ஒன்றிய பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, இஸ்லாமிய உள்ளிட்ட சிறுபான்மை மக்கள் மீதான வெறுப்பு அரசியல் அதிகரித்து வருகிறது. மேலும் அவர்கள் மீது வன்முறையும் தொடுக்கப்படுகிறது. இதற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் 2023 ஆம் ஆண்டு ‘தி கேரளா ஸ்டோரி’ வெளியானது.
இத்திரைப்படத்தில் கேரளாவைச் சேர்ந்த இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு இஸ்லாம் மதத்துக்கு கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைக்கப்படுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றது.
இதனைத் தொடர்ந்து இஸ்லாமிய மக்கள் மீது வெறுப்பை திட்டமிட்டு சினிமா மூலம் அதிகரிக்கும் நோக்கத்துடன் வெளிவந்த இப்படத்திற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தது. அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில், மக்கள் மத்தியில் வெறுப்பை விதைத்த ‘தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு 2 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதற்கு கடும் எதிர்வினைகள் எழுந்து வருகிறது. கேரள மாநில முதலமைச்சர் பிரனாயி விஜயன்,“கேரளாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்துடன் தவறான தகவல்களை பரப்பி, வகுப்புவாத வெறுப்பை விதைக்கும் ஒரு திரைப்படத்திற்கு விருது அளிப்பதன் மூலம் தேசிய திரைப்பட விருதுகளின் நடுவர் குழு, சங்க பரிவாரின் பிளவுபடுத்தும் சித்தாந்தத்தில் வேரூன்றிய ஒரு கதைக்கு அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
இந்த விருது மூலம் கேரளா அவமதிக்கப்பட்டுள்ளது. நாம் அரசியலமைப்பு மதிப்புகளைப் பாதுகாக்க அனைவரும் குரல் எழுப்ப வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
அதேபோல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்,"“தி கேரளா ஸ்டோரி திரைப்படம் குப்பைத் தொட்டியில் போடப்பட வேண்டிய ஒன்று. அது ஒரு அழுகிய நிகழ்ச்சி நிரலை பரப்புகிறது. தேசிய விருது பெறும் இந்தப் படம் பாஜகவின் வெறுப்பு அரசியலை ஆதரித்துள்ளது. கேரளா சொந்த நாட்டின் அரசாங்கத்திடமிருந்து பெற்ற இந்த அவமானத்தை ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது. கேரள மக்கள் நிச்சயம் பாஜகவை தண்டிப்பார்கள்" என தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.