இந்தியா

”கார்ப்பரேட்களின் கடன்களை தள்ளுபடி செய்யும் விவசாய விரோத ஒன்றிய அரசு” : ராணி ஸ்ரீகுமார் MP காட்டம்!

விவசாயிகள் கடனில் தத்தளிக்கையில் கார்ப்பரேட்களின் கடன்களை தள்ளுபடி செய்யும் விவசாய விரோத ஒன்றிய அரசு என மக்களவையில் ராணி ஸ்ரீகுமார் MP காட்டமாக பேசியுள்ளார்.

”கார்ப்பரேட்களின் கடன்களை தள்ளுபடி செய்யும் விவசாய விரோத ஒன்றிய அரசு” :  ராணி ஸ்ரீகுமார் MP காட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இன்றை நாடாளுமன்றத்தில் வங்கி சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2024 மீது விவாதம் நடைபெற்றது. இதில் தென்காசி தொகுதி தி.மு.க எம்.பி ராணி ஸ்ரீகுமார் பங்கேற்று உரையாற்றினார்.

அதன் விவரம் வருமாறு:-

மக்களவையில் ஒன்றிய அரசு அளித்த பதில்களின் படி, கடந்த 10 ஆண்டுகளில் சுமார் ரூ.16.26 லட்சம் கோடி வங்கிக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

அவற்றில் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட கடன்கள் ரூ. 7.4 லட்சம் கோடி. பொதுத்துறை வங்கிகளின் வருடாந்திர தள்ளுபடிகள் 2013ல் ஆண்டுக்கு ரூ.7,187 கோடியில் இருந்து 2023ல் சுமார் 1.2 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

வங்கிகள் கடன் தள்ளுபடி செய்வது வழக்கமான நடவடிக்கையின் ஒரு பகுதியாகும் என்று கூறி அரசாங்கம் தள்ளுபடியை நியாயப்படுத்தியது.

எந்தவொரு வங்கியின் மொத்தக் கடனில் ஆறு சதவீதத்தை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும், அதேசமயம் பல தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் குறிப்பாக தனியார் வங்கிகள் இந்த விதியை முழுமையாகப் பின்பற்றவில்லை.

இது தேசத்திற்கு உணவளிக்கும் விவசாயிகளுக்கு எதிரான பாரபட்சம் இல்லையா?. விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும், கார்ப்பரேட் நிறுவனங்களின் ரூ. 7.4 லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்ய தயங்காத இந்த அரசு, விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய மறுத்து வருவது இந்த ஒன்றிய அரசு எப்போதும் விவசாயிகளுக்கு எதிரான அரசு என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது.

தமிழ் நாட்டில் முதலமைச்சர் முக. ஸ்டாலின் ஆட்சியில் தமிழக அரசு கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ. 7,000 கோடி விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. கிட்டதட்ட 35.85 லட்சம் கோடி வட்டியில்லா கடன் விவசாயிகளுக்காக 2021 மே முதல் டிசம்பர் 2023 வரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் வட்டியில்லாக் கடன்களை தமிழ் நாடு அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது என்பதை நினைவூட்டுகிறேன் கல்விக் கடனை நலத் திட்டமாகக் கருதி, கல்விக் கடனுக்கான வட்டியை ரத்து செய்ய வேண்டும்.

அதேபோல் வேலை கிடைப்பதற்கு முன் கடனை திருப்பிக் கேட்ககூடாது எனும் கோரிக்கையை ஒன்றிய அரசு பரிசீலிக்க வேண்டும். மாணவர்களின் நலனுக்காக கல்விக் கடன் வழங்கும் செயல்முறை எளிமைப்படுத்தப்பட வேண்டும்.

குடிமக்கள் தங்கள் சொந்தக் கணக்கில் இருந்து ஏடிஎம் மூலம் பணம் எடுப்பதற்கு அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை அவர்கள் உயர்த்தியுள்ளனர். எஸ்எம்எஸ்களுக்கும் கட்டணம் வசூலிக்கின்றனர். மக்கள் தங்கள் சொந்த பணத்தை எடுப்பதற்கு ஏன் தண்டக் கட்டணம் செலுத்த வேண்டும்?

டிஜிட்டல் மயமாக்கல் அதிகரிப்பால், பல பாதுகாப்பு சிக்கல்கள் ஏற்பட்டிருக்கின்றன. ரிசர்வ் வங்கியின் சமீபத்திய ஆர்டிஐ பதிலில், சைபர் மோசடி வழக்குகளின் எண்ணிக்கை 2023 நிதியாண்டில் 75,800 வழக்குகளில் இருந்து 2024 நிதியாண்டில் 2,92,000 வழக்குகளாக அதிகரித்துள்ளது என்றும், சுமார் 2024ஆம் நிதியாண்டில் மட்டும் இதுவரை இணைய மோசடிகளால் 2,056 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டிருக்கிறது.

ஆன்லைன் மோசடிகளால் அதிகம் பாதிக்கப்படுவது மூத்த குடிமக்கள்தான். மோசடி செய்பவர்கள் குறிப்பாக வயதானவர்களை குறிவைப்பதாக பல வழக்குகள் உள்ளன. சைபர் மோசடிகளில் இருந்து முதியவர்களை பாதுகாக்க சிறந்த இணைய பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.

கிராமப்புறங்களில், ஏடிஎம்கள் வங்கிகளுக்குள் அமைந்துள்ளன. எனவே, மாலை 6 மணிக்கு வங்கி மூடப்பட்டால், மக்கள் ஏடிஎம் வசதியையும் இழக்கின்றனர். இது கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு கடுமையான சிக்கல்களை உருவாக்குகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

banner

Related Stories

Related Stories