நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நடப்புக்கூட்டத்தொடரில் பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்க வேண்டும் என இந்தியா கூட்டணி கட்சிகளின் எம்.பிக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன, இந்நிலையில் நேற்று நாடாளுமன்ற இரு அவைகளிலும் பஹல்காம் தாக்குதல் குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் உரையாற்றினார்.
இதன்பின்னர் திமுக எம்.பி.க்கள் உள்ளிட்ட இந்திய கூட்டணி கட்சிகளின் எம்பி.க்கள் நாடாளுமன்ற அவைகளில் உரையாற்றினார். இந்நிலையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் ஆற்றிய உரை பின்வருமாறு :- “ஆப்ரேஷன் சிந்தூர் விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கு, இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் முழு ஆதரவு வழங்கினார்கள். ஆனால் ஆபரேஷன் சிந்தூரை 22 நிமிடங்களில் முடித்துவிட்டது ஒன்றி அரசு. இரவு 1.35 மணிக்கு பாக்கிஸ்தான் அதிகாரிகளிடம் அரசு தாக்குதல் நடத்திய விபரங்களை தெரிவித்துள்ளனர்.
ஒரு லட்சம் எதிரிநாட்டு வீரர்களை ஒரே நேரத்தில் இந்திய ராணுவம் சரணடையச் செய்து, வங்கதேசம் என்ற நாட்டை உருவாக்கினார் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி. வங்கதேச போரின் போது வல்லரசு நாடுகள் பாகிஸ்தானுக்கு உதவியபோதும், அதனை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கியவர் இந்திராகாந்தி. அதனால்தான் சொல்கிறேன். இந்திராகாந்தியின் தைரியத்தில் 50% கூட பிரதமர் மோடியிடம் இல்லை! ஒரு இக்கட்டான சூழலை எப்படி கையாள்வது என்று மோடிக்கு தெரியவில்லை.
ராணுவத்துக்கு முழு சுதந்திரம் வழங்கப்படவில்லை. இந்தியா தாக்குதல் நடத்தும் என்று முன்கூட்டியே பாகிஸ்தானிடம் கூறிவிட்டீர்கள், இந்தியாவின் தாக்குதல் வியூங்களையும் வெளிப்படையாக தெரிவித்துவிட்டீர்கள். போரைத் தொடங்கிவிட்டு தாக்குதலை நிறுத்துங்கள் என்று கூறினால், அது நமது வீரர்களை முடக்குவதாக ஆகாதா? பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாகிஸ்தானிடம் சரணடைந்து விட்டாரா?
இந்தியா - பாகிஸ்தான் போரை முடிவுக்கு கொண்டுவந்ததாக 26 முறை டிரம்ப் கூறிவிட்டார். டிரம்ப் பொய் சொல்லுகிறார் என்று கூறும் தைரியம் பிரதமருக்கு இல்லை. பாகிஸ்தான் ராணுவ அதிகாரியை டிரம்ப் விருந்துக்கு அழைக்கிறார். போரை நிறுத்தியற்காக நன்றி தெரிவித்ததாக கூறுகிறார். இது ஏன்? வெளியுறவுத்துறை அமைச்சர் என்ன செய்து கொண்டிருக்கிறார்?
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பாகிஸ்தானை மற்ற நாடுகள் கண்டித்தன. இப்போது கண்டிக்காதது ஏன்?
பஹல்காம் தாக்குதல் குறித்து எந்த ஒரு நாடும் பாகிஸ்தானை கண்டிக்கவில்லை. சீனா, பாகிஸ்தானுடன் இணைந்து செயல்படுகிறது. சீன உதவி பாகிஸ்தானுக்கு வழங்கப்படுகிறது. செயற்கைக்கோள் தகவல்கள் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் பாகிஸ்தானுக்கு சீனா வழங்குகிறது. தனது பிம்பத்தை பாதுகாக்க பிரதமர் மோடி ராணுவத்தை பயன்படுத்துகிறார். இது ஆபத்தானது.
நேற்று பேசிய வெளிப்புறவுறவுத்துறை அமைச்சர் ஒரு வார்த்தை கூட சீனாவை பற்றி குறிப்பிடவில்லை. ராணுவத்தை அரசியலுக்கு பயன்படுத்தக்கூடாது." எனத் தெரிவித்துள்ளார்.