பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான அத்துமீறல், பாலியல் வன்கொடுமை, திருட்டு, கொலை, கொள்ளை என பல குற்றச்சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக குஜராத், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் குற்ற செயல்களில் முன்னிலை வகிக்கிறது. இந்த சூழலில் தற்போது உத்தர பிரதேசத்தில் டிரான்ஸ்பார்மர் திருட்டு போனதால் ஒரு கிராமமே இருளில் மூழ்கி கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தின் புதான் என்ற பகுதி அருகே அமைந்துள்ளது சோஹ்ரா என்ற கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 5 ஆயிரம் பேர் வசிக்கும் நிலையில், இங்கு மின்சாரத்திற்காக 250 கிலோ வாட் டிரான்ஸ்பார்மர் இருந்தது. இந்த டிரான்ஸ்பார்மர் மூலம் கிராமம் முழுவதும் மின் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த சூழலில் இந்த கிராமத்தில் அமைந்துள்ள டிரான்ஸ்பார்மரை மர்ம கும்பல் திருடியுள்ள சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, கடந்த டிச.14-ம் தேதியன்று இரவு நேரத்தில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நீண்ட நேரமாகியும் மின்சாரம் வரவில்லை. இதனால் கிராம மக்கள் மறு நாள் காலை வந்து பார்க்கையில், அங்கிருந்த டிரான்ஸ்பார்மர் காணாமல் போனது தெரியவந்தது. மேலும் அதன் பாகங்கள் பல்வேறு பகுதியாக பிரிக்கப்பட்டு, சற்று தொலைவில் உள்ள வயல்களில் இருந்த வைக்கோல் குவியலுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
இதனை கண்ட கிராம மக்கள் உடனே இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். மேலும் தங்களுக்கு மாற்று டிரான்ஸ்பார்மர் உடனடியாக வழங்க வேண்டுமென்று கோரிக்கையும் வைத்தனர். எனினும் தற்போது வரை 25 நாட்களுக்கு மேலாகியும், அந்த கிராம மக்கள் மின்சாரம் இன்றி தவிக்கின்றனர்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், "மின்சாரம் இல்லாமல் நாங்கள் மிகவும் துன்புறுத்தலுக்கு உள்ளாகிறோம். மாணவர்கள் தங்கள் தேர்வுக்கு கூட தயாராக முடியவில்லை. இதனால் குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் இல்லாமல் செல்போன்கள் பயன்படுத்த முடியவில்லை. மின் மோட்டார்களை இயக்க முடியாததால் விவசாய பணி பாதிக்கப்பட்டுள்ளது." என்கின்றனர்.
தொடர்ந்து இதுகுறித்து போலீசார் கூறுகையில், " மின்சாரம் வந்து கொண்டிருந்த கம்பி உட்பட அனைத்தும் திருடப்பட்டுள்ளது. அதனால் இதில் மின் ஊழியருக்கும் தொடர்பிருக்க வாய்ப்புள்ளது. சிசிடிவி கேமிரா பதிவுகள், செல்போன் அழைப்புகளை விசாரித்து வருகிறோம். விரைவில் குற்றவாளிகள் கண்டறியப்படுவர்" என்கின்றனர்.