பா.ஜ.க ஆட்சி செய்யும் உத்தர பிரதேச மாநிலத்தில் பெண்கள் மீதான தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. இந்நிலையில் 11 ஆம் வகுப்பு மாணவியை காவலர் ஒருவர் துப்பாக்கியை காட்டி, கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், பரூகாபாத் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 11 ஆம் வகுப்பு மாணவி, பள்ளிக்கு சென்றுள்ளார். ஆனால் இவர் பள்ளி நேரம் முடிந்தும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் பெற்றோர் பல இடங்களில் தங்கள் மகளை தேடி பார்த்துள்ளனர்.
அப்போது ஒரு காரில் இருந்து சிறுமி ஒருவரை வெளியே தள்ளிவிடுவதை அப்பகுதி மக்கள் பார்த்து பதறியடித்துள்ளனர். பின்னர் உடனே அந்த காரை அப்பகுதி மக்கள் விரட்டிப் பிடித்தனர். பிறகு விசாரித்தபோது, அந்த நபர் காவலர் என்றும் பள்ளி முடித்து விட்டு சிறுமி வீட்டிற்கு செல்லும் வழியில் துப்பாக்கியை காட்டி அவரை கடித்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.
பின்னர் அந்த காவலரை, காவல்நிலையம் அழைத்து சென்று ஒப்படைத்தனர். இது குறித்து போலிஸார் வழக்கு பதிவுப் செய்து அந்த காவலர் வினய் சவுகானை கைது செய்தனர். இந்த வன்கொடுமை சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.