கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான அச்சுதானந்தன் மறைவு, நாட்டையே உலுக்கிய நிலையில் இன்று (ஜூலை 22) கேரளாவில் மக்கள் வெள்ளத்துடன் அவரது இறுதி நிகழ்வு நடந்து முடிந்தது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் ரகுபதி நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்தினார்.
கேரள மாநிலத்தின் ஆலப்புழாவில் 1923ஆம் ஆண்டு அக்டோபர் 20 அன்று பிறந்த வே.ச.அச்சுதானந்தன், 1938ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்த இவர், இரு ஆண்டுகளில் தன்னை கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்டார்.
சுதந்திரப் போராட்டங்களில் கலந்துகொண்டு சுமார் 5 ஆண்டுகள் சிறையிலும், 4 ஆண்டுகளுக்கு மேல் தலைமறைவாகவும் வாழ்ந்த வரலாறு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அச்சுதானந்தனையே சேரும்.
1965ஆம் ஆண்டு தொடங்கிய இவரது தேர்தல் பயணம் 2016ஆம் ஆண்டு முதல்வராக ஆட்சிப் பொறுப்பேற்றது வரை நீடித்தது. கேரள சட்டப்பேரவையில் அதிக ஆண்டுகள் எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பு வகித்தவரும், கேரளாவின் வயதான முதலமைச்சராக பதவி வகித்தவரும், 100 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்த கேரளாவின் முன்னாள் முதல்வர் என்ற பெருமை கொண்டவருமாக அச்சுதானந்தன் விளங்கி வந்தார்.
அச்சுதானந்தன் பேச்சுகள் தனித்துவமாகவும், நகைச்சுவை சார்ந்ததுமாகவும் அமைந்ததால், மக்களை வெகுவாக ஈர்த்த தலைவர் என்ற பெயரைப் பெற்றார். தனது 82ஆவது வயதில் கேரள முதல்வராக பதவியேற்ற அச்சுதானந்தன் 2006 முதல் 2011 வரை, அப்பதவியில் நீடித்தார்.
இவரது ஆட்சிக்காலத்தில் கேரளாவின் தொழில்நுட்பத் துறையும், போக்குவரத்துத் துறையும் குறிப்பிடும்படியான வளர்ச்சி கண்டது. அரசியல் வாழ்வினால் மக்களின் மனங்களில் இடம்பிடித்த இவர், ‘சமரம் தன்னே ஜீவிதம்’ உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதியுள்ளார்.
வயது மூப்பின் காரணமாக, அச்சுதானந்தன் மறைவடைந்த செய்தி, கேரள மக்களிடையிலும், அரசியல் வட்டாரத்திலும் தவிர்க்க முடியாத துயராக மாறியுள்ளது.