மணிப்பூர் மாநிலத்தில் இரு சமூகத்திற்கு இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக மோதல்போக்கு இருந்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளது.
நேற்றுக்கூட காங்போக்பி மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில் மணிப்பூரை எரிக்கும் தீக்குச்சியாக பா.ஜ.க உள்ளது என மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்துள்ளார்.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மல்லிகார்ஜூன கார்கே,”பா.ஜ.கவுக்கு வாக்கு கேட்பதற்காக மணிப்பூருக்கு 2022 ஆம் ஆண்டு ஜனவரியில் நீங்கள் கடைசியாக அங்கு சென்றீர்கள். பின்னர் 2023 ஆம் ஆண்டு மே மாதம் அங்கு வன்முறை வெடித்தது. 600 நாட்களுக்கு மேலாக மணிப்பூர் பற்றி எரிகிறது.
மேலும் மாநிலத்தில் கிராமங்கள் கிராமங்கள் அழிக்கப்பட்டதை செயற்கைக்கோள் படங்கள் மூலம் ஊடக அறிக்கைகள் இப்போது வெளிப்படுத்தியுள்ளன. சமீபத்தில் காங்போக்பி மாவட்டத்தில் ஒரு கும்பல் காவல்துறை கண்காணிப்பாளரை தாக்கியதில் புதிய வன்முறை ஏற்பட்டது.
உங்கள் திறமையற்ற மற்றும் வெட்கக்கேடான முதலமைச்சர் வருத்தம் தெரிவித்தாலும், மணிப்பூருக்கு பிரதமர் மோடி செல்லாமல் இருப்பது ஏன்?. 250 க்கும் மேற்பட்ட அப்பாவிகள் மரணம் மற்றும் 60,000 இடம்பெயர்ந்துள்ள அழகிய எல்லை மாநிலத்தை கொதிநிலையில் வைத்திருக்க பிஜேபிக்கு சில சுயநலங்கள் உள்ளன என்பதை நாங்கள் மிகுந்த பொறுப்புடன் மீண்டும் கூறுகிறோம். மக்கள் இன்னும் 20 மாதங்களாக முகாம்களில் வாழ்கின்றனர்.உச்சநீதிமன்றம் கூட அமைதி மற்றும் இயல்பு நிலையை உறுதி செய்வது மத்திய மற்றும் மாநில அரசுகளின் முதன்மை பொறுப்பு என்று கூறியுள்ளது.
மணிப்பூரில் உள்ள இந்தியா கூட்டணி கட்சிகள் பிரதமரிடம் மூன்று கோரிக்கைகளை முன்வைத்தன.
1.2024 முடிவதற்குள் மணிப்பூருக்கு வரவேண்டும் என கூறினர். ஆனால் நீங்கள் செல்லவில்லை.
2. அனைத்து அரசியல் கட்சி தலைவர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தினர். ஆனால் நீங்கள் செய்யவில்லை.
3. மணிப்பூர் பிரச்சனையில் நீங்கள் நேரடியாக தலையிட வலியுறுத்தினர். ஆனால் நீங்கள் செய்யவில்லை. இதில் ஒன்றை கூட பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை” என கூறியுள்ளார்.