டீப் ஃபேக் உள்ளிட்ட இணைய தள குற்றங்கள் பற்றிய கேள்விகளை மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சரிடம் திமுக துணைப் பொதுச் செயலாளரும், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி எழுத்துபூர்வமாக எழுப்பினார்.
இதற்கு ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை இணையமைச்சர் ஜிதின் பிரசாதா அளித்த பதிலில், “தொழில்நுட்ப பயன்பாட்டை ஜனநாயகப்படுத்துவதற்கான பிரதமரின் தொலைநோக்குப் பார்வையுடன் இணைந்து, 'அனைவருக்கும் AI' என்ற கருத்தில் ஒன்றிய அரசும் வலிமையாக இருக்கிறது. இந்த முயற்சி, சமூகத்தின் அனைத்துத் துறைகளுக்கும் AI பயனளிப்பதை உறுதி செய்வதையும், புதுமை மற்றும் வளர்ச்சியை இயக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. சுகாதாரம், விவசாயம் மற்றும் கல்வி போன்ற துறைகளில் நமது மக்களின் நலனுக்காக செயற்கை நுண்ணறிவின் (AI) சக்தியைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.
அதே நேரத்தில், AI-யால் ஏற்படும் அபாயங்கள் மற்றும் AI பாதுகாப்பானது மற்றும் நம்பகமானது என்பதை உறுதி செய்வதற்கான கட்டுப்பாடுகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை அரசாங்கம் அறிந்திருக்கிறது.
இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்களின் விரிவான பொது ஆலோசனைகளுக்குப் பிறகு, ஒன்றிய அரசு 25.02.2021 அன்று தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் குறியீடு) விதிகள், 2021 ஐ அறிவித்துள்ளது, இதில் 28.10.2022 மற்றும் 6.4.2023 அன்று திருத்தங்களும் செய்யப்பட்டிருக்கின்றன.
பொதுமக்கள் மற்றும் இது தொடர்பான துறைகளைச் சேர்ந்தவர்களிடம் இருந்து உள்ளீடுகளைப் பெற்று, தற்போதுள்ள சட்டத்தில் தேவையான மாற்றங்கள் மற்றும் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளிட்ட முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டிருக்கிறது.
டீப் ஃபேக்குகளை உருவாக்குதல், விநியோகித்தல் மற்றும் பரப்புதல் ஆகியவற்றால் ஏற்படும் சைபர்-பாதுகாப்பு அபாயங்கள் மற்றும் தனிநபர் மட்டத்திலோ அல்லது தேசிய அளவிலோ ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய டீப் ஃபேக்குகளை உருவாக்க உதவும் தொழில்நுட்பங்கள் தற்போது தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 மற்றும் தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021 போன்ற விதிகளின் கீழ் சட்ட ரீதியாக எதிர்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஐடி சட்டம் மற்றும் ஐடி விதிகள், 2021 ஆகியவை தீங்கு விளைவிக்கும், மற்றும் போலியான உள்ளடக்கத்தை அகற்றுவதற்கான கட்டமைப்பை கூட்டாக வழங்குகின்றன, மேலும் இணையத்தில் பயனர்கள் அதன் ஆபத்துகளிலிருந்து பாதுகாக்கப்படுவதை உறுதி செய்கின்றன. இதில் செயற்கையாக உருவாக்கப்பட்ட மற்றும் வெளிப்படையாக தவறான உள்ளடக்கம் ஆகியவை அடங்கும்.
மேலும், AI ஆல் இயக்கப்படும் தவறான தகவல்கள் மற்றும் டீப் ஃபேக்குகளின் பரவலான புழக்கத்தால் ஏற்படும் தீங்குகள் மற்றும் குற்றங்களை நிவர்த்தி செய்வதற்கான அவசரத்தை உணர்ந்து, டீப்ஃபேக்குகளை எதிர்ப்பதில் அடையாளம் காணப்பட்ட சவால்களைப் பற்றி விவாதிக்க ஒன்றிய தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சகம் ஏற்கனவே இத்துறை தொடர்பான நிபுணர்கள், சமூக ஊடக நிபுணர்கள் ஆகியோருடன் பல ஆலோசனைகளை நடத்தியது.
