ஆன்லைன் மோசடிகளை தடுக்க 3 வகையான வங்கிக் கணக்குகளை ரத்து செய்ய ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பால் மக்கள் அச்சமும், குழப்பமும் அடைந்துள்ளனர். ரத்து செய்யப்போவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள 3 வகையான வங்கிக்கணக்குகள் என்ன? வங்கிக்கணக்குகள் ரத்து ஆகாமல் இருக்க செய்ய வேண்டியது என்ன என்பது பற்றி இந்த செய்தித்தொகுப்பில் பார்க்கலாம்:-
வங்கிக் கணக்குகள் தொடர்பான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி மாற்றியுள்ளது. இந்த புதிய விதிகள் ஜனவரி 1 முதல் அமலுக்கு வந்துள்ளது.இந்த புதிய விதிகள் வங்கித் துறையில் டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் நவீனமயமாக்கலுக்கு உதவும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
அதேநேரத்தில் புதிய விதிமுறைகளின்படி, 3 வகையான வங்கிக் கணக்குகள் மூடக்கப்படும் என ரிசர்வ் வங்கி தரப்பில் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதன்படி, நீண்ட காலமாக எந்தப் பரிவர்த்தனையும் செய்யப்படாத வங்கிக் கணக்குகள் மற்றும் 2 ஆண்டுகளாக வங்கிக் கணக்கில் எந்தப் பரிவர்த்தனையும் இல்லை என்றால் அந்தக் கணக்கு செயலற்ற வங்கி கணக்கு எனப்படும். இந்த வகை வங்கிக் கணக்குகள் மூடப்படும்.
இரண்டாவதாக, ஒரு வருடமாக எந்த பணப்பரிவர்த்தனையும், எந்த செயல்பாடும் இல்லாமல் இருப்பது. அத்தகைய கணக்குகள் இன்ஆக்டிவ் கணக்குகளாக வகைப்படுத்தப்பட்டு, இந்த வகை வங்கிக் கணக்குகளும் மூடப்படும்.
மூன்றாவதாக ஜீரோ பேலன்ஸ் வங்கிக் கணக்கு என்பது, நீண்ட காலமாக எந்தத் தொகையும் டெபாசிட் செய்யப்படாமல் இருப்பதோடு, அந்த வங்கிக் கணக்கில் இருப்பு பூஜ்ஜியமாக இருக்கும் கணக்கு. இந்த வகை கணக்கில் எவ்வித பரிவர்த்தனையும் இல்லையென்றால் அந்த வங்கிக்கணக்கு ரத்து செய்யப்படும்.
செயலற்ற கணக்குகளை மூடுவதன் மூலம், மோசடி மற்றும் அதன் தவறான பயன்பாடு தொடர்பான அபாயங்கள் குறைக்கப்படும் என்றும், செயல்படாத கணக்குகளை மூடுவதன் மூலம் வங்கிகள் தங்கள் மேலாண்மையை மேம்படுத்திக்கொள்ளும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.