ஒன்றியத்தில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சி அமைந்ததில் இருந்தே சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல்களும், வன்முறைச் சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது.
அதிலும் மாட்டிறைச்சி எடுத்து செல்வதாக கூறி இஸ்லாமிய மக்கள் மீது இந்துத்துவா கும்பல் நடத்தும் அராஜக தாக்குதல் சகஜமான ஒன்றாக மாறிவிட்டது. இவர்களது அராஜகத்தை உத்தர பிரதேசம், மத்திய பிரதேச மாநில பா.ஜ.க அரசுகள் கைகட்டி வேடிக்கைப் பார்த்து வளர்த்து வருகிறது.
இப்படி மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொள்ளும் இந்த கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்காமல் அவர்களை பா.ஜ.க அரசு பாதுகாப்பு கொடுத்து வருகிறது. இதனால் இவர்கள் துணிச்சலுடன் இஸ்லாமிய மக்கள் மீது தங்கள் தாக்குதல்களை தொடுத்து வருகிறார்கள்.
தற்போது உத்தர பிரதேச மாநிலம் அலிகரில் மாட்டிறைச்சி எடுத்து சென்றதாக கூறி 4 இஸ்லாமியர்கள்மீது இந்துத்துவா கும்பல் கொடூரமாக தாக்கியுள்ளது. மேலும் அவர்களது வாகனத்தையும் தீ வைத்து எரித்துள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் சலீம்கான், அகீல் இப்ராஹிம் மற்றும் 2 தொழிலாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ பேபி "4 இஸ்லாமியர்க மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. காவல்துறை அலட்சியத்துடன் நடந்து வருகிறது. ஒன்றிய பா.ஜ.க ஆட்சியில் இந்துத்துவா வகுப்புவாத கும்பல் ஆட்சி செழித்து வளர்கிறது, தாக்குதல் நடத்தியவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.