இதன் அடிப்படையில் ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் கடந்த 26.12.2023, 15.03.2024 மற்றும் 03.09.2024 தேதிகளில் இது தொடர்பான அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், ஐடி. விதிகள் 2021-க்கு உட்பட்ட விதி 3(1)(b) இன் கீழ் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள அவர்களின் கடமைகளுக்கு இணங்குவது குறித்து நினைவூட்டப்பட்டனர்.
மேலும் தீங்கிழைக்கிற, போலியாக சித்திரிக்கப்பட்ட செயற்கை ஊடகங்கள் மற்றும் டீப் ஃபேக்குகள் உள்ளிட்ட சட்டவிரோத உள்ளடக்கத்தை எதிர்கொள்வது குறித்தும் அவர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.
ஒவ்வொரு தகவல் தொழிநுட்ப நிறுவனமும் மற்றும் தளமும் அதன் கணினி வளத்தை AI மாதிரி(கள்)/ LLM/ ஜெனரேட்டிவ் AI, மென்பொருள்கள் பயன்படுத்துவதன் மூலம் எந்தவொரு சார்பு அல்லது பாகுபாட்டையும் அனுமதிக்காது அல்லது தேர்தல் செயல்முறையின் ஒருமைப்பாட்டை அச்சுறுத்தாது என்பதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
பிரதமரின் முதன்மை அறிவியல் ஆலோசகர் (PSA) தலைமையில், இந்திய கல்வித்துறை, தொழில்துறை மற்றும் அரசாங்கத்தைச் சேர்ந்த பல்வேறு தரப்பினருடன், இந்தியாவுக்கான குறிப்பிட்ட ஒழுங்குமுறை AI கட்டமைப்பிற்கான ஆலோசனைக் குழுவை அரசாங்கம் அமைத்துள்ளது.
AI இன் பாதுகாப்பான மற்றும் நம்பகமான மேம்பாடு மற்றும் பயன்பாட்டிற்கான பொறுப்பான AI கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பான அனைத்து சிக்கல்களையும் நிவர்த்தி செய்யும் நோக்கத்துடன் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. டீப்ஃபேக் வீடியோக்கள் மற்றும் படங்களைக் கண்டறிவதற்கான மென்பொருளை வடிவமைத்தல் மற்றும் மேம்பாட்டு திட்டங்களுக்கு அரசாங்கம் நிதி உதவி அளிக்கிறது.
இணையத்தைப் பயன்படுத்தாமல் டீப்ஃபேக்குகளைக் கண்டறிய ஃபேக் செக் (FakeCheck) என்ற பெயரில் டீப் ஃபேக்குகளைக் கண்டறியும் திறன் கொண்ட ஒரு முன்மாதிரி கருவி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தக் கருவி, சோதனை செய்வதற்கும் மேலும் சுத்திகரிப்புக்கான கருத்துகளைப் பெறுவதற்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட விசாரணை நிறுவனங்களுடன் பகிரப்பட்டுள்ளது.
India AI மிஷனின் கீழ் AI தொழில்நுட்பங்களின் பொறுப்பான மேம்பாடு, பயன்படுத்தல் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான வலுவான தேவையை நிவர்த்தி செய்ய வாட்டர்மார்க்கிங் & லேபிளிங், நெறிமுறை AI கட்டமைப்புகள், AI இடர் மதிப்பீடு மேலாண்மை, டீப்ஃபேக் கண்டறிதல் கருவிகள் போன்றவை தொடர்பாக தகுதியான ஆலோசனைகள் வரவேற்கப்படுகினறன.
