையினை பயன்படுத்தி, உள்நாட்டு கப்பல் கட்டுதலை ஊக்குவிக்க, தூத்துக்குடி மற்றும் கடலூர் துறைமுகங்களை பயன்படுத்தும் வகையில் முக்கிய முயற்சிகளை மேற்கொண்டு, புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கையெழுத்திட்டு செயல்பட தொடங்கி விட்டது என்பதை தெரிவித்தார்கள்.

சமீபத்தில் சென்னையில் 18.9.2025 அன்று நடைபெற்ற நீல பொருளாதார மாநாடு – 2025இல், தமிழ்நாடு தனது கடல்சார் வாய்ப்புகளை முழுமையாக காட்சிப்படுத்தி, முதலீட்டாளர்களை ஈர்க்கும் விதத்தில், பல புதிய ஆலோசனைகளை முன் வைத்தது. இந்த முயற்சியை, இந்திய கடல்சார் வாரியம் – 2025 விழாவின், ஒரு தொடர் பகுதியாகவே மாறியுள்ளது என்றும், “ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம்” என்ற இலக்குடன் பயணித்து வரும் தமிழ்நாடு அரசு, தனது கடல்சார் வர்த்தகம் மற்றும் தொழில்துறையை மேம்படுத்துவதை முக்கிய இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

கடல் சார்ந்த வளங்களை திறன் வாய்ந்த வகையில் பயன்படுத்தி, நிலையான வேலைவாய்ப்பு, வாழ்வாதார மேம்பாடு போன்றவற்றின் மூலம் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், பெரும்பங்கு வகிக்கும் நீலப்பொருளாதாரத்தை உயர்த்த தமிழ்நாடு உறுதி பூண்டுள்ளது என்றும், தமிழ் நாட்டில் கடல்சார் துறையில் முதலீடுகளுக்கு தரமான உள்கட்டமைப்பு, திறமையான மனிதவளம், நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய தொழில் சூழல் இவற்றை நாம் உறுதிப்படுத்தி வருகிறோம் என்று அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், தனியார் முதலீட்டுடன் கடலூர் துறைமுகத்தை 40 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இராமேஸ்வரம் தீவுப் பகுதியை கடல் மார்க்கமாக சுற்றிவர படகுப் போக்குவரத்து துவக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இராமேஸ்வரம் (இந்தியா) - தலைமன்னார் (இலங்கை) இடையே குறைந்த தூர பன்னாட்டு கப்பல் போக்குவரத்து துவக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  

தமிழ்நாட்டின் கடல்சார் வர்த்தகத்தை உலகளவில் மேம்படுத்தி வருகிறோம்! : மும்பையில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் வண்ணம் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையையும் - அய்யன் திருவள்ளுவர் பாறையையும் இணைக்கும் கண்ணாடி இழைப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்வாரியத்திற்குத் தேவையான நிலக்கரியை கையாள சுமார் 8 கிலோ மீட்டர் நீளம் கொண்ட அணுகு தோணித்துறை உடன்குடியில் அமைக்கப்பட்டு, விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.

கடலூரில் கடல்சார் அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தரங்கம்பாடி – நாகப்பட்டினம் -  வேளாங்கண்ணி இடையே பயணிகள் படகு போக்குவரத்து துவக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பன்னாட்டு முதலீடுகளை ஈர்க்க, சென்னையில் தொடர்ந்து, பன்னாட்டு முதலீட்டாளர்கள் மாநாட்டினை நடத்தியுள்ளார்கள்.  மேலும், அவரே பல்வேறு உலக நாடுகளுக்கும் நேரடியாக சென்று, முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழ் நாட்டில் தொழில் துவங்க அழைப்பு விடுத்தும் வருகிறார்.  இந்தியாவிலேயே தொழில் துவங்க உகந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்கள்.

பல்வேறு உலக நாடுகளில்  இருந்து வந்துள்ள முதலீட்டாளர்களை, தமிழ் நாட்டின் வளர்ந்து வரும் கடல்சார் சூழ்நிலையை ஆராய்ந்து, இணைந்து பயணிக்க அமைச்சர் அவர்கள் அழைப்பு விடுத்தார்கள். இந்தியாவை உலகின் கடல்சார் மையமாக மாற்றும் மாபெரும் பயணத்தில், தமிழ்நாடு உறுதுணையாக இருந்து, முன்மாதிரியாக செயல்படும் உறுதியுடன் இருக்கிறது என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்கள். 

இந்தியாவின் கடல்சார் பொருளாதாரத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும் வகையில், தமிழ்நாட்டை மையப்படுத்தி இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்த ஒன்றிய அரசின் அதிகாரிகளுக்கும், ஒன்றிய அமைச்சர் சர்பானந்தா சோனாவால் அவர்களுக்கும் நன்றி தெரிவித்து உரையை நிறைவு செய்தார்.

banner

Related Stories

Related Stories