2020 ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வை எழுத ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை சேர்ந்த சச்சின் என்ற மாணவர் விண்ணப்பித்துள்ளார். ஆனால், இவர் தனக்கு பதிலாக ஆள்மாற்றட்டம் மூலம் தேர்வு எழுத சுபாஷ் சைனி என்ற ஆயுர்வேத மருத்துவரை அணுகி உள்ளார்.
பின்னர் தேர்வு எழுதுவதற்காக ரூ. 60 லட்சம் கொடுத்துள்ளார். பணத்தைப் பெற்றுக் கொண்ட ஆயுர்வேத மருத்துவர் சுபாஷ் சைனி மற்றொரு மருத்துவ மாணவர் அஜித் கௌரா என்பவரை அணுகி உள்ளார். அஜித் 2019 நீட் தேர்வில் வெற்றி பெற்று அப்போது பரத்பூர் மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு மருத்துவம் படித்து வந்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட அவர் திட்டமிட்டபடி மோசடிகள் செய்து சச்சினுக்கு பதிலாக தேர்வு எழுதியுள்ளார்.
அந்த தேர்வில் 667 மதிப்பெண்கள் பெற்று சச்சின் ஜோத்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார். அண்மையில் இந்த மோசடி புகார் வெளிப்பட்டதை தொடர்ந்து ஜோத்பூர் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வரும் சச்சின் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்காக தேர்வு எழுதி தற்போது பரத் பூர் மருத்துவக் கல்லூரியில் மருத்துவராக பணியாற்றி வரும் மருத்துவர் அஜித், இடைத்தரகராக செயல்பட்ட ஆயுர்வேத மருத்துவர் சுபாஷ் சைனி ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆயுர்வேத மருத்துவர் 2013 ஆம் ஆண்டு நீட் மோசடி வழக்கிலும் கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது. எய்ம்ஸ் மருத்துவ மாணவரும், ஆள்மாற்றம் நடத்தி தேர்வு எழுதிய மருத்துவரும் 5 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டிருப்பது ஜெய்ப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.