இந்தியாவின் வடமுனையான ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல், தேர்தல் ஆணையத்தின் வாக்காளர்கள் பட்டியல் திருத்த செயல்பாடுகள், தொகுதி மறுவரையறை, அகமதாபாத் விமான விபத்து உள்ளிட்ட ஏராளமான சிக்கல்கள் அரங்கேறிய நிலையில், நேற்றைய நாள் (ஜூலை 21) நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது.
இத்தொடரில் ஒன்றிய பா.ஜ.க அரசிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பவும், பல்வேறு விவாதங்களை மேற்கொள்ளவும் தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி முடிவெடுத்தது.
இந்நிலையில், நேற்றைய நாள் (ஜூலை 31) நாடாளுமன்றத்தில் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகள் பின்வருமாறு,
“வீடுதோறும் குடிநீர் இணைப்பு தண்ணீர் தரத்தை பரிசோதிக்க நடவடிக்கை என்ன?” என தென் சென்னை திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி
கிராமப்புறங்களில் வீடுகளுக்கு பிரத்யேக குடுநீர் இணைப்பு வழங்கும் திட்டமான ஜல் ஜீவன் மிஷன் (JJM) இன் கீழ் ஒற்றை கிராமத் திட்டங்கள் (SVS) மற்றும் பல கிராமத் திட்டங்களின் (MVS) கீழ் வரும் பேரூராட்சிகள் அந்தந்த கிராம பஞ்சாயத்துகளால் பராமரிக்கப்படுகிறதா என தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒற்றை கிராமத் திட்டங்கள் (SVS) மற்றும் பல கிராமத் திட்டங்களின் (MVS) கீழ் வரும் பேரூராட்சிகளில் இத்திட்டத்தின் கீழ் ஒரு கிராம பஞ்சாயத்துக்கு ஒரு வேட்பாளர் பயிற்சி பெறுகிறார் என்பது உண்மையா?
குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வதற்காக நீர் தர பரிசோதனையை ஊக்குவிக்க குடிநீர் தர பரிசோதனை ஆய்வகங்களை அமைக்குமாறு மாநில/யூனியன் பிரதேச அரசுகளுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளதா?
மேலும், ஒவ்வொரு கிராமத்திலும் ஐந்து பேரை தேர்ந்தெடுத்து அதில் பெண்களுக்கு முன்னுரிமை அளித்து, குடிநீரின் தரத்தை சோதிக்க அடையாளம் கண்டு பயிற்சி அளிக்குமாறு அரசு அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதா?
அப்படியானால், அதன் விவரங்களும், மேற்கூறிய நோக்கத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி குறித்த விவரங்களும் என்ன? என்று அவர் கேட்டுள்ளார்.
“குழாய் மூலம் வீட்டு எரிவாயு விநியோகம் தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்துவது எப்போது?” என திருவண்ணாமலை திமுக எம்.பி. சி என் அண்ணாதுரை மற்றும் காஞ்சிபுரம் திமுக எம்.பி. க. செல்வம் கேள்வி
ஒன்றிய அரசு நகர எரிவாயு விநியோக (CGD) திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மாநிலம் முழுவதும் குழாய் இயற்கை எரிவாயு (PNG) வலையமைப்பை அமைக்க இருப்பது குறித்த தகவல்களை நாடாளுமன்றத்தில் திமுக மக்களவை உறுப்பினர்கள் சி என் அண்ணாதுரை மற்றும் க. செல்வம் கேள்வி எழுப்பினார்கள்.
PNG சேவை தற்போது செயல்பாட்டில் உள்ள தமிழ்நாட்டின் நகரங்களின் பெயர்கள் என்ன? தமிழ்நாட்டின் குறிப்பாக கிராமப்புற மற்றும் நகராட்சிப் பகுதிகளில் PNG செயல்படுத்தலை விரைவுபடுத்த ஏதேனும் குறிப்பிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறதா?
தமிழ்நாட்டில் PNG நெட்வொர்க் மேம்பாட்டின் போது சரியான நேரத்தில் செயல்படுத்தப்படுவதையும் பாதுகாப்பு இணக்கத்தையும் உறுதி செய்வதற்கு அரசாங்கம் ஏதேனும் கண்காணிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதா?
“புற்றுநோய் நோயாளிகளுக்கு அரசு உயர்தர சிகிச்சை வழங்கும் திட்டத்தின் நிலை என்ன?” என திமுக எம்.பி. ஆர். கிரிராஜன் கேள்வி
நாட்டில் புற்றுநோய் நோயாளிகளுக்கு சீரான உயர்தர சிகிச்சை மற்றும் மருத்துவப் பராமரிப்பை வழங்க தேசிய புற்றுநோய் கட்டமைப்பு (NCG) திறம்பட செயல்படுவதற்கு அதிக நிதி வழங்க அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து திமுக மாநிலங்கலவை உறுப்பினர் ஆர். கிரிராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
NCGஇன் கீழ் புற்றுநோய் மருத்துவமனைகள் மற்றும் ஆராய்ச்சி மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கத்திடம் உள்ள திட்டம் என்ன? நாட்டில் புற்றுநோய் நோயாளிகள் குறித்த தரவுகளைச் சேகரித்து தொகுக்க NCG எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்றும் அவர் கேட்டுள்ளார்.