இந்திய கணினி அவசரநிலை பதிலளிப்பு குழு (CERT ) சமீபத்திய சைபர் அச்சுறுத்தல்கள், பாதிப்புகள் குறித்து எச்சரிக்கைகள் மற்றும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி தீங்கிழைக்கும் தாக்குதல்கள் மற்றும் கணினிகள், நெட்வொர்க்குகள் மற்றும் தரவைப் பாதுகாப்பதற்கான எதிர் நடவடிக்கைகள் ஆகியவை இதில் அடங்கும்.
இந்தச் சூழலில், செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான பயன்பாடுகளிலிருந்து எழும் எதிர்மறை அச்சுறுத்தல்களைக் குறைப்பதற்கு எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த அறிவுறுத்தலை மே 2023 இல் வெளியிடப்பட்டது. இதையடுத்து நவம்பர் 2024 இல் டீப்ஃபேக் அச்சுறுத்தல்கள் மற்றும் டீப் ஃபேக்குகளிலிருந்து பாதுகாக்கப்படுவதற்குப் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அடுத்த அறிவுறுத்தலை வெளியிட்டது.
டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவதற்கும் டிஜிட்டல் அபாயங்களைச் சமாளிப்பதற்கும் பயனர்கள் மற்றும் நிறுவனங்களிடையே விழிப்புணர்வை அதிகரிக்க CERT பின்வரும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது:
நவம்பர் 2023 இல் பல்வேறு அமைச்சகங்களுக்கும் டிஜிட்டல் தனிப்பட்ட தரவு அல்லது முக்கியமான தனிப்பட்ட தரவு அல்லது தகவல் உள்ளிட்ட தகவல்களைச் செயலாக்கும் அனைத்து நிறுவனங்களாலும் சைபர் பாதுகாப்பை வலுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
தீங்கிழைக்கும் நிரல்களைக் கண்டறிய சைபர் ஸ்வச்ச்தா கேந்திராவை ((Botnet Cleaning and Malware Analysis Centre)) இயக்குகிறது, மேலும் அவற்றை அகற்ற இலவச கருவிகளை வழங்குகிறது, மேலும் குடிமக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு சைபர் பாதுகாப்பு குறிப்புகள் மற்றும் சிறந்த ஆலோசனைகளை வழங்குகிறது.
நிதித் துறையில் நடக்கும் சைபர் குற்றச் சம்பவங்களை தடுப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் CERT Fin என்ற அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.
பயனர்கள் தங்கள் டெஸ்க்டாப்கள் மற்றும் மொபைல் போன்களைப் பாதுகாப்பதற்கும் ஃபிஷிங் தாக்குதல்களைத் தடுப்பதற்கும் பாதுகாப்பு குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
சைபர் தாக்குதல்கள் மற்றும் சைபர் மோசடிகள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக CERT தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு மாதம், பிப்ரவரி மாதம் முதல் வாரம் செவ்வாய்க்கிழமை பாதுகாப்பான இணைய தினம், பிப்ரவரி 1 முதல் 15 வரை ஸ்வச்ச்த பக்வாடா மற்றும் புதன்கிழமை 1 ஆம் தேதி சைபர் ஜாக்ரூக்தா திவாஸ் (CJD) ஆகியவற்றைக் கொண்டாடுகிறது.
குடிமக்கள் மற்றும் தொழில்நுட்ப சைபர் சமூகத்தினருக்கான பல்வேறு நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகளை ஏற்பாடு செய்வதன் மூலம் இது நடத்தப்படுகிறது.
2024 இல் சைபர் விழிப்புணர்வு மாதத்தின்போது, அரசு மற்றும் தொழில்துறை தரப்பினருடன் இணைந்து வினாடி வினா, இணைய கருத்தரங்குகள் போன்ற பல விழிப்புணர்வு நடவடிக்கைகளை CERT-In நடத்தியது. இவ்வாறு பல்வேறு வகைகளில் சைபர் தாக்குதல்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது” என தெரிவித்துள்ளார்.