ஆபரேஷன் சிந்தூர் குறித்து தி வையர் இணைய இதழ் கட்டுரை வெளியிட்டது. அதில் ராணுவ நடவடிக்கையின் போது பல போர் விமானங்களை இந்தியா இழந்ததாக குறிப்பிட்டப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இக்கட்டுரையை எழுதிய சித்தார்த் வரதராஜன் மீது அசாம் காவல்துறையினர் BNS சட்டத்தின் 152வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தது, இதனை எதிர்த்து சித்தார்த் வரதராஜன் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் ஏற்கனவே ரத்து செய்த ஐபிசி பிரிவு 124Aவின் மறுவடிவம்தான் BNS சட்டத்தின் 152வது பிரிவாகும் என வாதிப்பட்டது.
எனவே இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்தார். இந்தவழக்கு நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் ஜாய்மால்யா பாக்சி முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது, கட்டுரைகள் எழுதுவதோ அல்லது செய்தி வீடியோக்களை தயாரிப்பதோ தவறா? இதற்காக கட்டுரை எழுதிய ஒரு பத்திரிக்கையாளர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டுமா? அவர்களை கைது செய்ய வேண்டுமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள்.
மேலும் ஒரு கட்டுரை நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் உடனடி அச்சுறுத்தலை ஏற்படுத்துமா? இந்தியாவிற்குள் சட்ட்ச விரோதமாக ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகளை கடத்தும் செயலுடன் ஒரு கட்டுரையை ஒப்பிட முடியாது. எனவே கட்டுரைகளின் அடிப்படையில் தேசத்துரோக வழக்குப்பதிவு செய்ய முடியாது என நீதிபதிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.