ஆந்திர மாநிலம் அன்னமையா மாவட்டத்தில் உள்ள குர்ரம் கொண்டா நகரில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் அதே நகரை சேர்ந்த இளம் பெண் ஒருவர் மதன பள்ளியில் உள்ள கல்லூரியில் பட்டப் படிப்பு படித்துக் கொண்டிருந்தபோது அதே கல்லூரியில் படித்த கணேஷ் உடன் அறிமுகம் ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியதாக கூறப்படுகிறது.
இதனிடையே படித்து முடித்த பின் இரண்டு பேரும் தாங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டனர். இதன் காரணமாக அவர்களிடமிருந்த நெருக்கம் குறைந்து கடந்த 22ஆம் தேதி அந்த இளம் பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.
இதை அறிந்து அந்த பெண்ணை தொடர்பு கொண்ட கணேஷ் என்னை திருமணம் செய்து கொள் என்று வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த இளம் பெண் பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று உறுதியாக கூறிவிட்டார் என்றும் கூறப்படுகிறது.
இதனால் ஆவேசமும் ஏமாற்றமும் அடைந்த கணேஷ் காதலர் தினமான இன்று அந்த இளம் பெண் வீதியில் சென்று கொண்டிருந்தபோது மடக்கி பிடித்து கத்தியால் குத்தி, முகத்தில் ஆசிட்டை ஊற்றி கொலை முயற்சியில் ஈடுபட்டு வெறியாட்டம் ஆடி அட்டூழியத்தில் ஈடுபட்டு தப்பி சென்று விட்டார்.
வலியால் துடித்த அந்த இளம் பெண்ணை மீட்ட குடும்ப உறுப்பினர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மதனப்பள்ளியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்துள்ள குர்ரம் கொண்டா போலீசார் தப்பி ஓடிய கணேசை தீவிரமாக தேடி வருகின்றனர்.