டெல்லி ஐ.ஐ.டியில் சண்டிகர் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் பயோமெக்கானிக்கல் இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் கல்லூரி விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில், இவரது விடுதி அறை பூட்டியே இருந்துள்ளது. இதனால் சக மாணவர்கள் கதவை கட்டிப்பார்த்தும் உள்ளே இருந்த எந்த பதிலும் வரவில்லை. மேலும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு உணவின்போதுதான் இவரை பார்த்துள்ளனர்.
இதனால் இது குறித்து விடுதி பாதுகாவலருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் அவர் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனே விரைந்து வந்த போலிஸார் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அவர் சடலமாக இருந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவரது உடலை மீட்ட போலிஸார் உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்த மாணவரின் உடலில் எந்தவிதமான காயங்களுக்கான அடையாளங்களும் இல்லை. அவரது படுக்கையில் வாந்தி எடுத்ததற்கான அடையாளங்கள் காணப்பட்டுள்ளது என போலிஸார் தரப்பில் கூறப்படுகிறது.
விடுதியின் அறையில் மர்மமான முறையில் மாணவர் உயிரிழந்த சம்பவம் ஐஐடியில் சகமாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள ஐஐடி பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.