இந்தியா

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் : இந்தியா கூட்டணி வேட்பாளர் - யார் இந்த சுதர்சன் ரெட்டி?

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் வேட்பாளராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார்.

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் : இந்தியா கூட்டணி வேட்பாளர் - யார் இந்த சுதர்சன் ரெட்டி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

குடியரசுத் துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் தனது பதவியை அண்மையில் ராஜினாமா செய்தார். இந்நிலையில் இப்பதவிக்கு செப்டம்பர் மாதம் 9ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, பொது வேட்பாளரை தேர்வு செய்வது குறித்து இந்தியா கூட்டணி தலைவர்கள் டெல்லியில் ஆலோசனை நடத்தினர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி, சமாஜ்வாதி, திரிணாமூல் காங்கிரஸ் உள்பட இந்தியா கூட்டணிக் கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

இதில் இந்தியா கூட்டணி சார்பில் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியை, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே அறிவித்தார்.

இக்கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி, நீதிபதியாக இருந்தபோதும், ஓய்வுபெற்ற பின்பும் அரசியல் சாசனம் காப்பதில், சுதர்சன் ரெட்டி முக்கிய பங்காற்றி வருகிறார் என தெரிவித்தார்.

யார் இந்த சுதர்சன் ரெட்டி?

1946 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த ஆந்திரா மாநிலத்தில் ஜூலை 8 ஆம் தேதி பிறந்தவர் பி.சுதர்சன் ரெட்டி. ஒஸ்மானிய பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற இவர் ஹைதராபாத்தில் 1971 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசத்தின் பார் கவுன்சில் வழக்கறிஞராக பதிவு செய்தார்.

பின்னர் 1988 - 1990 ஆண்டுகளில் உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக பணியாற்றினார். பிறகு 1990 ஆம் ஆண்டுகளில் 6 மாதம் ஒன்றிய அரசின் கூடுதல் நிலை ஆலோசகராக இருந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து 1995 ஆம் ஆண்டு ஆந்திர பிரதேச உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2005 ஆம் தேதி குவஹாத்தி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2007 ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தார் சுதர்சன் ரெட்டி.

பிறகு 2011 ஜூலை 8 ஆம் தேதி ஓய்வு பெற்றார். மேலும் 2013 ஆம் ஆண்டு கோவா லோக் ஆயுக்தவின் தலைவராகவும் இருந்துள்ளார். இந்நிலையில்தான் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் வேட்பாளராக சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories