ஜம்மு - காஷ்மீரின் பகல்காம் பகுதியில், கடந்த ஏப்ரல் 23 அன்று சுற்றுலா பயணிகளை குறிவைத்து நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில், சுற்றுலாப் பயணிகள் சுமார் 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இந்தியாவிலிருந்து பாகிஸ்தானியர்களும், பாகிஸ்தானிலிருந்து இந்தியர்களும் வெளியேறுவதற்கான நடவடிக்கைகள் மும்முரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்தியாவிலிருந்து பாகிஸ்தானிற்கு திருப்பி அனுப்பும் ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு, பாகிஸ்தானியர்கள் பலரால் வருத்தம் தெரிவிக்கப்படு வருகிறது.
இது குறித்து, பஞ்சாப் மாநில எல்லை வழி, பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்படும் பாகிஸ்தானியர் ஒசாமா, “கடந்த 17 ஆண்டுகளாக, நான் இந்தியாவில் தான் இருக்கிறேன். 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு படித்ததும் இங்குதான்.
இந்தியாவில் எனக்கு வாக்கு உரிமை உள்ளது, ரேஷன் அட்டை கூட இருக்கிறது. தற்போது பட்டப்படிப்பிற்கு பாதியில், நாட்டைவிட்டு வெளியேற்றப்படுகிறேன். நான் இப்போது என்ன செய்வது? என் எதிர்காலம் என்ன ஆவது?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரைத் தொடர்ந்து, பஞ்சாப் மாநில எல்லை வழி, பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்படும் பாகிஸ்தானிய பெண், “ஜம்மு - காஷ்மீரில் அநீதி இழைத்தவர்களின் கால்கள் முறிக்கப்பட வேண்டும், அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும். அதில் மாற்றுக்கருத்து இல்லை.
ஆனால், அச்சம்பவத்திற்கு சற்றும் தொடர்பில்லாத, நாங்கள் ஏன் தண்டிக்கப்பட வேண்டும்? நான் 41 ஆண்டுகளாக இந்தியாவில் இருக்கிறேன். எங்களை வெளியேற்றுவது, முற்றிலும் நியாயமற்றது” என தெரிவித்துள்ளார்.
இவர்களைத் தொடர்ந்து, திருப்பி அனுப்பப்படும் பாகிஸ்தானியர் முஃப்சலா, “பஹல்காமில் நடந்தது தீவிரவாத நடவடிக்கை. அப்பாவி மக்கள், இத்தாக்குதலால் உயிரிழந்துள்ளனர். அநீதி இழைத்தவர்கள் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால், இதற்கு நாங்கள் பாதிக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.
எங்களின் வீடு இங்குதான் உள்ளது. நாங்கள் வீட்டிற்கு திரும்ப வேண்டும். என் இரு குழந்தைகளும், இந்தியாவில்தான் பிறந்தார்கள். கடந்த 3 ஆண்டுகளாக இந்திய குடியுரிமை பெற முயற்சிக்கிறோம். ஆனால், எங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது” என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.