பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இறங்கிய இந்தியா, கர்னல் சோபியா குரேஷி தலைமையிலான படைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. ஆபரேசன் சிந்தூர் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலை குறிப்பிட்ட பா.ஜ.க ஆளும் மத்திய பிரதேச அமைச்சர் விஜய் ஷா, தீவிரவாதிகள் மற்றும் கர்னல் சோபியா குரேஷியை மதரீதியாக ஒப்பிட்டு பேசினார்.
இதற்கு கண்டனம் தெரிவித்த மத்திய பிரதேச மாநில உயர் நீதிமன்றம், விஜய் ஷா மீது, 4 மணி நேரத்தில் வழக்குப் பதிந்து விசாரிக்க வேண்டும் என காவல் துறைக்கு உத்தரவிட்டது. இதனை அடுத்து மத்திய பிரதேச பாஜக அமைச்சர் விஜய் ஷா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மத்தியப்பிரதேச உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை கோரியும், முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டுமெனவும் அமைச்சர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது உயர்நீதிமன்ற உத்தரவுக்கும், எஃப்.ஐ.ஆர். மீது தடை விதிக்கவும் நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர்.
மேலும் அமைச்சராக இருக்கும் ஒருவர் இவ்வாறு பொறுப்பற்ற முறையில் கருத்துகளை தெரிவிக்கக் கூடாது என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, அமைச்சர் விஜய் ஷா மன்னிப்பு கோருவதாக அவரது வழக்கறிஞர் மனு ஒன்றிய தாக்கல் செய்தார். இதற்கு உச்சநீதின்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதில்,”நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட பிறகு அமைச்சர் மன்னிப்பு கேட்டதை ஏற்க முடியாது. அவதூறாக பேசிவிட்டு சில நேரங்களில் முதலை கண்ணீர் வடிப்பதை ஏற்கமுடியாது.
“என்னுடைய பேச்சு மனதை புண்படுத்தி இருந்தால்..” எனக் கூறி மன்னிப்பு வீடியோ வெளியிட்டுள்ளார். மன்னிப்பில் கூட உண்மைத்தன்மை இல்லை. வழக்கில் இருந்து தப்பிக்க வீடியோ வெளியிட்டுள்ளார். இவரது மன்னிப்பை முழுமையாக நிராகரிக்கிறோம் என நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது. மேலும் அமைச்சர் விஜய் ஷா மீதான வழக்கை விசாரிக்க சிறப்பு குழுவை நாளை காலை 10 மணிக்குள் அமைக்க மத்தியப்பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.