
பா.ஜ.க ஆட்சி செய்யும் மாகராஷ்டிரா மாநிலத்தில், மும்பையைச் சேர்ந்த பெண் மருத்துவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவர்,தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தன்னை போலீசார் பாலியல் வன்கொடுமை செய்ததாக மரண வாக்குமூலம் எழுதி வைத்துள்ளார். மேலும், விதிகளை மீறி தகுதிச் சான்றுகள் வழங்குமாறு, அரசியல்வாதிகள் மற்றும் போலீசார் நெருக்கடி கொடுத்ததாகவும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் மகாராஷ்டிர மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக சீர்குலைந்துள்ளதாக குற்றம்சாட்டி வருகிறார்கள்.
இந்நிலையில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பாஜக அரசாங்கத்தின் மனிதாபிமானமற்ற மற்றும் உணர்ச்சியற்ற முகத்தை அம்பலப்படுத்துகிறது என விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”பெண் மருத்துவரின் தற்கொலை எந்தவொரு நாகரிக சமூகத்தின் மனசாட்சியையும் உலுக்கும் ஒரு சோகம்.
மற்றவர்களின் வலியைப் போக்க விரும்பிய ஒரு நம்பிக்கைக்குரிய மருத்துவரின் மகள், ஊழல் நிறைந்த அமைப்பு மற்றும் அதிகார அமைப்பில் வேரூன்றிய குற்றவாளிகளின் துன்புறுத்தலுக்கு பலியாகிவிட்டார்.
முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் நிர்வாகத்தின் மனிதாபிமானமற்ற மற்றும் உணர்ச்சியற்ற முகத்தை இந்த மரணம் வெளிப்படுத்துகிறது. நீதிக்கான இந்த போராட்டத்தில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துடன் காங்கிரஸ் கட்சி உறுதியுடன் நிற்கும்” என தெரிவித்துள்ளார்.








