இங்கிலாந்து உச்ச நீதிமன்றத்தில் வட்டமேசை மாநாடு நடைபெற்றது. இதில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பங்கேற்று பேசினார். அப்போது பி.ஆர்.கவாய், ”இந்தியாவில், நீதிபதிகள் ஓய்வு பெற்ற உடனேயே அரசு நிர்வாகத்தில் உயர் பொறுப்புகளில் நியமிக்கப்பட்டாலோ, தேர்தலில் போட்டியிடுவதற்காக ராஜினாமா செய்தாலோ அது குறிப்பிடத்தக்க கவலைகளை ஏற்படுத்துகிறது.
இது பொதுமக்கள் மத்தியில் நீதித்துறையின் நேர்மையில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.எனவே, நானும் எனது சக நீதிபதிகள் பலரும் ஓய்வுக்குப் பிறகு எந்த அரசு பதவிகளையும் ஏற்கமாட்டோம் என்று பகிரங்கமாக உறுதியளித்துள்ளோம். இது நீதித்துறையின் நம்பகத்தன்மையையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்கான முயற்சியாகும்" என தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் நீதித்துறையில் நிகழும் ஊழல்கள் நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையை சிதைப்பதாக, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கவலை தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்,"ஒவ்வொரு அமைப்பும், எவ்வளவு வலுவானதாக இருந்தாலும், தொழில்முறை முறைகேடு தொடர்பான பிரச்சினைகளுக்கு ஆளாகிறது. நீதித்துறைக்குள்ளும் ஊழல் மற்றும் முறைகேடு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
இத்தகைய நிகழ்வுகள் தவிர்க்க முடியாமல் பொதுமக்களின் நம்பிக்கையில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, ஒட்டுமொத்த அமைப்பின் நேர்மையின் மீதான நம்பிக்கையை இது சிதைக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வரும்போது, உச்சநீதிமன்றம் அதன் மீது உடனடி நடவடிக்கை எடுத்து வருகிறது” என தெரிவித்துள்ளார்.