பள்ளிகளில் அடிப்படை வசதியின்மை காரணமாக மாற்றுத்திறனாளி மாணவர்களின் இடைநிற்றலை தடுக்க ஒன்றிய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என மக்களவையில் தி.மு.க MP ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து மக்களவையில் பேசிய ஆ.ராசா MP, ”பள்ளிகளில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ஏற்ற முறையான கழிவறைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் படிப்பை பாதியில் கைவிடும் குழந்தைகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகமாகிறது.
இதை தடுக்க ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள், மேற்கொள்ளவிருக்கும் திட்டங்கள் மற்றும் அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள் பற்றிய வெளிப்படையான அறிக்கையை வெளியிட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல், நாட்டில் வேலை வாய்ப்பை அதிகரிக்க வேலைவாய்ப்பு மையங்கள் மூலம் திறன் மேம்பாடு திட்டங்களை ஒன்றிய அரசு வழங்குவது குறித்து திருவண்ணாமலை திமுக எம்.பி. சி. என். அண்ணாதுரை மக்களவையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து பேசிய அண்ணாதுரை, ”இளைஞர்களுக்கு வழிகாட்டும் வகையில் வேலைவாய்ப்பு மையங்கள் மூலம் கடந்த மூன்று ஆண்டுகளில் நடத்தப்பட்ட தொழில் திறன் மேம்பாடு மற்றும் ஆலோசனைத் திட்டங்கள், வேலைவாய்ப்பு மையங்கள் மூலம் வழங்கப்பட்ட வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை,
நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பு மையங்களின் செயல்திறனை ஒப்பிடும் ஆய்வறிக்கை மற்றும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட விளிம்புநிலை மக்கள் வேலைவாய்ப்பு மையங்கள் மூலம் முழுமையாக பயனடைவதை உறுதிசெய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போன்றவவைகளின் விவரங்களை அரசு வெளியிட வேண்டும்" கோரிக்கை விடுத்துள்ளார்.