கர்நாடகா மாநிலம், பெலகாவி மாவட்டம் ராய்பாக் தாலுகா மேகாலி பகுதியில் ராமமந்திர் என்ற கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமாக ஒருமடமும் உள்ளது. இங்கு லோகேஷ்வர் மகாராஜா மடத்தின் மடாதிபதியாக இருந்து வருகிறார்.
இந்நிலையில், மகாலிங்கபுராவை சேர்ந்த 17 வயது இளம் பெணுக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அவரது பெற்றோர் மகளை மடத்தில் தங்கவைத்து வந்துள்ளனர். இம்மாதமும் மகளை அவரது பெற்றோர் மடத்தில் விட்டுச் சென்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மே 13 ஆம் தேதி, அந்த பெண்ணை அவரது வீட்டில் விடுவதாக கூறி காரில் லோகேஷ்வர் மகாராஜா அழைத்து சென்றுள்ளார். ஆனால் அவர் வீட்டுக்கு அழைத்துச் செல்லாமல் ராய்ச்சூரில் உள்ள ஒரு தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்று தங்கியுள்ளார்.
அங்கு வலுக்கட்டாயமாக இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பிறகு அதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். பிறகு வீட்டிற்கு வந்த அப்பெண் தனக்கு நடந்த கொடுமைகளை பெற்றோர்களிடம் கூறியுள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது குறித்து மே 17 ஆம் தேதி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை தொடர்ந்து சாமியார் லோகேஷ்வர் மகாராஜா மீது போக்சோவில் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். மேலும் இதேபோன்று வேறுபெண்களிடம் தவறாக நடந்து கொண்டு இருக்கிறாரா? என்பது குறித்தும் போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.