மத்திய பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில முதலமைச்சராக மோகன் யாதவ் உள்ளார். இந்நிலையில் இவர் திறன் மேம்பாட்டு மாநாட்டிற்கு பங்கேற்பதற்காக தயாராகிக் கொண்டிருந்தார்.
இதற்கிடையில் முதலமைச்சர் செல்லும் கான்வாய் வாகனங்களுக்கு தனியார் பெட்ரோல் பங்கில் டீசல் நிரப்பப்பட்டுள்ளது. பின்னர் அங்கிருந்து செல்ல முயன்றபோது வாகனங்கள் பழுதாகியது.
பின்னர் வாகனங்களின் பழுதுக்கு காரணம் என்ன? என்று ஆய்வு செய்தபோது, 20 லிட்டர் டீசலில் 10 லிட்டர் தண்ணீர் கலந்து இருப்பது தெரியவந்தது. இது குறித்து முதலமைச்சரின் அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மாற்று வாகனத்தில் முதலமைச்சர் தனது நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார். பிறகு தண்ணீர் கலப்பட டீசல் வழங்கிய பெட்ரோல் பங்கிற்கு சீல்வைக்கப்பட்டது.
இது குறித்து பெட்ரோல் பங்க் மேலாளர், டீசலில் தண்ணீர் கலந்து இருப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். கனமழை காரணமாக, டீசல் இருந்த தொட்டியில் மழைநீர் கசிந்து இருக்கலாம் என கூறியுள்ளார்.