பாஜக மற்றும் அதன் கூட்டணி மாநிலங்களில் நாளுக்கு நாள் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து காணப்படும் நிலையில், தற்போது பள்ளி மாணவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சக மாணவர் உயிரிழந்த சம்பவம் பீகாரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக கூட்டணி ஆளும் பீகாரின் ரோஹ்தாஸ் மாவட்டம் சசாராம் என்ற பகுதியில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு அந்த பகுதியை சேர்ந்த பல்வேறு மாணவர்களும் படித்து வரும் நிலையில், தற்போது தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் கடந்த வியாழன்கிழமை (பிப்.20) அன்று மாலை 10-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதி முடித்துவிட்டு ஆட்டோவில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
அப்போது மற்றொரு மாணவர் தனது நண்பர்களுடன் அந்த ஆட்டோவை பின்தொடர்ந்து மறித்து, ஆட்டோவில் இருந்த மாணவருடன் சண்டையிட்டுள்ளார். இந்த சண்டையின்போதுதனது கையில் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால், ஆட்டோவில் இருந்த மாணவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதில் பாதிக்கப்பட்ட 2 மாணவர்களும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், அமித் குமார் என்ற மாணவர் உயிரிழந்தார். மற்றொரு மாணவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில், சம்பவம் நடந்ததற்கு முந்தைய நாள் (பிப்.19) சமஸ்கிருத தேர்வு நடைபெற்றுள்ளது. இந்த தேர்வின்போது, உயிரிழந்த அமித் குமாரிடம், குற்றம் இழைத்த மாணவர், தேர்வின் கேள்விகளுக்கு பதில் கேட்டுள்ளார். அதோடு, அவரது தேர்வு விடைத்தாளையும் காண்பிக்க வலியுறுத்தியுள்ளார்.
ஆனால் உயிரிழந்த மாணவர் அமித் குமார் காண்பிக்க மறுத்துள்ளார். இந்த விவகாரத்தில் இருவருக்கும் ஏற்பட்ட சண்டையே துப்பாக்கிச்சூடு அளவிற்கு சென்றுள்ளது தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார், நாட்டுத்துப்பாக்கியை கைப்பற்றியதோடு, மாணவர் பயன்படுத்திய செல்போனையும் பறிமுதல் செய்து, மாணவரை கைது செய்துள்ளனர்.
அதோடு சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி மாணவர், சக மாணவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.