பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள Necrophilia நோய்க்கு, இந்தியாவில் இன்னும் சட்டம் இயற்றப்படவில்லை என்பது வருத்தத்திற்குரிய ஒன்றாக உள்ளது. Necrophilia என்பது இறந்த உடலுடன் உறவு கொள்ளும் ஒரு மன நோயாகும். இந்த மன நோயால் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறுகிய அளவில் இருந்தாலும், அவர்களில் சிலர் தற்கொலையும் செய்துள்ளனர்.
ஒரு சிலர் இறந்த உடலுடன் உறவு கொள்வதற்காக உயிருடன் இருப்பவரை கொன்று, பிறகு உறவு கொள்வர். அப்படி ஒரு சம்பவம்தான் கடந்த 2015-ம் ஆண்டு கர்நாடகாவில் நடந்துள்ளது. Computer வகுப்பு முடித்து இரவு நேரத்தில் 21வயது இளம்பெண் தனியாக சென்றுகொண்டிருந்த போது அவரை இழுத்து சென்று கழுத்தை அறுத்து கொலை செய்து, பின்னர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் ரங்கராஜு என்ற கொடூரன்.
இவர் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்ட நிலையில், குற்றவாளிக்கு கடுங்காவல் சிறைத்தண்டனையும், கொலை குற்றத்திற்கு ரூ. 50,000 அபராதமும் விதித்து செஷன்ஸ் நீதிபதி உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக, ரங்கராஜுக்கு மேலும் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும் ரூ. 25,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
இதை எதிர்த்து குற்றவாளி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதனை கடந்த 2023ம் ஆண்டு விசாரித்த நீதிமன்றம், குற்றவாளி மீதான கொலை குற்றத்தை உறுதி செய்தது. ஆனால் “இந்திய தண்டனைச் சட்டத்தின் 375 மற்றும் 377 பிரிவுகளின் விதிகளை கவனமாகப் படித்தால், இறந்த உடலை மனிதனாகவோ அல்லது நபராகவோ அழைக்க முடியாது என்பது தெளிவாகிறது.
இதனால், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 375 அல்லது 377 இன் விதிகள் ஈர்க்கப்படாது, ”என்று பாலியல் குற்றத்தில் இருந்து விடுவித்தது. அதோடு பிரிவு 376 (பாலியல் வன்கொடுமை தண்டனை) கீழ் தண்டனைக்குரிய எந்த குற்றமும் நடக்கவில்லை என்று கூறிய நீதிமன்றம், "இறந்த உடலில் உடலுறவு கொள்வது Necrophilia-வே தவிர வேறில்லை" என்று கூறியது.
கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, பாலியல் வன்கொடுமைக்கான வரையறையின் 7வது விளக்கத்தின் கீழ், ஒரு பெண் சம்மதத்தைத் தெரிவிக்க முடியாத சூழ்நிலையில் நடக்கும் உடலுறவு வன்கொடுமையாகக் கருதப்படும். இங்கேயும் இறந்த உடலால் சம்மதம் தெரிவிக்க முடியாது, எனவே இதை வன்கொடுமையாக பாவிக்க வேண்டும் என்று கர்நாடக அரசு தரப்பு வாதிட்டது.
ஆனால் இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், Necrophilia ஐ.பி.சி. தன்டனைச் சட்டத்தின் கீழ் ஒரு குற்றமல்ல என்றும், உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை என்று தீர்ப்பு வழங்கியது.
Necrophilia நோய்க்கு எதிராக இந்தியாவில் எந்த ஒரு சட்டமும் இல்லை. கனடா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு சட்டங்களின் கீழ் நெக்ரோபிலி தடை செய்கின்றன. அதோடு ஒரு சில நாடுகளில் 6 மாதங்கள் முதல் 2 வருடங்கள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளன.
இதே போன்று இந்தியாவிலும் இந்த Necrophilia நோயால் தவறு செய்பவருக்கு சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தி வருகின்றனர்.